”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்


அருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம்.... மேலும், அவர் தொகுத்துள்ள தி.ஜா. சிறுகதைகளின் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரையை மீள் பதிவாக இங்கு அளிக்கிறோம்.....-  அழகின் சிலிர்ப்பு   -

1.  காலம் கனிந்து அளித்த கொடை' என்ற வாசகம் பொதுவாக எல்லாக் கலைகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். ஆனால் தி. ஜானகிராமன் கதைகளை ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் இந்த வாசகத்தை  அவரது சிறுகதைக் கலைக்கு அழுத்தம் கொடுக்கும் பிரத்தியேக வாக்கியமாகவே புரிந்து கொள்ளத் தோன்றியிருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளலுக்கு 'கொட்டு மேளம் ' தொகுப்பைப் பற்றி க.நா. சுப்ரமணியம் தனது 'படித்திருக்கிறீர்களா? ' நூலில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் , ஒருவேளை காரணமாக இருக்கலாம். '1946 க்குப் பிந்திய இலக்கியத் தேக்க காலத்திலே தோன்றிய நல்ல ஆசிரியர் என்று தி. ஜானகிராமனைச் சொல்ல வேண்டும். சூழ்நிலை, இன்றைய வேகம் இரண்டையும் எதிர்த்து நீச்சுப் போடுவதென்பது சிரமமான காரியம். இந்தக் காரியத்தை இலக்கியபூர்வமாகவும் ஒரு அலக்ஷிய பாவத்துடனும் செய்திருக்கிறார் தி. ஜானகிராமன் ' . இவை க.நா.சுவின் வரிகள்.

க.நா.சு. வரையறுத்துச் சொல்லும் காலப்பகுதி நவீன இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.  மறுமலர்ச்சி எழுத்துக்களின் களமாக இருந்த மணிக்கொடி இதழ் தனது மூன்று கட்டச் செயல்பாடுகளுக்குப் பின்னர்  ஏற்கனவே 'ஜீவன் முக்தி' அடைந்து விட்டிருந்தது.  மணிக்கொடி மூலம் தமது சாதனைப் படைப்புகளை வெளியிட்டிருந்த சிறுகதை ஆசிரியர்கள் பலரும் களம் நீங்கியிருந்தார்கள். கு.ப.ராஜகோபாலன் காலமாகி விட்டிருந்தார். புதுமைப்பித்தன் திரைப்பட முயற்சிக்காகப் புனே வாசியாகிருந்தார். அபூர்வமாகவே கதைகளை எழுதிய மௌனியும் இடைவேளை எடுத்துக் கொண்டிருந்தார்.வேறு பலரும் தமது முன்னாள் சாதனைகளுக்காகவே பேசப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.புதிய சலனங்கள் இல்லாமல் மந்தகதியில் நகர்ந்து கொண்டிருந்த இலக்கியப் போக்கையே தேக்க காலம் என்கிறார் க.நா. சு. இந்தப் போக்கில் புது வேகத்தை ஏற்படுத்திய ஒன்றாகவே தி. ஜானகி ராமனின் வருகையை அறிவிக்கிறார். இது மிகச் சரியான இனங்காணல்தான் என்பதை  ஜானகிராமனின் சிறுகதைகள் நிறுவின. 'தனித் தன்மையும் உணர்ச்சி நிறைவும் தெறிப்பும்'  கொண்ட கதைகள் மூலம் அவர் தமிழ்ச் சிறுகதை மரபைப் புதிய திசைக்கு  நகர்த்தினார்.  இந்த முன்னெடுப்பில் தி. ஜானகிராமனுடன் இன்னொரு பெயரையும் இணைக்கலாம். லா.ச.ராமிருதம். க.நா.சு. குறிப்பிட்ட தேக்கத்தை இவ்விருவருமே உடைத்தார்கள்; இரு வேறு முறைகளில்.

தி. ஜானகிராமனின் முதல் தொகுப்பான 'கொட்டு மேளத்'தில் இடம் பெற்றிருக்கும் கதைகளை வைத்தே அவரது சிறுகதைப் பங்களிப்பை க.நா.சு. பாராட்டுகிறார். தொகுப்பில்இடம் பெற்றுள்ளவை  1946  முதல் 53 ஆம் ஆண்டு வரையிலான எட்டு ஆண்டுகளில் எழுதிய கதைகள். அவற்றில் தேர்ந்த சிறுகதையாளனின்  அடையாளம் துலக்கமாகப் புலப் படுகிறது. தொகுப்பிலுள்ள கதைகளில் காலவரிசைப்படி பழமையானது ' பசி ஆறிற்று' என்ற கதை. 'கலாமோஹினி' இதழில் 1946 ஆம் ஆண்டு வெளியானது.  ஜானகிராமனின் பிற்காலக் கதைகளில்  காணக் கிடைக்கும் தனித்துவமான அழகும் ஆழ்மன விசாரமும் வெளிப்படும் நேர்த்தியான கதை இது. இந்தக் கதை வெளியான ஆண்டைத்தான் தேக்க உடைப்பின் காலமாகக் க.நா.சு. கணிக்கிறார் என்று யூகிப்பது ஒருவகையில் பொருத்தமானது.

ஜானகிராமனின் தனித்துவம் இலக்கண சுத்தமாகத் தென்படும் முதல் கதையாக 'பசி ஆறிற்று' கதையையே முன் வைக்க  விரும்புகிறேன். இந்தக் கதையில் கூடியிருக்கும்  இலக்கண ஒழுங்குக்கு வருவதற்கு முன்பே அவரது ஏழு கதைகள் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன. தொகுப்புகள் எதிலும் சேர்க்கப்படாத இந்தக் கதைகள்  சோடையானவை அல்ல. வாழ்வையும்  இலக்கியத்தையும் குறித்த அவருடைய ஆதாரமான அக்கறைகளை இந்தக் கதைகள் ஓரளவுக்கு முன்னறிவிக்கின்றன. 'மணச் சட்டை' என்ற கதையில் வரும்  கனோரா அரசியின் பெண்மைச் சாகசத்தைப் பிற்காலக் கதையான 'சிவப்பு ரிக்‌ஷாவிலும் பார்க்க முடியும்.இரண்டுக்கும் காலப் பின்னணி வேறு. ஆனால் கதையில் தெரியும் மனத்தளம் ஏறத்தாழ ஒன்றுதான். 'மன்னித்து விடு' கதையில் வெளிப்படுவது தானறியாமல் இழைத்து விட்ட குற்றத்துக்காக மனம் கொள்ளும் தத்தளிப்பும் பரிகார முனைப்பும். இதுவே  அவரது பிற்காலச் சிறந்த  கதைகளில் ஒன்றான 'கண்டாமணி'யின் கதை மையமும். ஒரு படைப்பாளியாக தி.ஜானகிராமன் தன்னியல்புடனும் அநாயாசமான மேதைமையுடனும் வெளிப்படுவது சிறுகதைகளில்தான். 

சிறுகதைகள் வெளிவரத் தொடங்கிய அதே நாட்களில்  நாவலையும் ஒரு கைபார்க்க, ஜானகிராமன் முயன்றிருக்கிறார். அவரது முதல் நாவலான 'அமிர்தம்' 1944 இல் 'கிராம ஊழியன்' இதழில் தொடராக எழுதப்பட்டு 48 இல் புத்தகமாக வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு வருவதற்கு முன்பே நாவல் வெளிவந்திருக்கிறது. அவரை முதன்மையாக ஒரு நாவலா சிரியராகவே முன்னிருத்தி வந்ததன் காரணம் இந்த அறிமுகமாக இருக்கலாம். சற்று அத்துமீறிச் சிந்தித்தால் அவரே  நாவலாசிரியராகத் தான்  அறியப்பட விரும்பி இருப்பார் என்றும் தோன்றுகிறது. அவர் காலத்திய எழுத்து முன்னோடிகளான புதுமைப்பித்தனும் கு.பா.ராவும் அப்படி அறியப்பட விரும்பினார்கள். ஆனால் அவர்களது நாவல் முயற்சிகள் பலிதமாகாத குறைக் கனவுகளாகவே மிஞ்சின. ஜானகிராமனின் நாவல் முழு வடிவை எட்டியது; எனினும் அதுவும் ஒரு சிதைவுற்ற கனவுதான். 'அது ஆசைக்கு எழுதிப் பார்த்தது. அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை' என்று நேர்ப் பேச்சில் அவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

நாவலில் அவரது தோல்விகளை எளிதாகச் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அவரது மாற்றுக் குறைவான சிறுகதைகளையும் தோல்வி என்று குறிப்பிடுவது கடினம். அவற்றைப்பாதியில் நிறுத்தப்பட்ட அல்லது முழுமை கூடாத சித்திரங்கள் என்றே சொல்ல முடியும். அவரது தனித்துவம் தென்படும் ஏதாவது கூறு  கதைகளில் நிச்சயம் இருக்கும்.  'பாப்பாவுக்குப் பரிசு' அந்த வகையிலான கதை. குழந்தையின் வெகுளித்தனமான சாட்சியம் ஒரு திருடனை தண்டனைக்குள்ளாக்குகிறது. அவன் நையப்புடைக்கப் படுகிறான். தவறை ஒத்துக் கொள்கிறான். தவறை ஒத்துக் கொண்டவனைத் தண்டிப்பதை பாப்பா விரும்புவதில்லை.அவன் மீது ஏற்படும் இரக்கத்தால் தனது தீரத்துக்குப் பரிசாக வழங்கப் பட்ட பட்டுச் சட்டையைப்  புறக் கணிக்கிறாள். மிகச் சாதாரணமான இந்தக் கதை ஜானகிராமனின் கைப் பக்குவத்தால் சுவாரசியமான வாசிப்புகுரியதாகிறது. கதைப் பொருள் களங்கமில்லாத மானுடக் கரிசனத்தை வெளிப்படுத்தும் எளிய பிரகடனமாகிறது. இந்த மானுடப் பரிவே தி. ஜானகிராமன் கதைகளின் பொது இயல்பு எனலாம்.

இலக்கிய உரையாடல்களில் தி.ஜானகிராமன் தமிழின் முதன்மையான நாவலாசிரியர்களில் ஒருவராகவே பேசப்படுகிறார். உண்மை. பிற இந்திய மொழிகளில் புகழ் பெற்ற எந்த நாவலுக்கும் ஈடுநிற்கும் நாவலை ( மோக முள் ) எழுதியவர். இதுவும் உண்மை. இந்த இரு உண்மைகளின் வெளிச்சத்தில் தமிழ்ச் சிறுகதையில் கலாபூர்வமான சாதனைகள் நிகழ்த்தியவர்  என்ற அகல் வெளிச்சம் மங்கலாகவே புலப்படுகிறது. அவரது நாவல்துறைச் சாதனைக்குச் சற்றும் குறைந்ததல்ல சிறுகதைகளில் நிகழ்த்தி யிருக்கும் சாதனை. ஒரு செவ்வியல் படைப்பாளர் என்ற நிலையில் நாவலை விடவும் ஒரு மாற்று உயர்வானது என்பது என் எண்ணம். இந்தக் கருத்து  தமிழ் இலக்கியச் சூழலில் வலியுறுத்திச்  சொல்லப் பட்டதும் கூட.  முன்னுரையின் ஆரம்பப் பகுதியில் மேற்கோள் காட்டப்படும் க.நா.சு.வின் வாசகங்கள் வலியுறுத்தலின் தொடக்கம். தனது இலக்கிய முன்னோடிகள் வரிசைத் தொடரின்  மூன்றாவது நூலான 'சென்றதும் நின்றது'மில்  தி.ஜானகிராமனைக்குறித்த பகுதியில் ஜெயமோகன் 'தி.ஜானகிராமனின் சிறுகதைகளே கலைஞனாக அவரைத் தமிழில் நிலைநிறுத்துபவை' என்று குறிப்பிடுகிறார்.  ஜானகிராமன் மறைந்து கால் நூற்றாண்டுக்குப் பின்பு எழுதிய கட்டுரையில் ( ஜானகிராமன் அனுப்பிய தந்தி - தி ஹிந்து ஞாயிறுப் பதிப்பு 9 மார்ச் , 2008 ) அசோகமித்திரன் ' ஜானகிராமனின் களம் சிறுகதைதான்' என்று குறிப்பிடும் வாசகத்திலும் இந்த வலியுறுத்தல் தென்படுகிறது.

2.  தி. ஜானகிராமனின் படைப்பு ஆளுமையை வார்த்தெடுத்தவை, அவருக்கு இருந்த வடமொழிப் புலமையும் ஆங்கிலக் கல்வியும் எனலாம். கல்லூரிப் பருவத்தில் வாசிக்கக் கிடைத்த  நவீன ஆங்கிலப் படைப்புகளும் மறு மலர்ச்சிக் காலத் தமிழ் இலக்கியங்களும் அவரைத் தூண்டி விட்டன. அதே பருவத்தில் கு.ப.ரா.வுடன் ஏற்பட்ட நெருக்கம் படைப்புச் செயல்பாட்டுக்கு உந்துதல் அளித்தது. கு.ப.ராவைத் தனது 'வழிகாட்டி' என்றே அவர் பெருமைப் படுத்துகிறார் . இந்த நெருக்கத்தால்தான் அவர்   கு.ப.ரா.வின் மரபைச்  சேர்ந்தவராக  அடையாளப்படுத்தப்படுகிறாரா? இருக்கலாம். ஆண் பெண் உறவுச் சிக்கல், பெண்ணின் உளவியல் குறித்த அலசல், காமத்தின்  ஸ்வர பேதங்கள் ஆகிய கருப்பொருள்களைக் கையாளுவதில் கு.ப.ரா.வின் பாதிப்பும்  தொடர்ச்சியும் ஜானகிராமனிலும் தென்படுகின்றன. எனினும் தனது வழிகாட்டியின் காலடியை விலகாமல் பின் தொடர்ந்தவர் அல்லர். அவரது ஆரம்பக் காலக் கதைகளிலேயே கு.ப.ரா.வை அணுகும் போக்கும் விட்டு விலகும் முனைப்பும் ஒருசேரத் தென்படுகின்றன. முன் சொன்ன 'பசி ஆறிற்று' கதையில் கு.ப.ரா.வின் வலுவான பாதிப்பைப் பார்க்க முடியும்.  டமாரச் செவிடான சாமிநாத குருக்களுக்கு வாழ்க்கைப் பட்ட அகிலாண்டத்தின்  வேட்கைதான் கதையின் உள் முரண். அடுத்த வீட்டு இளைஞன் ராஜத்தின் மீது அவளுக்கு ஈடுபாடு உருவாகிறது. அது பாலுணர்வுத் ததும்பலாக வழியும் தருணத்தில் அவன் வெளியூர் செல்கிறான். அகிலாண்டத்தின் வேட்கையை அவனது விலகல் கலைக்கிறது. அந்த மன வெறுமையை செவிட்டுக் கணவனின் பரிவு நிரப்புகிறது. உடலின் பசி தணிகிறது. பெண்ணின் பாலுணர்வுத் தத்தளிப்பைச் சொல்லும் இந்தக் கதை, கு.ப.ரா.வின் வரைகோட்டில் ஜானகிராமன் பூர்த்தி செய்த  ஓவியமாகவே தெரிவது வியப்புக்குரியது அல்ல. 'ஆற்றாமை' உட்பட கு.ப.ரா.வின் பல கதைகளிலும் இந்தக் கதைத் தருணத்தைக் காணலாம். தி. ஜானகிராமன் கு.ப.ரா.வை ஒட்டி நிற்கும் இடம் இது.

இன்னொரு கதைக் களத்திலும் இருவரையும் பொதுமைப் படுத்தலாம். வரலாறு, இதிகாசம், தொன்மம் ஆகியவற்றைப் பின்புலமாக வைத்து உருவான கதைகளை இருவரும் எழுதியிருக்கிறார்கள். இந்தப் போக்கு  அன்றைய இலக்கிய நடைமுறை சார்ந்த ஒன்று.  பழங்கதைகளின் ஏற்றுக் கொள்ளப் பட்ட மதிப்பீடுகளை மறு விசாரணைக்கு உட்படுத்தும் கதைகளை மிக அதிக அளவில் எழுதியவர் கு.ப.ரா.அவரது 'காணாமலே காதல்' இத்தகைய கதைகளின் தொகுப்பு. 'மணச் சட்டை', 'ராஜ திருஷ்டி', 'ராவணன் காதல்', 'யதுநாத்தின் குரு பக்தி' 'அதிர்வு' முதலான  ஜானகிராமன் கதைகளை இந்த வகையானவை. இப்படியான ஒற்றுமையிலும் ஜானகிராமன் கதைகள் முன்னோடியான கு.ப.ரா.வை மீறிச் செல்கின்றன. இந்த வகையிலான கு.ப.ரா. கதைகள் நெருப்பின் சுடர்கள் என்றால்  ஜானகிராமன் கதைகள் தாவிப் பரவும் ஜுவாலைகள்.

ஆரம்ப காலக் கதைகளுக்குப் பின்பு, தனது தனிப் பாதை துலக்கமான நிலையில் ஜானகிராமன் உருவாக்கிய கதையுலகம் விரிவானது. கதைத் தளங்கள் வெவ்வேறானவை. தலைகீழாகச் சொல்வதென்றால் எண்ணிக்கையில் ஜானகிராமனுக்கு நிகரான கதைகளைக் கு.ப.ரா.வும் எழுதியிருக்கிறார். ஆனால் வழிகாட்டியின் கதைப் பரப்பு வரையறைக்கு உட்பட்டது. இரண்டே பிரதான வகையில் கு.ப.ரா. கதைகளை அடக்கி விடலாம். ஆண் பெண் உறவு சார்ந்த கதைகள், சமூக விமர்சனமாக அமைந்த கதைகள் என்ற இரண்டு வகையில். இவற்றிலும் முதல் வகைக் கதைகளே பெரும்பான்மையானவை. ஆண் - பெண் உறவுச் சிக்கலையும் காமத்தை யுமே அதிகமாக  எழுதினார் என்ற பாரபட்சமான விமர்சனத்துக்கு மாறான தாகவே தி. ஜானகிராமனின் கதையுலகம் அமைந்திருக்கிறது. அவரது நாவல்களுடன் பொருத்திப் பார்த்தால் இந்தக் கருத்து ஓரளவு சரியானதாக இருக்கலாம். ஆனால் அவரது சிறுகதைகள்  அவற்றின்  பொருள் விரிவால், கதா பாத்திரங்களின் பெருக்கத்தால் இந்தக் கருத்தை மிக எளிதாகப் புறந்தள்ளுகின்றன. சமூகத்தின் கோணல்களைப் பற்றியும் மனித மனத்தின் விநோதங்கள் குறித்தும் தார்மீக அக்கறைகளைச் சார்ந்தும் கலை மேன்மையும் அழகும் நிரம்பிய கதைகளை எழுதியவர் அவர். வாழ்வின் எல்லாத் தளங்களையும் தீண்டும் கதைகள் அவருடையவை. தனது வழிகாட்டியிடமிருந்து ஜானகிராமன் விலகும் இடம் இது என்பது என் கணிப்பு.

'கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பின் முன்னுரையில் அதன் பதிப்பாசிரியர் பெருமாள் முருகன் கு.ப.ரா.வின் கதைத் திறனை ' ஒரே இடத்தில் நின்ற படி நிகழ்த்தும் வாள் வீச்சாக' உருவகப்படுத்துகிறார். அவரைப் பின் தொடர்ந்த ஜானகிராமன் பல களங்களில் நின்று வாளைச் சுழற்றுகிறார் என்று குறிப்பிடலாம். இப்படிச் சொல்வது முன்னவரைத் தகுதி இறக்கம் செய்வதோ பின்னவரை சிகரத்தில் ஏற்றுவதோ அல்ல. காலமும் அனுபவங்களும் இருவரிடமும் செயல்பட்டிருக்கும் பாங்கைச் சுட்டிக் காட்டுவதுதான். தாய்ப் பாய்ச்சல்  எட்டு அடியென்றால் குட்டிக்குப் பதினாறு அடிதானே இலக்கணம். இலக்கியத்தில் முன்னேற்றம் என்பது இந்தப் பாய்ச்சல்தானே. 

3.  தி. ஜானகிராமனின் சிறுகதை ஆளுமை செவ்வியல்தன்மை கொண்டது என்பது என் அனுமானம். அவரது ஆரம்ப காலக் கதைகளில் ஒன்றான 'பசி ஆறிற்று' முதல் கடைசிக் கதை 'சுளிப்பு' வரையிலும் இந்தத் தன்மைகளைக் காணலாம். வடமொழி இலக்கியங்களில் பெற்ற அறிமுகம், தமிழ் இலக்கியங் களிலிருந்து பயின்ற விரிவு, பிறமொழி இலக்கியங்களிருந்து அடைந்த செய் நேர்த்தி இவை  கதைகளின் புற வடிவத்தையும் காலங்காலமாகப் போற்றப் பட்ட மானுட மதிப்பீடுகள்மீது கொண்ட நம்பிக்கை  கதைகளின்  ஆழத் தையும் நிர்ணயித்திருக்கிறது. இந்தக் கூறுகளால் ஆன படைப்பு மனம் இயல்பாகவே ஒரு பூரிதநிலையை எட்டியிருந்தது. அதில் மேலதிகமாக எதையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ அனுமதிக்காத முழுமையை அந்த மனம் கொண்டிருந்தது. காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக் கொள்வதுபோல காலத்தின் கசிவை அந்தப் படைப்பாற்றல் உள்ளிழுத்துக் கொண்டு தன்னை நிரந்தரப் புதுமையாகவும் வைத்துக் கொண்டிருந்தது என்றே நம்புகிறேன். இன்று வாசிக்கும்போதும்  தி.ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவை யாகவும் வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்து விடாததாகவும் இருப்பது இந்த குணத்தால்தான் என்று தோன்றுகிறது. இசை தொடர்பான ஒரு குறிப்பு மூலம் இதை விளக்கமாகப் பார்க்கலாம். ஜானகிராமனின் படைப்பு மனத்தை உருவாக்கியதில் இசைக்கும் பங்கு உண்டு என்பதனால் இந்த விளக்கம் பொருத்தமானதுதான்.

ஜானகிராமனின் ஆதர்சப் பாடகரும் நண்பருமான மதுரை மணி அய்யரின் இசையை செவ்வியல்தன்மை நிரம்பியது என்று சொல்வது சரி. அந்த இசை இலக்கண சுத்தமானது. அதே சமயம் இலக்கணத்தை மூடத்தனமாகப் பின்பற்றாதது. முழுமையான மனோதர்மத்துக்கு உட்பட்டது, அதே போல கேட்பவனின் மனத்துக்கும் இடமளிப்பது. மரபு சார்ந்தது. அப்படி இருக்கும் போதே மரபை மீறுவது. வெறும் உத்திகளில் நம்பிக்கை கொள்ளாதது. அதே வேளையில் வித்தியாசங்களைக் கொண்டது. இந்தக் காரணங்களாலேயே அது ஒரே நேரத்தில் ஜனரஞ்சகமானதாகவும் செவ்வியலானதாகவும் நிலை பெறுகிறது. இந்த விளக்கத்தில் இசையின் இடத்தில் இலக்கியத்தைப் பொருத்தினால் அது தி. ஜானகிராமனின் கதைக்கலையை எளிதாக  விளக்கிவிடும். 

செவ்வியல்தன்மையின் இன்னொரு கூறு அழகுணர்ச்சி. தமிழில் அழகுணர்ச்சி மேலிட எழுதப்பட்ட கதைகள் தி. ஜானகிராமனுடையவை. தனது எழுத்தை சௌந்தர்ய உபாசனை என்று சொன்ன லா.ச.ரா. நினைவுக்கு வருகிறார். ஜானகிராமனின் சக காலத்தவர். எனினும் அழகுணர்ச்சி குறித்த இரு எழுத்தாளர்களின் பார்வையும் வேறுபட்டவை. லா.ச.ரா. இயல்பிலேயே அழகானதை ஆராதனை செய்யும்போது ஜானகிராமன் தனது ஆராதனை வாயிலாகவே ஒன்றை அழகானதாக ஆக்குகிறார். பொக்கை வாயும் சருமமே தெரியாத அளவு முகச் சுருக்கங்களும் கொண்ட மூதாட்டி பார்வைக்குக் குரூபியாக இருக்கலாம். ஆனால் அந்த முகத்தை நுட்பமாகப் பதிவு செய்யும் ஓவியத்தையோ புகைப்படத்தையோ அழகில்லாதது என்று சொல்லுவ தில்லை. எதார்த்தத்தின் மீது கலையின் ஸ்பரிசம் பட்டு அழகானதாகிறது அந்த நகல். ஜானகிராமனின் கலையின் அடிப்படை இதுதான்.அதனாலேயே அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எதுவும் அழகானதாகவும் வெளிச்சம் நிரம்பியதாகவும் அமைகிறது. இது அவரது கதைகளுக்கு ஆழமான பொருளை அளிக்கிறது. ஜானகிராமன் கதைகளில் வரும் நிலம், மனிதர்கள், மரணம், ஏமாற்று, துரோகம், கீழ்மை, வியப்பு , தந்திரம், வன்மம், மூடத்தனம் எதுவும் வசீகரமானதாகவே தோன்றுகிறது. ஆனால் அந்த அழகின் ஆழத்தில் மனிதனின் ஆதார உணர்வுகளின் சிக்கல்களும் மோதல்களும் கிடக்கின்றன.  அழகை விரும்பி வாசிப்பவனுக்கு  கதை, ஜனரஞ்சக சுவாரசியமுள்ளதாகவும் ஆழத்தை உணர்பவனுக்கு இலக்கிய நுண்மை கொண்டதாகவும் ஆகிறது. இந்த ரசவாதத்தை தமிழ்ச் சிறுகதைகளில் வெற்றிகரமாகச் சாதித்தவர்களில் முக்கியமானவர்  ஜானகிராமன்.

4.   னது எழுத்துக்களைப் பற்றி தி. ஜானகிராமன் வெளிப்படையாகப் பேசிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. நாவல்களைப் பற்றியாவது ஓரிரு சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். அம்மா வந்தாள் நாவல் சர்ச்சைக்கு இலக்கான போதும் பத்திரிகைத் தேவைக்காக  நாவல் பிறந்த கதை என்ற விதத்தில் மோகமுள்ளைப் பற்றியும். .அதுவும் தவிர்க்க இயலாமல். ஆனால் கதைகள் குறித்து பேசியதில்லை. அவரது வாழ்நாளிலேயே முக்கியமான சிறுகதைகள் கொண்ட ஏழு தொகுப்புகளும் வெளிவந்திருந்தன. அவற்றில் அக்பர் சாஸ்திரி,  யாதும் ஊரே, பிடிகருணை ஆகிய மூன்று தொகுப்புகளுக்கு மட்டுமே முன்னுரைக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். அதுவும் தவிர்க்க முடியாமல். இந்த மூன்று குறிப்புகளிலும் அவர் வலியுறுத்திச் சொல்லும் வாசகம் 'இவையெல்லாம் இலக்கண சுத்தமான சிறுகதைகள் அல்ல' என்பது. தனது வாழ்க்கையில் தி. ஜானகிராமன் சொன்ன மாபெரும் பொய் இதுவாக இருக்க வேண்டும் என்று கதைகளை வாசிக்கும் எளிய வாசகனும் புரிந்து கொள்வான். சிறுகதை எழுதுவது எப்படி? என்ற கட்டுரையில் 'தனித் தன்மையும் உணர்ச்சி நிறைவும் தெறிப்பும்' இருப்பதுதான் சிறுகதை என்று வரையறுக்கிறார்.  அவரது எந்தக் கதையும் இந்த வரையறையை மீறுவதில்லை. கட்டுரையில் அவர் தொடர்ந்து சொல்லும் கருத்துகள் இவை: 

''எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்''.

இந்தக் கருத்துகளின் தூல வடிவமே அவரது சிறுகதைகள். அல்லது கதைகளின் சூக்குமமே இந்தக் கருத்துகள்.  தெளிவாகவும் திடமாகவும் இப்போது சொல்லும் இந்த வாக்கியத்தைத் தேசலான ரூபத்தில் நேரிடையாக அவரிடம் தயங்கித் தயங்கிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. தமிழில் மாற்றுச் சிந்தனை கொண்டவர்களின் பொது அமைப்பான  இலக்கு உருவாகி நடந்த முதல் கூட்டம். சென்னை வில்லிவாக்கத்தில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி முதலிரண்டு நாட்கள் நடை பெற்றது. கோவையிலிருந்து அதில் கலந்துகொள்ளச் சென்னை சென்றிருந்தபோது தி. ஜானகிராமனை முதன்முதலாகச் சந்தித்தேன். பெல்ஸ் சாலையில் இருந்த கணையாழி அலுவலகத்தில். அப்போது அவர் கணையாழியின் கௌரவ ஆசிரியர். காலை ஒன்பதரை மணிக்குத் தொடங்கிய சந்திப்பு நண்பகல் வரை நீண்டது. நண்பர்களான  ஆறுமுகமும் கோவை வாணன் என்ற துரையும் உடனிருந்தார்கள். மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு நாவல்களைப் பற்றித் தொடங்கிய உரையாடல் சிறுகதைகளில் மையங்கொண்டு நின்றது. தமிழ்ச் சிறுகதைகளின் தீவிர வாசகரான நண்பர் ஆறுமுகம் தி. ஜானகிராமனின் பிரசித்தி பெற்ற கதைகளைக் குறித்த சந்தேகங்க¨ளையும் மேன்மைகளையும் சொல்லிக் கொண்டிருந்தார். 'இதெல்லாம் ரொம்ப' என்ற சிரிப்புடனும்  மேற் கொண்டு பேச்சைத் தவிர்க்கும் நோக்கத்துடனும் ஜானகிராமன் ஒற்றை வார்த்தை ஆமோதிப்புகளுடனும் கேட்டுக்கொண்டிருந்தார். இடையில் புகுந்து அப்போது வாசிக்கக் கிடைத்திருந்த ஜானகிராமன் தொகுப்புகளில் இடம் பெறாமலிருந்த 'கடைசி மணி' கதை எனக்குத் தந்த பரவசத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். பேசி முடியும் வரை கேட்டுக் கொண்டிருந்த  ஜானகிராமன் புன்னகையுடன் ' அது நல்ல கதையா என்ன?' என்று சந்தேகம் தொனிக்கக் கேட்டார். எழுதுவது எப்படி கட்டுரையில் அவர் சொல்லியிருக்கும் சிறுகதைக்கான இலட்சணங்கள் அந்தக் கதையில் எப்படி வெளிப்படுகின்றன என்பதை அதிகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். 'எழுதியவனுக்குத் தெரியாத ஒன்று வாசகனுக்குப் புலப்பட்டால் அது நல்ல கதைதான். அப்படி ஒரு இடம் படிக்கிறவனுக்கு இருக்கிறது இல்லையா?'  அவர் அப்போது கேட்ட கேள்விக்கு எனக்கு உடனடியான விடை தெரியவில்லை. இப்போது வெளிச்சமாகப் புலப்படுகிறது. வாசிக்க வாசிக்க அதன் நுண் தளங்கள் வெளிப்படுகின்றன.

பள்ளிக்கூட கெமிஸ்டரி வாத்தியார் ஆராவமுதனுக்கு முப்பத்து நான்கு வருட சர்வீசில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக இருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஒரு நாள் ஹெட்மாஸ்டராக இருந்தது ஜில்லாவிலேயே நினைவிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய தைரியமின்மையையும் மீறி இரண்டாவது பீரியடோடு பள்ளிக்கு விடுமுறை விடுகிறார்.எளிய கதை. ஆனால் கதை சொல்லப்பட்ட விதத்தில் இயல்பாகவே துணைப் பிரதிகள் உள்ளே புகுந்து கொள்கின்றன. நிலவு கொட்டிக் கிடக்கும் இரவில் ஒரு வெள்ளை யானையின் மேலேறி தென்னை மரத்திலிருந்து காய் பறிப்பதாக ஆராவமுது காணும் கனவுடன் தொடங்குகிறது கதை. அது அவரது  ரகசிய ஆசையைச் சொல்கிறது. தன்னுடைய  அந்தஸ்துக்குக் குறைந்த தகுதி யிலிருக்கும் எவருடனும் பேசாத ஓய்வு பெற்ற அதிகாரியான பள்ளிச் செயலாளரைப் பற்றிய சித்தரிப்பில் ஆராவதுவின் பயமும் அதிகாரி பற்றிய பார்வையும் வெளிப்படுகிறது. ' ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் அந்த மனுஷ ஏணி வ¨ளைந்து படுத்திருந்தது' என்ற வரியிலேயே இருவரின் குணப் பதிவுகள் விளங்குகின்றன. ஒரு நாள் அதிகாரம் கிடைத்த தெம்பு மனைவியை விரட்டுகிறது. 'நீர்தான் இன் சார்ஜாமே இன்னிக்கு' என்று இளப்பமாகக் கேட்கும்  சக ஆசிரியர் ஆனைக்கால் கோபாலய்யரிடம் 'ஆமா, தலையெல்லாம் லீவு எடுத்துண்டா, என் மாதிரிக் காலுக்குப் பாரம் வந்து சேர்கிறது' என்று எதிர்ப் பேச்சாளரின் உடற் குறையைச் சுட்டிக் காட்டிக் கேலி செய்கிறது. அடுத்த கணம் கழிவிரக்கத்துடன் வருந்தும்போதே ஆராவமுது திக் விஜயத்தில் வெற்றி பெற்ற சக்கரவர்த்தி போலவும் தன்னை உணர்கிறார்.அதைக் கொண்டாடிக் கொள்ளவே விடுமுறையும் அறிவிக்கிறார். மனித மனத்தின் விநோதங்களை வாசகன் முன்னால் பகிரங்கப்படுத்துகிறது கதை. இவ்வளவு  நுட்பங்கள் வெளிப்படும் கதை நல்ல கதைதான் என்று அந்தச் சந்திப்பில் ஜானகிராமனிடம் சொல்ல முடியாமல் போயிற்றே என்று இப்போது ஏங்குகிறேன்.

பள்ளிப் பருவத்தில் படித்த 'கடைசி மணி' கதை மனதுக்குள் இத்தனை நீண்ட காலத்துக்குப் பின்பும் கலையாமல் இருக்கத் தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. கதை கல்கி தீபாவளி மலரில் வெளிவந்தது. அன்று கைக்குக் கிடைத்ததை வாசித்து மேலும் பசியுடன் தவித்த காலம். அம்மாவிடம் மன்றாடி வாங்கிய காசில் பள்ளி உணவு இடைவேளையில் ஓடிப் போய் முகவரிடமிருந்து மலரை வாங்கி வந்தேன். இடைவேளைக்குப் பிறகு கூடிய பள்ளி ஒரே வகுப்புடன் அன்றைக்கு முடிந்தது. வீடு திரும்பியதும் மலரில் வாசித்த முதல் கதை தி. ஜானகிராமனின் 'கடைசி மணி'தான். கதைச் சம்பவம் அந்த தினத்தின் எதார்த்தமாக இருந்ததை உணர்ந்த நொடியில் தெறித்துப் பரவிய பரவசம் வாழ்வின் பேரனுபவம். ஒருவேளை அந்த ரச வாதத்தின் பேரில்தான்  ஜானகிராமன் கதைகளை மதிக்கிறேன்போல. இலக்கியத்தின் விளைவு   என்று அன்று தீர்மானிக்கத் தெரியாமலிருந்த இந்த அனுபவம் பின்னர் அநேகமாக அவரது எல்லாக் கதைகளிலும் கிடைத்திருக்கிறது. கலையின் இந்த உயிர்ச் செயலை ஜானகிராமனே தனது ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றான 'செய்தி'யில் எடுத்துக் காட்டியிருக்கிறார் என்பதும் ஞாபகம் வருகிறது.

தி. ஜானகிராமனின் பெரும்பான்மையான கதைகள் அவரே வகுத்துச் சொல்லும் இலக்கணத்துக்குப் பொருந்துபவைதான். சிலகதைகளில் நூறு சதவீதப் பொருத்தம். சிலவற்றில் சதவீதக் குறைவு. அவருடைய உவமையை மேற்கோளாக வைத்துச் சொன்னால் ' மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற்போல விழுந்தவையும்  பூசினாற்போல விழுந்தவையும்'.  கத்தரித்த நிழல்போல விழுந்தவை அவருடைய சிறந்த கதைகள். பூசினாற் போல விழுந்தவை மற்றவை. ஆனால் எந்தக் கதையும் அவரது தனித் தன்மையைக் கொண்டிராதவைஅல்ல.

5.   தி. ஜானகிராமன் படைப்புகள் குறித்த சிந்தனையில் கூறியது கூறலாக மனதுக்குள் வரும் வாசகம் ' அவர் நவீனத்துவர் அல்ல' என்பது. சிறு கதைகளைப் பற்றி யோசிக்கும்போது கூடுதலான அழுத்தத்துடன் இந்த வாசகம் நினைவில் மிளிர்கிறது. அவரது மனப் பாங்கும் படைப்புமுறையும் மரபு சார்ந்தவை. ஆனால் மரபை மீற வேண்டிய தருணங்களில் தன்னிச்சை யாகவே அவை விடுதலை பெற்று விடுகின்றன. மனித சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டையாக இல்லாதவரை மரபை ஏற்றுக் கொள்கிறார். அது தடையாக முன் நிற்கையில் மிக இயல்பாக மீறுகிறார்.

ஜானகிராமனின் வாழ்க்கை சார்ந்தும் படைப்பு சார்ந்தும் இதை விளக்க முடியும். ஜானகிராமன் நினைவு கூரலாக எழுதிய கட்டுரையில் கரிச்சான் குஞ்சு தனி வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றைச் சொல்லுகிறார். அதில் ஒன்று ஜானகிராமன் சகோதரியின் மறுமணம். ''அவனுடைய இளைய சகோதரி மூத்த ஸகோதரியின் புருஷரையே மணக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தபோது அவர்கள் குடும்பத்தில் அது பெரிய குழப்பத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடந்து பொறுமினான் இவன். தந்தையாரிடம் இருந்த மரியாதையால் அடங்கினான். ஆனால் பிற்பாடு அந்த ஸகோதரிகள் இருவருடைய கணவனாய் இருந்தவர் இறந்த பத்தாவது நாள் கழுத்தில் புடவை போடுவது வேண்டாமென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து துடிதுடித்தான். புரோஹிதர் வயதானவர் ஒருவரைத் திட்டியும் விட்டான். அப்போது சமாதானம் செய்யப்போன என்னையும் அடித்துவிட்டான்''. இந்த தார்மீகக் கோபத்தை அவரது முதன்மையான சில கதைகளில் பார்க்கலாம். குறிப்பாக 'சண்பகப் பூ' சிறுகதையில். கணவனை இழந்த பதினெட்டு வயது மனைவி. ஆனால் அந்த இழப்பை அவள் பொருட் படுத்துவதில்லை. சுற்றி இருப்பவர்கள் சுட்டிக் காட்டியும் தன்னை அலங்கரித்துக் கொண்டு நடமாடுகிறாள். உச்ச கட்டமாகக் கணவனின் தமையனுடன்  'நாணம் பூக்க' வண்டியேறுகிறாள். மரபை மீறிய ஒரு வாழ்க்கைக் கணத்தை விரித்துச் சொல்லுகிறது கதை. இன்று இந்தக் கதைக்குக் காலப் பொருத்தம் இல்லை. ஆனால் கதையின் மையத்துக்கு காலத்தை மீறிய இசைவு இருக்கிறது. அன்று விதவை மறுமணத்துக்கு வாதிட்ட கதையை ஒரு பெண் தன் வாழ்க்கையைத் தானே தேர்ந்து கொள்ளும் உரிமை சார்ந்த ஒன்றாகப் பார்க்கும்போது சம காலத்தியதாகப் பொருள் படுகிறது.   இது அவரது மனப்பான்மையை எடுத்துக் காட்டும். அவரே தன்னை விலக்கப் பட்டவனாகவும் ( பிரஷ்டனாக) விலக்கப்பட்டவர்களின் சார்பாளனாகவும் அறிவித்திருக்கிறாரே. 'நல்ல கலை பிரஷ்டர்களிடமிருந்துதான் தோன்றுகிறது'  என்று பிரகடனமும் செய்திருக்கிறாரே.

சிறுகதைகளின் வடிவத்திலும் கூறுமுறையிலும் ஜானகிராமன் நவீனத்துவத்தின் இயல்புகளைக் கையாள மறுத்தவர். எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவை அவரது கதைகள். கச்சிதமானவையாக இருக்கும் அதே நேரத்தில் உள் விரிவுகள் கொண்டவை. அவரைச் செவ்வியல் கதைஞர் என்று வகைப்படுத்த இதுவே காரணம். ஏறத்தாழ ஒரே மாதிரியான வடிவத்திலேயே கதைகளை எழுதியிருக்கிறார். புதுமை என்றோ நவீனம் என்றோ சொல்ல முடியாத செவ்வியல் வடிவமே அவற்றில் காணக் கிடைப்பவை. காலத்தின் நகர்வில் களிம்பேறிப் போகும் செவ்வியல் அல்ல; மாறாக பழைய இலக்கியங்களில் தென்படும் சிரஞ்சீவிப் புதுமை கொண்டவை. உத்திகள் மூலம் கதைகளை முன்வைப்பது அவருக்கு உவப்பில்லாத செயல். பூரிதநிலையில் இருக்கும் அவரது படைப்பு மனம் அவற்றைப் புறக்கணிக்கிறது. சமயங்களில் அவற்றைக் கேலியும் செய்கிறது. 'கருங்கடலும் கலைக் கடலும்' என்ற பயண நூலில் அதி நவீனரான பிரான்ஸ் காஃப்காவின் கதைகளைக் குறித்து  வெளிப்படுத்தும் கிண்டலும் நவீன ஓவியங்கள் பற்றிய அணுகுமுறையும் இந்த செவ்வியல் மனதின் நிராகரிப்புகள்தாம்.

நூற்றுச் சொச்சம் வரும் கதைகளில் வித்தியாசமான கூறுமுறைகளில் எழுதப்பட்டவை பத்துக்கும் குறைவே. தன்மைக் கூற்றிலும் படர்க்கைக் கூற்றிலுமான நேரடியான கதையாடல் கொண்டவை , துணைப் பாத்திரங்கள் மூலம் முன்வைக்கப்படுபவை, உரையாடல் மூலம் நிகழ்த்தப்படுபவை, கடிதங்கள் மூலமாக விரிபவை என்ற நான்கு முறைகளிலேயே பெரும்பான்மையான கதைகள் அமைந்திருக்கின்றன. விமர்சன அடிப்படையில் வரையறுத்தால் ஜானகிராமனின் கதைகள் அவரே உருவாக்கிய சூத்திரங்களுக்கு உட்பட்டவை.'ஆரம்பம், இடை, முடிவு ஆகியவை தெளிவாகத்தான் இருக்க வேண்டும் ' என்பதில்லை என்பது அவரது கருத்து. அதை ஏறத்தாழ எல்லாக் கதைகளிலும் பின்பற்றி யிருக்கிறார்.இடைப் பகுதியில் ஆரம்பித்து முன்னும் பின்னுமாகச் செல்லும் கதையாடலையே அதிகமாகக் காணலாம். ஒருவேளை இது அவரது இசை ரசனையின் தூண்டுதலாக இருக்கலாம். அனுபல்லவியிலிருந்தோ சரணத்திலிருந்தோ தொடங்குவதன் மூலம் கேட்பவனுடன் சட்டென்று ஒன்றி விடும் இசைக் கலைஞனின் அநாயாசத் திறனுடன் இதை ஒப்பிட முடியும். விஸ்தாரமான ஆலாபனையோ ராகத்தை இடை நிறுத்தி மேற்கொள்ளும் ஸ்வரப் பிரஸ்தாரங்களோ இல்லாமல் கீர்த்தனையை மட்டுமே பாடுவது போன்ற செயலைத்தான் கதையில் ஜானகிராமன் கையாண்டது போலப் படுகிறது. ஒரு கீர்த்தனைக்கு அமைந்திருக்கும் கச்சிதவடிவத்தை அவருடைய கதைக்குப் பொருத்தலாம். அது ஒரு திட்டமிட்ட வடிவம். சூத்திரப்படியான வடிவம். அது மறைமுகமாக செவ்வியல் முழுமையின் அடையாளம் கூட. ஜானகிராமனின் வீச்சுக் குறைவான சிறுகதை கூட வடிவ ஒருமை கொண்டிருப்பது இந்தச் செவ்வியல்தன்மையால்தான். அவரது கதைகள் எதுவும் பலமுறை திருத்தி எழுதப்பட்டவையாகத் தோன்றுவதில்லை. எடுத்த எடுப்பிலேயே முழுமை கூடிய ஒரு உருவம் அமையப் பெற்றவையாகவே தெரிகின்றன. அவற்றில் மூளியானவை குறைவுதான்.

6.  செவ்வியல்தன்மை கொண்டது ஜானகிராமனின் படைப்புகள் என்பதை நிறுவ உதவும் பெரும் சான்று படைப்புகளில் அவர் வெளிப்படுத்தும் உலகம். மிகப் பரந்தது அந்த உலகம். வெவ்வேறு நிலக் காட்சிகள் கொண்டது. அவருடைய ஆகச் துயரமான கதைகளில் கூட அந்த உலகம் பிரகாசமானதாகவே இருக்கிறது. எடுத்துக் காட்டாக இரண்டு கதைகளை ஒப்பிடலாம். புதுமைப் பித்தனின் மகத்தான சிறுகதையான 'செல்லம்மாள்'; தி, ஜானகிராமனின் குறிப்பிடத் தகுந்த கதையான ' வேண்டாம் பூசனி'. இரண்டும் வெவேறு கதை நிகழ்வுகள் கொண்டவை. ஆனால் மரணத்தின் பின்புலத்தில் நிகழ்பவை. 'செல்லம்மாளுக்கு அப்போதுதான் மூச்சு ஒடுங்கியது 'என்று மரண அறிவிப்புடன் முதல் கதை தொடங்குகிறது. 'பாட்டிக்குக் கைகால்கள் எல்லாம் வீங்கி விட்டன. ரத்தம் இல்லாத குறைதான்' என்ற மரணத்துக்குக் காத்திருக்கும் அறிகுறியுடன் இரண்டாவது கதை ஆரம்பமாகி பாட்டியின் சாவில் முடிகிறது. இரண்டிலும் சித்தரிக்கப்படும் பின்னணி மரணத்தையும் அதையொட்டிய நினைவுகளையும் சார்ந்தவைதாம். ஆனால் புதுமைப் பித்தனின் கை அந்தப் பின்னணியை இருளின் வர்ணத்தில் தீட்டிக் காட்டும்போது ஜானகிராமன் அதை வெளிச்சத்தின் நிறத்தில் வரைந்து காட்டுகிறார்.

இந்த அவதானிப்பு  தி.ஜானகிராமன் கதைகளில் மரணம் சித்தரிக்கப்படும் பொது அவதானிப்புக்கு இட்டுச் செல்கிறது. செண்பகப் பூ, நானும் எம்டனும், அக்பர் சாஸ்திரி, பரதேசி வந்தான், வெயில்,கோபுர விளக்கு, அத்துவின் முடிவு ஆகிய கதைகளில் மரணம் முக்கிய இடம் பெறுகிறது. ஆனால் அந்த மரணங்கள் அச்சுறுத்துபவையாகச் சித்தரிக்கப்படுவதில்லை. ஒரு பார்வையாளனின் வேடிக்கைக் கோணத்திலோ, குழந்தையின் பராக்குப் பார்க்கும் போக்கிலோ, கோமாளியின் நையாண்டியாகவோ,  தவிர்க்க முடியாத சங்கதி என்ற பெரும் போக்குடனோதான் இடம் பெறுகின்றன. மரண நிகழ்வை மிக இயல்பான ஒன்றாகவும் சற்றுக் கவித்துவமானதாகவுமே அவர் குறிப்பிடுகிறார். டாக்டர் உதவியில்லாமலே அக்பர் சாஸ்திரி மனிதன் செய்கிற கடைசிக் காரியத்தையும் செய்து விட்டார் ( அக்பர் சாஸ்திரி ) , ‘அம்மாவின் காதில் ஒன்றும் விழவில்லை. அம்மா கைலாசத்தில் சிவனாரின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் ( வேண்டாம் பூசனி ) –ஆகிய சித்தரிப்புகள் இதற்கு உதாரணங்கள். அவரது அக்கறையும் பரிவும் வாழ்வின் மீதுதான் ; அதன் விநோதங்கள் மீதுதான். அதை நடத்தும் மனிதர்கள் மீதுதான் என்பதையே இது வலியுறுத்துவதாகப் படுகிறது. அவரது கதையுலகம் மனிதர்களால் நிரம்பி இருப்பதும் இதற்கு அத்தாட்சி.

இது இன்னொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது.தி. ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய ஒரு விமர்சனம் , அவர் பிராமணக் கதை மாந்தர்களையே அதிகம் படைத்திருக்கிறார் என்பது. 'எனக்கு அம்மாமிகளைப் பற்றிதான் அதிகம் தெரியும். ஆத்தாள்க¨ளைப் பற்றித் தெரியாது. தெரிந்ததைத் தானே எழுத முடியும்' என்பதாக அந்தத் தூற்றுதலுக்கு  ஜானகிராமன்  மெனக்கெட்டுப் பதிலும் அளித்திருக்கிறார் . மொத்தமாகக்  கதைகளைப் பரிசீலிக்கும்போது அவருடைய ஒப்புதல் வாக்குமூலம் பொருத்தமற்றதாகத் தெரிகிறது. அம்மாஞ்சிகளையும் அம்மாமிகளையும் பாத்திரங்களாக வைத்து எழுதியதை விடவும் அய்யாக்க¨ளையும் ஆத்தாள்களையும் கதை மாந்தராக்கி எழுதியவையே அதிகம். இன்று அந்தக் கதைகளை எழுத நேரிட்டால் அவரைக் குறிவைத்துக் காத்திருக்கும் ஆபத்துகளை யோசிக்கும்போது அந்தக் கலைஞனின் துணிவு வியக்க வைக்கிறது. கலைக்கான எதார்த்தங்கள்தாம் சார்பு கொண்டவை. கலையின் செயல்பாடு சார்புகளை மீறியது என்று சொல்லலாமா? எல்லாப் பெருங் கலைஞர்களின் படைப்புகளைப் போலவே ஜானகிராமன் படைப்புகளும் 'சொல்லலாம்' என்றே ஆமோதிக்கின்றன.

7.   மிழ்ச் சிறுகதைகளில் மிகமிக  அதிகக் கதாபாத்திரங்கள் வரும் கதைகள் தி. ஜானகிராமனுடையது என்று படுகிறது. இதைச் சொல்லும்போதே ஒற்றைப் பாத்திரத்தை வைத்து புதுமைப்பித்தன் எழுதியிருக்கும் 'தெரு விளக்கு' நினைவுக்கு வருகிறது. அப்படியான செய்கையை ஜானகிராமனிடம் பார்ப்பது அசாத்தியம். முதன்மையான இரண்டோ மூன்றோ பாத்திரங்கள் கொண்ட கதையில் கூட துணைப்பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். பெரும்பாலும் துணைப்பாத்திரங்களே கதையை விரிக்க உதவுபவையாக அமைகின்றன. ;கொட்டு மேளம்' கதை டாக்டரை மையமாகக் கொண்டது. உலகியல் சூதுகள் தெரிந்தும் அதில் ஈடுபட முடியாத மனித மனத்தின் மேன்மையைச் சொல்லுகிறது கதை.  டாக்டர். துரைசாமி, அவரை மணக்கவிருக்கும் பார்வதி, கம்பவுண்டர் ஜீவரத்தினம் ஆகிய மூன்று புள்ளிகளைச் சேர்த்து உருவாகும் கதையைத் துணைப் பாத்திரங்களே முழுமையாக்குகின்றன. ஐராவதம் முதலியார், மாரியப்பப் பிள்ளை என்று பருண்மையாகக் கதையின் நிகழ் காலத்தில் வரும் துணைப்பாத்திரங்களும் அண்ணன், அண்ணி,  அம்மா, கர்னல் சுந்தரத் தாண்டவன் என்று குறிப்பாகச் சொல்லப்படும் உப பாத்திரங்களும் சேர்ந்தே கதையை முழுமையாக்குகின்றன. இத்தனைப் பாத்திரங்களும் இத்தனைக் கிளை பிரிதல்களும் வேண்டுமா என்று கேட்க விடாமல் இணைவது ஜானகிராமனின் உத்தியால்; அல்லது சூத்திரத்தால். இந்தத் துணைப்பாத்திர சகாயம் இல்லாமல் கதை இல்லை. திட்டமிட்டு ஒரு கதையை உருவாக்குவதல்ல; மாறாகத் தன் முன் காட்சியளிக்கும் பரந்த வாழ்க்கையின் ஒரு விள்ளலைப் பிரித்தெடுத்துக் காண்பிப்பதே அவரது கலை.

கதைகளில் அங்கம் வகிக்கும் பாத்திரங்கள் வெவ்வேறு வகையானவர்கள். காதலர்கள், கணவர்கள், பிறன்மனை நயப்பவர்கள், தேவதைகள், பிசாசுகள், குழந்தைகள், அரசர்கள், துறவிகள், பரதேசிகள், தாசிகள், இசைக்கலைஞர்கள், விமர்சகர்கள்,வாத்தியார்கள், மாணவர்கள், வண்டியோட்டிகள், தொழு நோயாளிகள், பிச்சைக்காரர்கள், அரசு அதிகாரிகள், கன்னிகள், விதவைகள், அம்மாக்கள், அன்ணிகள், சகோதர சகோதரிகள், மாமியார்கள், மைத்துனர்கள், அர்ச்சகர்கள், உஞ்ச விருத்திக் காரர்கள், நடன மணிகள், சினிமா நடிகைகள், டாக்டர்கள், வைத்தியர்கள், பக்தர்கள், தெய்வ தூஷணையாளர்கள், பக்தர்கள், ஆஷாடபூதிகள், கிழவர்கள், கிழவிகள், பகுத்தறிவுச் செம்மல்கள், கடன்காரர்கள், வாங்கிய கடனைத் தர வக்கில்லாதவர்கள், ஏமார்றுப் பேர்வழிகள், தரகர்கள், ஜமீன்தார்கள் என்று வாழ்வின் சகல மனிதர்களும் நடமாடும் பரந்த முற்றம் ஜானகிராமனின் கதைப் பரப்பு. தட்டச்சு எந்திரமும் பஸ்ஸும் கிளியும் குதிரையும் கூட அந்த முற்றத்தில் நடமாடுகின்றன. இவர்கள் வாழ்வின் பொருட்டுச் செய்யும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெருங்காட்சியாக ஜானகிராமன் கதையுலகின் இயக்கம் விரிவு பெறுகிறது.

பெரும்பான்மையான கதைகள் அவரது சொந்த நிலமான தஞ்சாவூரைக் களமாகக் கொண்டவை. பெரிதும் அந்த மண்ணின் மொழியைப் பேசுபவை. அந்த நிலத்தின் இயற்கையையும் கிராமங்களையும்  நகரங்க¨ளையும் சித்தரிப்பவை. அதைப் புவியியல் சித்தரிப்பாக அல்லாமல் மானுட வயப்படுத்தப்பட்ட நிலக் காட்சியாகவே ஜானகிராமன் காட்டுகிறார். அந்த மண்ணின் பிரத்தியேக குணத்தைச் சொல்லும்போதே அதைக் கடந்த இன்னொரு இடத்துக்கும் பொருந்தும் வகையில் உருவாக்குகிறார். காமமும் ஏமாற்றும் பரிவும் காதலும் மண்ணின் குணம் என்பதுபோலவே மானுடத்தின் குணம் என்பது அவரது எண்ணம். 'கடன் தீர்ந்தது' சிறுகதையில் தன்னிடம் வாங்கிய இருபதினாயிரம் ரூபாய்க் கடனைத் திரும்பத் தராத ராமதாஸிடம் வெறும் இரண்டு அணாவை வசூல் செய்து விட்டுக் கடன் தீர்ந்தது என்று சொல்கிறார் சுந்தர தேசிகர். நாடுவிட்டு நாடுவந்த விருந்தாளியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பின் இடையே  தனக்கு நேர்ந்த பேரிழப்பைச் சொல்லாமல் அவரை உபசரிக்கிறார் ஜப்பானியரான யோஷிகி. இந்த இரண்டு எளிய மனிதர்களின் பெருந்தன்மையைச் சொல்லும் கதைகள் முறையே தஞ்சாவூர் கிராமத்திலும் ஜப்பானிய கோபே நகரத்திலும் நடக்கின்றன என்பது தற்செயலானது. இடம் மாறியிருந்தாலும் ஜானகிராமன் இதே பரிவுணர்வைத் தான் சொல்லியிருக்க முடியும். மனிதர்கள் மீது காட்டும் வாஞ்சையே அவரது கலையின் மையம். அந்த அளவில் இலட்சியவாத எழுத்தின் பிரதிநிதி. எனினும் எதார்த்தத்தை விட்டு விலகாதது அந்த இலட்சியவாதம்.

8.   தி. ஜானகிராமன் கதைகளின் தனித்துவம் அதில் வரும் உரையாடல்கள். பாத்திரங்களின் கூற்றாக நிகழும் உரையாடலின் மூலமே அவர்களின் குணங்களையும் கதையின் உருவத்தையும் கொண்டு வந்து விடுகிறார். ரசிகரும் ரசிகையும் கதை உரையாடலாகவே அமைந்தது. அந்தப் போக்கிலேயே தானில்லாமல் தியாகராஜ உற்சவமில்லை என்று  அகங்காரம் கொள்ளும் பாடகர் மார்க்கண்டமும் 'இப்பத்தான் சமயம் வாச்சுது எனக்கு' என்று  இடித்துரைக்கும் பக்க வாத்தியக்காரரும் 'தியாகய்யரைவிட நான் நல்லாப் பாடறேனாம், இந்த மாதிரி உளறி கிட்டு அலையாதே'  என்று பாடகரை விரட்டும் தாசி ஞானாம்பாளும் குரல்களிலிருந்து உயிர்த்துத் திட வடிவம் பெறுகிறார்கள். வேறு சில உரையாடல்கள் பாத்திரங்களின் குணாம்சத்தைப் பகிரங்கப்படுத்துகின்றன. அவரது ஆகச் சிறந்த கதையான 'சிலிர்ப்'பில் வரும் உரையாடல் மொத்தக் கதாபாத்திரங்களின் குணாம்சத்தையும் வெளிப்படுத்துகிறது. 'சத்தியமா?' கதையின் உரையாடல் போக்கே முழுமையாகக் கதையையும் அதன் ஆழத்தையும் எடுத்துக் காட்டி விடுகிறது.இதே பணியை அவரது உவமைகளும் மேற்கொள்ளுகின்றன. ' பழைய பேப்பர்க்காரன் தராசு தெய்வீகக் கொல்லன் கைவேலை. ஆனையை வைத்தால் ஆறு பலம் காட்டும். ஆறு மாசத் தினசரிக் காகிதம் எந்த மூலை? என்ற கோதாவரிக் குண்டு'கதையின் ஆரம்ப வரிகள் சுவாரசியமானவை. ஒருவகையில் கதையைத் திறக்கும் கருவியும் அந்த வரிகளே. பழைய பேப்பரை விற்று மாதாந்திர பட்ஜெட்டைச் சரிக்கட்டும் ஆளிடம் மனைவி வெட்டிச் செலவுக்காகப் பாத்திரத்தை அடகு வைப்பதையும் அதை மிக இயல்பாக எடுத்துக் கொள்ளும் கணவனையும் மையப் படுத்தும் கதைக்கு ஆரம்ப வரிகளின் தரித்திர நிலைவிளக்கம் பொருத்தமானதுதானே.

9.   ண் பெண் உறவில் எழும் பிரச்சனைகளையும் காமத்தையும் அதிக அளவில் ஜானகிராமன் எழுதியதாக ஒரு கருத்து நிலவுகிறது. மொத்தக் கதைகளை வைத்துப் பார்த்தால் இது போன்ற கதைகள் பத்து விழுக்காடு கூட இல்லை. சண்பகப் பூ, பசி ஆறிற்று, வேறு வழியில்லை,மணம். அதிர்வு, தூரப் பிரயாணம், குளிர் ஜுரம், பாஷாங்க ராகம்,மனநாக்கு,  தவம், யதுநாத்தின் குரு பக்தி, ராவணன் காதல் ஆகிய கதைகளில் மட்டுமே பாலுறவுச் சிக்கல்களும் காமத் தத்தளிப்பும் சித்தரிக்கப்படுகின்றன. இதே கதைகளிலும் இன்னொரு உப பிரதியை வாசிக்க முடியும். உதாரணமாக, சண்பகப் பூ கதையில் பெண்ணின் சுதந்திரத்தையும் சமூகத்தின் பொருமலையும் . மணத்தில் பெண்ணின் உடல் மீது நிகழும் தந்திரமான சுரண்டலையும் அவளது அருவெறுப்பையும், தவம் கதையில் காமத்தின் வியர்த்தத்தையும் ஆணின் முட்டாள்தனத்தையும் , தூரப் பிரயாணத்தில்ஆணின் அத்து மீறலையும் அவளது சுய தேர்வையும் வாசிக்கலாம்.

ஜானகிராமனின் மகோன்னத பாத்திரங்கள் பெண்கள்தாம்' என்று அசோக மித்திரன் குறிப்பிடுகிறார். அது துல்லியமான கணிப்பு. குழந்தை முதல் கிழவி வரையான எல்லாப் பருவங்களிலுமாக அவரது பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களை வியந்து பாராட்டுவதில் அவருக்கு அலுப்பே  ஏற்படுவதில்லை. பல சமயங்களில் அவர்கள் மானுடப் பிறவிகள்தானா என்று பரவசப்பட்டுக் கேட்கிறார். அப்படிப் பரவசம் மேலிடும்போது அவரது வர்ணனைகள் கவிதையின் சாயலை அடைகின்றன. நெருப்பின் வெவ்வெறு நிலைகளுடன் , சுடர், ஜுவாலை, குத்து விளக்கு என்றுதான் வர்ணிக்கப் படுகிறார்கள். சிருஷ்டியின் வெம்மை அவர்களிடமே இருக்கிறது என்பதனாலாக இருக்கலாம் இந்த வியப்பு. சிருஷ்டியின் குளிர்ச்சியை அவரது குழந்தைப் பாத்திரங்கள் பரப்புகின்றன. அதன் மகத்தான உதாரணம் 'சிலிர்ப்பு'. பெண்கள் மீதான அவருடைய வியப்பு கவித்துவமானது என்றால் பிற பாத்திரங்களுடனான அணுகுமுறை எதார்த்தம் சார்ந்தது. நடைமுறை உலகின் எல்லா மனிதர்களும் எல்லா மனித நடவடிக்கைகளும் கதைகளில் இடம் பெறுகின்றன.  கதை மாந்தர் எல்லாரும் உணர்வு சார்ந்தே முன்னிருத்தப் படுகிறார்கள். மனிதனின் காமம் ( தூரப் பிரயாணம்). ஏமாற்று ( கங்கா ஸ்நானம்), வன்மம் ( பாயசம்), தனிமை ( கிழவரைப் பற்றி ஒரு கனவு ), அற்பத்தனம் ( விரல்), பரிவு ( கோபுர விளக்கு ), கருணை ( சிலிர்ப்பு ), கழிவிரக்கம் ( சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் ), அரசியல் சூது (மரமும் செடியும்), குற்ற உணர்வு ( கண்டாமணி ), வஞ்சம் ( அத்துவின் முடிவு) என்று மேலோட்டமாக அட்டவ¨ணைப் படுத்தலாம். ஆனால் அது அவரது கதைக் கலைக்குச் செய்யும் அநீதி. ஏனெனில் கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல.

மனிதர்களின் களிப்பையும் துயரத்தையும் வெற்றியையும் வீழ்ச்சியையும் தடுமாற்றத்தையும் திடத்தையும் மதிப்பீடுகளையும் பிறழ்வுகளையும்  ஏறத்தாழ சமமாகவே பார்க்கும் பார்வையில் வெளிப்பட்டவை ஜானகிராமன் கதைகள். வாங்கிய இருபதாயிரம் ரூபாய்க் கடனைத் திருப்ப மறுப்பவனிடம் இரண்டணா வாங்கிக் கொண்டு கடன் தீர்ந்தது என்று சமாதானம் கொள்ளும் சுந்தர தேசிகரும்  ( கடன் தீர்ந்தது ) மருமகன் எண்ணிக்கொடுத்த மூவாயிரத்து நாற்பத்தேழு ரூபாயை மறைத்து வைத்து விட்டுப் பணத்தைக் கொடுக்கவில்லை என்று வழக்குத் தொடுக்கும் துரையப்பாவும்  ( கங்கா ஸ்நானம் ) ஜானகிராமனின் கதைப் பார்வையில் சமமானவர்களாகவே இருக்கிறார்கள். சூழ்நிலையும் உணர்வும் மனிதர்களை ஆட்டி வைக்கும் விசித்திரத்தை பார்க்கும் பார்வை அது.''ஒரு சிறுவன் போல நான் அன்றாட உலகத்தைப் பார்த்து வியக்கிறேன். சிரிக்கிறேன். பொருமுகிறேன், நெகிழ்கிறேன், முஷ்டியை உயர்த்துகிறேன்,பிணங்குகிறேன், ஒதுங்குகிறேன், சில சமயம் கூச்சல் போடுகிறேன்'' இந்தச் சேஷ்டைகள்தாம் தனது கதைகள் என்கிறார் ஜானகிராமன்.சொன்ன ஒவ்வொரு சேஷ்டைக்கும் சான்றாகும் வகையில் கதைகளை வரிசைப்படுத்தி விட்டால் அவரது படைப்பு ரகசியத்தையும் செய்தியையும் கண்டைந்தது விடலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

10.   ன்றைய தேதிக்கு தி. ஜானகிராமன் சிறுகதைகள் காலப் பழக்கம் கொண்டவை. அவற்றில் கையாளப்படும் விஷயங்கள் இன்று காலக்கெடு தீர்ந்தவை. இடம் பெறும் நிலக் காட்சிகள்  மாறியிருக்கின்றன.  பின்புலங்கள் மாறியிருக்கின்றன.  மனிதர்களின் தோற்றங்களும் பழக்கங்களும் மதிப்பீடுகளும் மாறியிருக்கின்றன. கதைகளில் செயல்பட்ட உத்திகளும் கூறுமுறைகளும் மாறியிருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகள் இன்றைய வாசிப்பிலும் பழையனவாக மாறிவிடவில்லை. ஏனெனில் அவை மனிதப் படைப்பின் ஆதார குணங்களின் மீது உருவாக்கப் பட்டவை. என்றென்றைக்கு மான நித்தியப் புதுமையைக் கொண்டிருப்பவை. இந்தத் தொகுப்பிலிருந்து அப்படியான பல கதைகளை எடுத்துக் காட்ட முடியும். ஆனால் அந்தப் பட்டியல் வாசிப்பவருக்குத் தகுந்தவாறு மாற்றங்களைக் கொண்டிருக்கும். ஒரு வாசகனாக, நாவலாசிரியர் தி.ஜானகிராமனுக்கு என் வாசிப்பில் உயர்வான இடம் உண்டு. அதை விடவும் ஓர் அங்குலம் உயர்ந்த இடத்தையாவது சிறுகதையாசிரியர் ஜானகிராமனுக்கு அளிக்கவே விரும்புவேன். அப்படிச் செய்வதற்கான சான்று அட்டவனையில் பின்வரும் கதைகள் நிச்சயம் இருக்கும். கொட்டு மேளம், சண்பகப் பூ, ரசிகரும் ரசிகையும் , பசி ஆறிற்று, நானும் எம்டனும், கழுகு, தவம், சிலிர்ப்பு, சிவப்பு ரிக்ஷா, கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான், சத்தியமா, செய்தி, தூரப் பிரயாணம், அக்பர் சாஸ்திரி, துணை, குளிர், அடுத்த..., கோபுர விளக்கு, கண்டாமணி, யோஷிகி, மணம், யதுநாத்தின் குரு பக்தி, வெயில், பிடி கருணை, பாயசம், கங்கா ஸ்நானம், தீர்மானம், முள் முடி, இசைப் பயிற்சி, கோதாவரிக் குண்டு, சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய், சுளிப்பு,கடைசி மணி,அத்துவின் முடிவு, பாஷாங்க ராகம்.

கொட்டுமேளம் தொகுப்பை முன்வைத்துப் பேசிய க.நா.சு. தி.ஜானகிராமன் கதைகள் வாசிக்கக் கிடைத்த வாசகர்கள் பாக்கியசாலிகள் என்றார். 1965 இல் இலக்கிய வட்டம் இதழில். தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த கதைகளை முன்னிலைப்படுத்திய பிரபஞ்சன் அதே சொற்களை வழி மொழிந்தார். 2005 இல் 'சிலிர்ப்பு' தொகுதி முன்னுரையில். ஐம்பது ஆண்டுகளுக்கும் பத்து ஆண்டுகளுக்கும் முற்பட்ட அதே வாசகங்களையே நானும் வலியுறுத்த விரும்புகிறேன். இது கலையின் அருமையா, தி. ஜா.வின் பெருமையா? அல்லது இரண்டுக்குமான மரியாதையா?
 
உரையின் ஒலி வடிவம் இங்கே:
உரையின் ஒளி வடிவம், பகுதி 1


உரையின் ஒளி வடிவம், பகுதி 2 :

No comments:

Post a Comment