மங்கல இசை மரபு - திரு பி.எம்.சுந்தரம்


Ø  
  திரு பி எம் சுந்தரம், குறிப்பிடத்தக்க நமது தவில் இசை முன்னோடிகளில் ஒருவரான, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் அவர்களின் புதல்வர்.

Ø  பல்வேறு இசை விற்பன்னர்களிடம் முறையாகச் சங்கீதம் பயின்ற பின்னர்,  பாலமுரளி கிருஷ்ணா அவர்களின்  ஆலோசனையின் பேரில் இசை வரலாற்றாய்வினைத் துவங்கி, இன்று வரை மிக நுட்பமாக இத்துறையில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர், திரு பி எம் சுந்தரம்.

Ø  68 நாதஸ்வரக்கலைஞர்கள், 43 தவில் கலைஞர்களையும் உட்படுத்தி அவர்களின் கலை நுட்பங்கள் மற்றும் வெளிப்பாடுகள் குறித்து தொகுக்கப்பட்ட “மங்கல இசை மன்னர்கள்” எனும் புத்தகம் இவரது 20 ஆண்டு கால உழைப்பின் பயனாய் இசை உலகிற்கு கிடைத்த அறிய ஆவணமாகும்.

Ø  அருவியின் இந்நிகழ்வுக்கு மூலமும் இதுவே.

குழலிசை - குடமாளூர் ஜனார்த்தனன்


எமது 2014, ஃபெப்ருவரி மாத நிகழ்வாக நடத்திய திரு குடமாளூர் ஜனார்த்தனன் அவர்களின் புல்லாங்குழலிசை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவினை கீழே உள்ள சுட்டியில் காணலாம். இதை எங்களுக்கு சாத்தியப்படுத்திக்கொடுத்த திரு சுகுமாரன் அவர்களுக்கும், எமது நண்பரும், பரிவாதினி அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான திரு லலிதா ராம் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.  


தீராப்புதிர் (மாமல்லபுரத்து புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்) - திரு பாலுசாமி


கலைப் படைப்புகள் உருவான பின்பு அவற்றுடன் தொடர்பு கொள்ளும் நமக்குள் தளும்பும் சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் வேறானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது என்பது திண்ணம்.இந்நிகழ்வில், தன் ஆழ்ந்த ஆராய்ச்சிப் பணி மூலம் கண்டடைந்த ஒரு உறைந்த காலத்தின் சாட்சிகளாய், புதுவையின் அருகிலுள்ள சாவடிக்குப்பத்தில் கிடைத்துள்ள புலிக்குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் என்னும் இயங்கு சிற்பத்தொகுப்பின் வழி வற்றாத புதிர்களின் உலகையும் தனது சில புதிய முடிவுகளையும் நுணுக்கமான ஆய்வின் மூலம், நம்மிடையே பகிந்து கொண்டார்.
இப்புதிர்களை அவிழ்க்கும் இவரது ஆய்வுகள் எத்தனை தீர்க்கமானது என்பதை புரிந்துகொள்ள இவரது புத்தகத்திலிருந்து சில வரிகள்…..

“ ஆயன் குழலினை இசைக்கும் விரலமைப்பு முறைகொண்டு ஒர் அறிய நுட்பத்தை உணர முடிகிறது. சாதாரணமாக விரல்களை வரிசைப்படி மூடியும் திறந்தும் வாசிக்கும் போது காம்போதி (முல்லைப்பண்) என்ற தாய் ராகம் பிறக்கிறது. இது தவிரத் துளைகளை பகுதி மூடுவதாலும் ஒன்றுவிட்டு ஒன்று மூடுவதாலும் அரைச் சுரங்கள் கிடைக்கின்றன.  இச்சிற்பத்தில் ஆயன் குழலை முகத்துக்கு வலப்புறமாகப் பிடித்துக்கொண்டு இசை எழுப்புவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஐந்து துளைகள் மூடப்பட்டுள்ளன. ஆறாவது துளை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. ஏழாவது துளை மூடப்பட்டுள்ளது. எட்டாவது திறந்துள்ளது. இந்நிலையில் பிடிக்கக்கூடிய சுரம் பஞ்சமத்தை ஒட்டியுள்ள பிரதி மத்திமம் என்று அறியலாம். இது பஞ்சமத்தை ஒட்டி அதனோடு இணையும் முறையில் இணைந்தும் இணையாமலும் அசைவதன் மூலம் அழகுபெறக்கூடியது.”


இவரது புத்தகத்தின் முகப்பில் தியோடர் பாஸ்கரன் அவர்கள் கூறியுள்ளது போல், தமிழகத்தின் ஒரு சிறப்பான பாரம்பரியத்தின் மேல் கவனத்தைச் செலுத்துகின்றன இவரது ஆய்வுகள்…..!


இந்நிகழ்வின் யூ ட்யூப் இணைப்பை கீழே தந்துள்ளோம்…….

சிறார் கூட்டாளி
தன்னை நாடகக்காரனாக ஆக்கியது தாத்தாதான் என்கிறார் சரவணன் என்னும் பேராசிரியர் வேலு சரவணன், புதுவைப் பல்கலைகழகத்தில் நிகழ்கலைத் துறைத் தலைவரான இவர் ஒரு நடிகனை பாத்திரமாக மாற்றுவது, ஒட்டுமொத்தமான நாடக வடிவமைமைப்புக்கான புரிதல் என்பவை தனக்கு பேரா ராமானுஜம் மூலம் தான் வாய்த்ததாய் பெருமிதம் கொள்கிறார்.கூட்டாக வாழும் மகிழ்ச்சியை இழந்த மனிதன் தனிமையின் துயரங்களை சேகரித்து வருகிறான். மனித நாகரீகத்தின் தெளிவான கண்ணாடியாக விள்ங்கும் நாடகம், மனிதர்கள் கூட்டாக சங்கமிக்கிற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அது, வாழ்கை மீது நம்பிக்கையையும் உற்ச்சாகத்தையும் தருகிறது. சடங்கு, கேளிக்கை என்பதிலிருந்து மாறி நாடகக்கலை மிகச்சிறந்த கல்வியியல் வடிவமாகத் தொடங்கியிருக்கிறது.     குழந்தைகளை அப்பருவத்தில் மேதைகளாக்கும் இன்றைய பெற்றோரின் முஸ்தீபுகளை சாடும் இவர், ” குழந்தை மனம் உலகைக் கற்கும் தருவாயில் கனவுமயமானது. அவ்வியல்பின் பிண்ணணியில் உருவாகும் குழந்தைகள், நாடகமும், குதூகலமும், கொண்டாட்டமும் கொண்டதாகத்தானே இருக்கும்” என தனது நாடக மனதின் பொது இயல்பினை தெரிவிக்கிறார்.அறிவிப்பு: அடுத்த நிகழ்வு 24 ஆகஸ்ட் 2014வரும் 24 ஆகஸ்ட் 2014 ஞாயிறு காலை, கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகில் உள்ள ஆர்த்ரா அரங்கில் நடைபெற உள்ள  இம்மாத நிகழ்வுக்கு அனைவரையும் இரு கரம் கூப்பி அழைப்பதில் அருவி பெருமை கொள்கிறது....