”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்


அருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம்.... மேலும், அவர் தொகுத்துள்ள தி.ஜா. சிறுகதைகளின் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரையை மீள் பதிவாக இங்கு அளிக்கிறோம்.....-  அழகின் சிலிர்ப்பு   -

1.  காலம் கனிந்து அளித்த கொடை' என்ற வாசகம் பொதுவாக எல்லாக் கலைகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். ஆனால் தி. ஜானகிராமன் கதைகளை ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் இந்த வாசகத்தை  அவரது சிறுகதைக் கலைக்கு அழுத்தம் கொடுக்கும் பிரத்தியேக வாக்கியமாகவே புரிந்து கொள்ளத் தோன்றியிருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளலுக்கு 'கொட்டு மேளம் ' தொகுப்பைப் பற்றி க.நா. சுப்ரமணியம் தனது 'படித்திருக்கிறீர்களா? ' நூலில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் , ஒருவேளை காரணமாக இருக்கலாம். '1946 க்குப் பிந்திய இலக்கியத் தேக்க காலத்திலே தோன்றிய நல்ல ஆசிரியர் என்று தி. ஜானகிராமனைச் சொல்ல வேண்டும். சூழ்நிலை, இன்றைய வேகம் இரண்டையும் எதிர்த்து நீச்சுப் போடுவதென்பது சிரமமான காரியம். இந்தக் காரியத்தை இலக்கியபூர்வமாகவும் ஒரு அலக்ஷிய பாவத்துடனும் செய்திருக்கிறார் தி. ஜானகிராமன் ' . இவை க.நா.சுவின் வரிகள்.

க.நா.சு. வரையறுத்துச் சொல்லும் காலப்பகுதி நவீன இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.  மறுமலர்ச்சி எழுத்துக்களின் களமாக இருந்த மணிக்கொடி இதழ் தனது மூன்று கட்டச் செயல்பாடுகளுக்குப் பின்னர்  ஏற்கனவே 'ஜீவன் முக்தி' அடைந்து விட்டிருந்தது.  மணிக்கொடி மூலம் தமது சாதனைப் படைப்புகளை வெளியிட்டிருந்த சிறுகதை ஆசிரியர்கள் பலரும் களம் நீங்கியிருந்தார்கள். கு.ப.ராஜகோபாலன் காலமாகி விட்டிருந்தார். புதுமைப்பித்தன் திரைப்பட முயற்சிக்காகப் புனே வாசியாகிருந்தார். அபூர்வமாகவே கதைகளை எழுதிய மௌனியும் இடைவேளை எடுத்துக் கொண்டிருந்தார்.வேறு பலரும் தமது முன்னாள் சாதனைகளுக்காகவே பேசப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.புதிய சலனங்கள் இல்லாமல் மந்தகதியில் நகர்ந்து கொண்டிருந்த இலக்கியப் போக்கையே தேக்க காலம் என்கிறார் க.நா. சு. இந்தப் போக்கில் புது வேகத்தை ஏற்படுத்திய ஒன்றாகவே தி. ஜானகி ராமனின் வருகையை அறிவிக்கிறார். இது மிகச் சரியான இனங்காணல்தான் என்பதை  ஜானகிராமனின் சிறுகதைகள் நிறுவின. 'தனித் தன்மையும் உணர்ச்சி நிறைவும் தெறிப்பும்'  கொண்ட கதைகள் மூலம் அவர் தமிழ்ச் சிறுகதை மரபைப் புதிய திசைக்கு  நகர்த்தினார்.  இந்த முன்னெடுப்பில் தி. ஜானகிராமனுடன் இன்னொரு பெயரையும் இணைக்கலாம். லா.ச.ராமிருதம். க.நா.சு. குறிப்பிட்ட தேக்கத்தை இவ்விருவருமே உடைத்தார்கள்; இரு வேறு முறைகளில்.