காலத்தின் நாண்


WORDS ARE BOUND IN CHAINS,
WHILE HAPPILY SOUNDS ARE STILL FREE
                                                    - LUDWIG VAN BEETHOVEN
கடந்த ஃபெப்ருவரி 17 அன்று நடைபெற்ற எமது நிகழ்வு, தொடக்கத்தில் இயக்குனர் மணி கவுலின் ஹிந்துஸ்த்தானி இசை குறித்த ”த்ருபத்” என்னும் ஆவணப்படத் திரையிடலுக்குப் பின் புதுக்கோட்டை மரபில் வந்த லய வழி கலைஞர்களின் வாழ்வும், பங்களிப்பும் குறித்த  லலிதாராமின் ஊடக விளக்கத்துடனான உரையாகவும் அமைந்தது,


தமிழ் எழுத்தாளர் அம்பையின் வரிகளில்,கர்நாடக சங்கீதத்தின் ஒரு பொற்காலத்தைப் பற்றிப் பேசுவோரையேவாழும் ஆவணங்களையே கூட நாம் ஒவ்வொருவராய் இழந்து கொண்டிருக்கிறோம்– இந்த இழப்பை நினைத்து வருந்தக்கூடிய விழிப்பும் நமக்கு இல்லைஇவர்களிடம் பொதிந்திருக்கும் அரிய தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் ஊக்கமும் நமக்கு இல்லை. இசையில் நாட்டமுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் இந்த இழப்பு பெரும்வலியாக இருக்கிறதுஆனால் ஒரு சிலராலேயே இந்த இழப்பில் இருந்து சேகரிக்கக் கூடியதைக் காப்பாற்றித் தர முடிகிறது-
தங்களுக்கு முந்தைய தலைமுறை செய்திருக்க வேண்டிய வேலையைச் செய்யும் இவர்களில் லலிதா ராம் முக்கியமானவர், தமிழகக் கலை வரலாற்றுப் பின்னணியில் இவரது எழுத்துப் பணியும், இவரது நூலகளும் ஒரு அவசியத் தேவையை நிறைவு செய்பவையாக இருக்கின்றன. இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம். இவரது சமீபத்தைய புத்தகமான துருவ நட்சத்திரம்”, தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.”த்ருபத்” திரையிடலுக்குப் பின் கவிஞர் சுகுமாரன் அவர்கள் அளித்த சிற்றுரையின் எழுத்து வடிவத்தினை இங்கு பதிவு செய்கிறோம்.”  அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் மிகவும் இசை மயமான நாளாக அமைந்திருக்கிறது. பேசப்பட இருக்கும் விஷயம் இசை தொடர்பானது என்பதால் இசையை மையமாகக் கொண்ட படத்தையும் பார்த்து முடித்திருக்கிறோம். மணி கௌலின் 'துருபத்'. ஹிந்துஸ்தானி இசையின் பிரதான வடிவங்களில் துருபத் ஒன்று. அதை பற்றியது இந்தப் படம். முதலில் படத்தைப் பற்றி. அதற்கும் முன்பு படத்தை இயக்கிய மணி கௌலைப் பற்றி.மணி கௌல் சில மாதங்களுக்கு முன்பு தான் , சென்ற ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார். புனே திரைப்படக் கல்லுரி மாணவர். அவருடைய முதல் படமான உஸ்கி ரோட்டி இந்திய நவீன சினிமாவில் முக்கியமான படம் என்று சொல்லப்படுகிறது. சரியாகச் சொன்னால் மற்றவர்களிடமிருந்து முழுவதும் மாறுபட்ட சினிமா மொழியில்தான் மணி கௌல் தன்னுடைய படங்களை எடுத்தார்.அந்த வகையில் அவர் ரித்விக் கட்டக்கின் மாணவர். இந்திய நவீன சினிமாவை இரண்டு சிந்தனைப் பள்ளிகளாகச் சொல்வதுண்டு. சத்யஜித்ராயின் பாணி, ரித்விக் கட்டக்கின் பாணி என்று இரண்டு பள்ளிகளாக. இதில் மணிகௌல், ரித்விக் கட்டக்கின் பள்ளியைச் சேர்ந்தவர். ரித்விக் கட்டக்கின் மாணவராக இருந்தார் என்பதுடன் அவரே சில காலம் கட்டக்கைப் போல புனே திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகவும் இருந்தார்.

கிட்டத்தட்ட 10 பத்து கதை படங்களையும் சில ஆவணப்படங்களையும் எடுத்தவர். ஆவணப் படங்களில் இரண்டு இசையை மையமாகக் கொண்டவை. 82 இல் 'துருபத்' படத்தை எடுத்தார். அதற்கும் சில வருடங்கள் கழித்து, 1989 இல்எடுத்த சித்தேஸ்வரி - இந்துஸ்தானி இசைக் கலைஞரான சித்தேஸ்வரி தேவியின் வாழ்க்கையைப் பற்றிய படம். மணி கௌல் தொடர்ச்சியாகப் படமெடுத்தவரல்ல. படங்களில்லாத காலத்தில் இசை கற்பித்துக் கொண்டிருந்தார். ஐந்து வருடங்கள் அந்தப் பணியைச் செய்திருக் கிறார். அவர் கற்பித்ததும் 'துருபத்' சங்கீதம்தான். அதன் விளைவுதான் நாம் பார்த்த இந்தப் படம்  துருபத்'. கற்பித்தவரே இயக்கிய படம் என்பதால் இதற்கு நம்பகத் தன்மை கொஞ்சம் அதிகம். இதெல்லாம் துருபத் என்ற படத்தைப் பற்றிய சில தகவல்கள்.
படத்தைப் பார்த்திருக்கும் பின்னணியில் 'துருபத்' சங்கீதம் மற்றிய சில விவரங்களைப் பேசலாம். இந்துஸ்தானி இசையின் முக்கியமான வடிவங்களில் ஒன்று துருபத். துருபத், தமார், சத்ரா, கயால், தரானா, த்ரிவ்த், ரஸ், சர்கம், சதுரங், அஷ்டபதி - இவையெல்லாம் இந்துஸ்தானி இசையின் பிரதான வடிவங்கள். இதில் துருபத் மிகப் பழைமையான வடிவம் என்று சொல்லப்படுகிறது. துருபத் என்ற பெயருக்கே வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. துரு + பதம் = துருபதம். துருபத். துருவம் நிலையானது. உண்மையானது. அதை அடைகிற வழி - பதம் - துருபத். இது ஒரு விளக்கம். அழகியல் சார்ந்த விளக்கம். இதற்கே பக்தி அடிப்படையில் இன்னொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. துருவம் அல்லது உண்மை என்பது கடவுள். ஆக, இசைமூலமாக்க் கடவுளை அடையும் வழிதான் துருபத்.

பக்தி சார்ந்த ஓர் இசை வடிவம் இது. நான்கு வரிப் பாடல். கடவுளை அல்லது ஆன்மீகத் தேடலை மையமாகக் கொண்ட பாடல்கள். கூடவே இசை.

ஆனால் 12 ,13 ஆம் நூற்றாண்டுகளில் செவ்வியல் தன்மை கொண்ட வடிவமாக மாறியது. அதுவரை கோவில்களில் பாடப்பட்ட இசை முகலாய அரசின் வருகைக்குப் பிறகு அரசவையில் பாடப்படும் இசையாக, தர்பார் சங்கீதமாக மாறியது. அக்பரின் காலத்தில் இந்த மாற்றம் ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது.


துருபத் நான்கு கட்டங்களாகப் பாடப்படுகிறது.ஸ்தாயி, அந்தரா, சஞ்சாரி, ஆபோகி என்று நான்கு கட்டங்கள். முதலில் ஆலாப். ஆலாபனை. இதில் பாடலின் சொற்களோ இசையின் ஸ்வரங்களோ வராது. த, , நோ, போன்ற ஒலிக்குறிப்புகள் மட்டும் இருக்கும். அடுத்தது ஸ்தாயி. பாடகரின் குரல் மந்தர ஸ்தாயியில் ஆரம்பித்து மத்ய ஸ்தாயியில் வளரும்.இந்தத் தருணத்தில் பக்க வாஜ் கூட வரும். தாளமும் சேரும். அடுத்தது அந்தரா. இந்தச் சமயத்தில் ருத்ர வீணையுடன் கூடஇசைக்கப்படும். கர்நாடக இசையில் நாம் கேட்கிற பல்லவி என்று இதை வைத்துக் கொள்ளலாம். அடுத்தது சஞ்சாரி. இசை வேகம் எடுக்கிற நிலை இது. துருபத்தின் கிளைமாக்ஸ் இந்த இடம். அதற்குப் பிறகு வருவது ஆபோக். சரணம் முடிந்து பல்லவிக்கு மறுபடியும் திரும்பும் கட்டம் இது.

இப்படி வார்த்தைகளில் சொன்னதை நீங்கள் பார்த்த படத்தின் காட்சியை வைத்துக் கற்பனை செய்து ஒத்துப் பார்க்கலாம்.

துருபத் என்ற இந்தப் படமே கூட துருபத் இசை வடிவத்தில்தான் அமைக்கப் பட்டிருக்கிறது. படத்தில் வரும் பேட்டி, உரையாடல் பகுதிகளை நீக்கி விட்டால் துருபத் சங்கீத வடிவத்தின் காட்சி ரூபம் இந்தப் படம். இந்தப் படத்தில் பங்கேற்றவர்கள் பிரபலமான துருபத் கலைஞர்களான ஜியா மொய்னுதீன் தாகர் பஹாவுதீன், மொய்னுதீன் தாகர். இருவரும் வாய்ப் பாட்டுக் கலைஞர்கள். அதே சமயம் ருத்ரவீணையிலும் நிபுணர்கள். கொஞ்சம் முன்னால் குறிப்பிட்டேன்.
இஸ்லாமியர்களின் பங்களிப்புத்தான் துருபத்தைச் செழுமைப்படுத்தியது. செவ்வியல் வடிவமாக மாற்றியது என்று.துருபத் வடிவத்தில் பாடப்படும் வரிகள் பெரும்பாலும் இந்துக் கடவுள்களைப் பற்றியவை. ஆனால் அதைப் பாடிப் பிரபலப்படுத்த பிறப்பால் இஸ்லாமியர்களான இந்தக் கலைஞர்களுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. அப்படி அவர்கள் தீண்டாமை காட்டியி ருந்தால் ஒருவேளை இவ்வளவு உயர்வான இசை மறந்தும் போயிருக்கலாம். கூடவே இன்னொன்றையும் சொல்லத் தோன்றுகிறது. இந்துக் கடவுள்களைப் போற்றுகிற இசையை முஸ்லிம்கள் வளர்த்ததுபோல இஸ்லாமிய இசை வடிவங்களான கஜலையும் கய்யாலையும் இந்து மரபு பராமரிக்கவில்லை.


இவை இந்தப் படத்தையும் அதில் குறிப்பிடப்படும் இசையையும் பற்றிய சில கருத்துகள். இந்தக் கருத்துகளுக்கும் இன்றைய உரைக்க்கும் நேரடித் தொடர்பு எதுவுமில்லைஆனாலும் இருக்கிறது. அதை நீங்களே யோசிக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.இசையின் ஓர் அங்கமான லயத்தைப் பற்றியது இன்றைய உரை. நண்பர் லலிதா ராம் அதை நிகழ்த்த இருக்கிறார். இசை பற்றி அவர் எழுதி வரும் கட்டுரைகள் மூலமாக -
இன்று அவர் பேச இருப்பது பழனி சுப்ரமணியப் பிள்ளையை மையமாக வைத்து வாத்தியக் கலையின் மரபுகளைப்பற்றி, லய வழிகளைப் பற்றி.

இரண்டு வகையான லய வழிகள் கர்நாடக இசையில் இருப்பதாக லலிதாராம் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். ஒன்று - தஞ்சாவூர் வழி. இன்னொன்று - புதுக் கோட்டை வழி. தஞ்சாவூர் வழி நடனக் கலையையும் ஹரிகதை மரபையும் சார்ந்து உருவானது. நாட்டியத்துக்கும் ஹரி கதா காலட்சேபத் துக்கும் பக்கத் துணையாக இருந்த பாணி. புதுக் கோட்டை வழி தவில் வாசிப்பைப் பின்பற்றி உருவானது என்று சொல்கிறார். அவர் பேச்சில் இவை பற்றி இன்னும் விளக்கமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

புதுக்கோட்டை வழியை பெரிய இசைப் பாரம்பரியமில்லாத ஒருவர்தான் தொடங்கி வைத்திருக்கிறார் என்பது லலிதா ராமின் புத்தகத்தில் வாசித்த சுவாரசியமான சங்கதி. புதுக் கோட்டை அரண்மனையில் லாந்தர் விளக்குச் சுமப்பவராக வேலை செய்து கொண்டிருந்த மாமுண்டியா பிள்ளை - மான்பூண்டியா பிள்ளைதான் புதுக் கோட்டை மரபின் முன்னோடி.
நாம் இன்று கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் பார்க்கிற அல்லது கேட்கிற கஞ்சிராவைக் கண்டு பிடித்தவர் அவர்தான். அவருடைய வாழ்க்கையை ஆர்வமூட்டும் கதையாக லலிதா ராம் எழுதியிருக்கிறார். அதை அவரே இங்கு விரிவாகப் பேசுவார் என்று நினைக்கிறேன்.


நான் இசையை ரசிக்கிறவன். அதில் ஆய்வாளனோ நிபுணனோ அல்ல. எனக்கு இசை அந்தரங்கமானது. மிகத் தனிப்பட்ட ஓர் அனுபவம். அதை ஆராயவோ கணக்குப் போட்டு அலசிச் சொல்லவோ எனக்கு மனமில்லை. இசையை ரசிக்க இது போதுமா என்று கேட்டால் எனக்குப் போதும் என்றுதான் சொல்லத் தோன்றும். அது தனி விதி. அதன் நுட்பங்கள் தெரிந்தால் இன்னும் நல்லது என்றுதான் தோன்றுகிறது. நாம் போக வேண்டிய ஓர் இடத்தை எப்படியும் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் கையில் தெளிவான முகவரி இருந்தால் இன்னும் எளிதாகவும் விரைவாகவும் கண்டுபிடித்து விடலாமில்லையா? அது போலத்தான் இசை பற்றிய தகவல்கள் . நுட்பங்களைப் பற்றிய ஞானம் எல்லாம், இது எல்லாவற்றையும் விட இசையை அனுபவிக்க மனசு காதாகத் திறந்து கொண்டால் போதும். மனசு முன் தீர்மானங்கள் இல்லாமல் காலியாக இருந்தால்போதும். இசை நமக்குள் நிரம்பி விடும். இந்த அறிமுகத்துடன் நண்பர் லலிதாராமை உரையாற்றுமாறு அருவியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து லலிதாராம் அளித்த உரையின் ஒலி வடிவம் கேட்க இங்கே அழுத்தவும்...                     

பி.கு.  - இந்த ஒலிப்பதிவினில் உள்ள  சில இடைவெளிகள், புற இடையூறுகள் ஆகியவற்றை நீக்கும் தொழில்நுட்பம் கைகூடாததால் முழுமையாக அதன் மூலப்பதிவாகவே பதிப்பிக்கிறோம். பொறுத்தருளவும்.....

No comments:

Post a Comment