Sunday, 6 January 2013

எது நல்ல சினிமா- பதிவுகள்




எது நல்ல சினிமா- பதிவுகள்
தியடோர் பாஸ்கரன்-பங்கேற்பு-உரை

             
சினிமா பற்றி அவதானிப்பும் அவை பற்றி அறிந்நு கொள்ள விழையும் மனங்களும் அதிகம். சினிமா பற்றி நாள் கிழமை பொழுது என்றின்றி பேசிக்கொண்டே இருக்கும் சமூகம் நம்முடையது. ஒரு பொழுதும் சுவாரசியம் குறையாதது. அருவியின் சினிமா பற்றிய நிகழ்வு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை இந்தியத் தொழில் வர்த்தக சபையின் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஒரு கட்டமைப்புடன் நேர்த்தியாக நடைபெற்ற நிகழ்வு என்று சொல்லலாம். நல்ல செய்திகளை,தரமான படைப்புகளைக் கொண்டு சேர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் குறைந்த பட்சம் ஒரு அறிதல் அளவிலாவது வேண்டும்.

 

தியடோர் தொகுத்தளித்த நேர்த்தியான உரை கச்சிதமானது. மிகையில்லாதது. தன் வாழ்நாளை இயற்கை உயிர்களுக்காகவும் கலைகளுக்காகவும் பயண்படுத்தி வருகிறார். வெளிப்படையாகவே அவர் கருத்துப் போராட்டம் நடத்துகிறார். அவர் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதும் பத்திகள் உலகத்தரம் வாய்ந்தவை. தமிழில் சலனமின்றி நேர்த்தியான உரைநடையில் எழுதும் ஒருசிலரில் தியடோர் பாஸ்கரனும் ஒருவர். அவருடைய இந்திய உலக சுற்றுப்பயணங்களை தனது ஆய்வுக்குட்படுத்திக்கொள்கிறார். உலக சினிமா,காட்டுயிர்கள், அரியவகை நிலங்கள். பறவைகள் குறித்த ஆய்வுகளும் முக்கியம். அதுமட்டுமின்றி சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அழிக்கப்படும் அற்புதமான இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் அவர் குரல் கொடுத்து வருகிறார். அருவிகள் சுனைகள், காட்டுயிர்களின் வாழிடங்கள் மீதான அவருடய ஆழமான அக்கறை பிரமிக்க வைக்கிற ஒன்று. ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடுமையாக உழைத்து, மக்களுக்காக அவர் தெரிவு செய்யும் குறிப்புகள் மிக முக்கியமானவை. அருவி அவருக்கான ஒரு மகத்தான விழாவை நடத்தியதற்காகப் பாராட்டப்பட வேண்டும்.

 
அவர் உரையிலிருந்து சில முக்கியமான பகுதிகள் :


 50 களில் எடிட்டிங் பற்றிய எந்த அனுமானமும் இல்லாமல் எடிட் செய்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோர் தங்களுடைய நேரங்களை அதிகமாக எடிட்டிங் அறையில் செலவு செய்திருக்கின்றனர். ஒரு படத்தில் ஜெமினி சாவித்திரி பங்கு கொள்ளும் காட்சியில் அவர் காருக்கு சக்கரம் மாட்டுவார் ஒரு கணம் டை கட்டியிருப்பார், பிறகு டை இல்லாமல் இருப்பார். இது போன்ற பல படங்களில் வரும் ண்ணற்ற சம்பவங்களைக் குறிப்படலாம். நல்ல சொற்ப்பதங்களை, கலைக்களஞ்சியங்களை உருவாக்க வேண்டும். சினிமா,காஸ்டிங், ஸ்டாரிங் போன்ற சொற்களுக்குக் கூட பதங்கள் இல்லை அதுபோலவே மற்ற தொழில் நுட்பப்பிரிவுகளுக்குமாக கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். ஆங்கிலப் படங்களுக்குப் பிரச்சனையில்லை. ஜெர்மானி ஃப்ரென்ச் பதங்களை அப்படியே மாற்றி தங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.



ஹிட்ச்காக் படங்கள் தான் முன்னோடி என்று சொல்லலாம் அவர் தன்படத்தின் முன்பே சொல்லிவிடுவார் யார் கொலை செய்யப்படவிருக்கிறார்கள் எப்படி என்பதை காட்டிவிட்டு அதற்கான ஸ்டோரி லைனை டெவலப்செய்து படம் நகரும். இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சத்யஜித் ரே கூட தன்னுடைய படங்களில் அதிகமாக எடிட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
 
 

படங்களில் பிம்பங்கள் தான் பேசப்படவேண்டும். அதற்காக வசனம் பேசும் படங்களை தவிர்க்கவேண்டும் என்பதல்ல பொருள். திரைமொழி என்பது காட்சிகளும் கதாபாத்திரங்களும் அதன் பிம்பங்களும் தான் கதையை நகர்த்த வேண்டுமே தவிர வசனங்களால் படத்தை நகர்த்தக் கூடாது. தற்பொழுது வந்த படங்களில் சுப்பிரமணியபுரம், வழக்கு எண். 18-9 படங்கள் முக்கியமானவை. படங்களில் எடிட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய முக்கியமான ஆளுமை பீ.லெனின். அவர் தன்னுடைய சிறப்பான படங்களையும் தந்தவர். றெக்கை ஒரு அற்புதமான படம்.

காதல் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் அற்புதமாக பிம்பங்களால் கட்டமைக்கப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்க்ஷ்பட்டிருக்கும் பாலாஜி சக்திவேல் திரைமொழியை சிறப்பாகக் கையாண்டிருப்பார். பாலு மகேந்திரா ஒரு அற்புதமான இயக்குநர் மட்டுமின்றி பிம்பங்களின் ஒலி ஒளியை மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அழியாத கோலங்கள் படத்தில் நான்கைந்து சிறுவர்கள் ஆற்றில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு சிறுவன் திடிரெனக் காணாமல் போவான். எல்லோரும் ஊருக்குள் ஓடிப்போய் மக்களை அழைத்துவருவார்கள்.பிறகு அந்த சிறுவனின் சடலம் மீட்கப் படும். இந்த இறுதி சம்பவங்கள் வரையிலும் உரையாடலே இருக்காது.
பிம்பங்களும் ஒலி ஓளியும் சரியான அளவில் சேர்க்கப்பட்டு மனதில் அப்படியே ஆழமாகப்பதிந்து போகின்ற விதத்தில் படமாக்கப்பட்டிருக்கும்.இதுதான் நல்ல சினிமாவிற்கும் கலைக்கும் உதாரணம். அதுபோலவே, சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் கோர்ட்,காவல் நிலையம், சிறை,போலீஸ்வாகனம்,பேருந்து இப்படியாக நகரும் காட்சிகள் மனதில் அறைந்து இரவெல்லாம் தூக்கம் வராமல் செய்யும் அற்புதமான காட்சிகள். வீடு படத்தில் ஒரு நடுத்தரக் குடும்பம் படும் துன்பங்களை அற்புதமாக வடித்திருப்பார் பாலுமகேந்திரா. திரைமொழியும் பிம்பங்களும் முழுமையாகப் பதிவாகியிருப்பதை நாம் உணரமுடியும். அதுபோலவே கருத்தம்மா படத்தில் பாரதிராஜா, சிறப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் படத்தில் ஒரு டுயட் காட்சியை இணைத்து அப்படத்தை ரசிக்க இயலாதவாறு செய்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.


ஒரு முறை நான் சிவாஜி கணேசன் பற்றி ஆங்கிலப் புத்தகம் எழுதியிருந்தேன். அது பற்றி விசாரித்த நண்பர் ஒருவர் என்ன சிவாஜி பற்றியா எழுதியிருக்கிறீர்கள் என இளக்காரமாகக் கேட்டார். நம் நாட்டில் சினிமா பற்றி பேசுவதும் எழுதுவதையும் இளக்காரமாகப் பார்ப்பது சகஜமாகிவிட்டது. மேல் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு விழித்துக் கொண்டார்கள் சினிமா பற்றிய அறிவு அவசியம் என்று சினிமா பற்றி இளைய சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். அதன் விளைவாகவே அவ்விளைஞர்களின் முயற்சியில் கலை நேர்த்தி மிக்க படைப்புகளை கொண்டு வர முடிந்திருக்கிறது..

எத்தனை பேர் சினிமா பார்ப்பதையும் சினிமா பற்றி பேசுவதையும் ஊக்கு விக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கல்லூரிகளில் நான் தேர்வுக்குழுவில் இது பற்றி பேசும் போது அதெல்லாம் எதுக்குங்க. என்றார்கள். ஒரு சினிமாவைத் திரையிடுவதற்கும் அது பற்றி பேசுவதற்கும் யாரும் விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது நல்ல சினிமா எப்படி வரும்? தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ருத்ரையாவும் ஒருவர். தற்போதைய சிறந்த இயக்குநர்களில் பாலாஜி சக்தி வேல் சசிகுமார் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்றார். கதைக்குத் தகுந்தமாதிரியான கதாபாத்திர தேர்வு, குறைந்த உரையாடல்கள் கொண்ட முகங்கள் தத்தம் உணர்வுகளுடன் பேசும் காட்சிகள், ஒலிகளுக்கான முக்கியத்துவம், ஒளியின் தன்மையைக் கொண்டு ஒளிப்பதிவு செய்யவேண்டிய அவசியம், இசைக்கோர்வைகளின் அளவு காட்சிகளுக்குத் தகுந்த அளவிற்கு சரியான பின்னணி இசை, பார்வையாளனே கதையை உணர்ந்து கொள்கிறவாறு காட்சிகளின் இயல்பு, அழுத்தம் தரவேண்டிய காட்சிகளில் அழுத்தம் உள்ளிட்ட பல முக்கியமான திரைமொழியின் நுட்பங்களை அழகாக எடுத்துரைத்தார்.

 


இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அதிசயக்க வைத்த உயர்ந்த நடுத்தர மக்கள் பலர் சினிமா பற்றி வெளிப்படையாக தியடோர் பாஸ்கரனுடன் உரையாடியது ஆச்சர்யமாக இருந்தது. வங்கி அதிகாரி ஒருவர் தன்னுடைய சினிமா ஆர்வமும் சினிமா பார்ப்பது சம்பந்தமான நிகழ்வுகளால் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்படுகிறேன் என்பதைப் பற்றிப் பேசினார். தற்கால ஆங்கிலப் படங்கள் ஒரு மணி நேரத்தில் பார்வையாளனைக் கிளப்பி விடுவதும் ஆனால் தியாகராஜ பாகவதர் படங்களை இன்றும் நான்கு மணி நேரம் உட்காந்து நம்மால் பார்க்க முடிகிறது என்றார். உரையாடல்களின் பொழுது சினிமா பற்றியதாக இருந்ததால் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை. அதுபோலவே எதிர்பாராத அது போலவே மக்குத் தனமான கேள்விகளுக்கும் பஞ்சமில்லை. வழக்கொழிந்து போன கேள்விகளைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருடைய உரையையும் அவர் முன்வைத்த வியங்களையும் உள்வாங்கவே இல்லை என்று தெரியவந்தது.  



வரும் வழியில் வெயில் நதி இதழைத் தந்தார். ப.தியாகு. அவருக்குப் பக்கதி்லிருந்த ஒரு பெரிய பேராசிரியர் தனக்கும் ஒரு இதழ் வாங்கிக் கொண்டார்.அந்த ஆள் அது வரை சிறுபத்திரிக்கையே பார்த்ததில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இது எந்த மாதிரிப் பத்திரிக்கை என்ன இருக்கிறது என்று கேட்டார். அண்ணன் அவைநாயகன் பொறுமையாக பதில் சொன்னார். அவர் மரமண்டைக்கு எதுவும் ஏறவில்லை. மறுபடியும் அந்த மரமண்டை இல்ல இது மாதிரியான புத்தகங்கள் எல்லாம் கம்யுனிசமா இருக்கும் அதுக்காகத்தான் கேட்டேன். என்றதும் எனக்குக் கோபம் தாளவில்லை. ஏற்கெனவே தியடோர் பாஸ்கரனை யார் என்று கேட்ட கேள்விக்கு பொங்கிக் கொண்டிருந்த கோபம் எரிந்து கொண்டிருந்தது. பிறகு அவரிடம் தைரியமாப் படிக்கலாம் பயப்படாதீங்க..ஒண்ணும் பண்ணாது என்று இரண்டு முறைக்கும் மேலாக வலியுறுத்தினேன். இரண்டு கைகளிலும் பிரேஸ்லெட் தங்க முலாம் வேய்ந்த உடல் சபாரி சகிதம். அந்த ஆள் தினத்தந்தியையே படித்ததில்லை போலிருக்கிறது. எண்பதாயிரம் சம்பளம் தந்தால் யாருக்குத் தான் படிக்கும் ஆசை வரும்

இதழை ஏதோ பீயை ஏந்திக் கொண்டிருப்பதான அசூயை அவரிடம் இருந்தது. கம்யூனிச எதிர்ப்பை மட்டும் அழகாக பால் வார்த்திருக்கிறார்கள் அதற்கு மட்டும் ஒத்தி வந்திருக்கிறது. அப்படியான ரசனை ஒத்திக்கு மட்டும் ஒன்றும் குறைச்சலில்லை. அருவி போன்ற அமைப்புகள் என்னதான் மாய்ந்து மாய்ந்து ரத்தக்கண்ணீர் வடித்து கலைப் படைப்புகளைக் கொண்டு சேர்த்தாலும் இது போன்ற ஒரு அரைவேக்காடு போதும் எல்லாவற்றையும் பாழுஞ்சுவர் செய்வதற்கு..வெளியில் வந்து அந்த ஆளைத் தேடினேன்..காணோம்..தப்பித்தான்..எது நல்ல சினிமா என்ற தலைப்பைப் பார்த்து குட்டைப்பாவாடையுடன் ஆடுவார்கள் என்று நம்பி வந்து ஏமாந்த வேதனை அந்த ஆள் முகத்தில் தெரிந்தது. 



தியடோர் பாஸ்கரன் மனம் இரும்புத்திடம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். கேள்விகளில் இளைய தலைமுறையினர் கேட்டவை கொஞ்சம் நம்பிக்கை வந்தது. கல்லூரி மாணவ மாணவிகள் பலருக்கு இந்த நிகழ்வு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிறகு ஒன்பது நிமிட குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் ஒலியைக் கையாண்ட விதமும் கதாபாத்திரங்கள் மற்றும் பிம்பங்களின் மையக் கருத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சியமைப்புகளாலும் இருந்தது. பார்வையாளர்களை பிரமிக்க வைத்த வசனமற்ற உணர்வுகளும் காட்சிகளும் வெகுவாக பாதித்தது. எனக்கு முன்கூட்டியே அதன் காட்சி நகர்த்தல்கள் தெரிந்து விட்டாலும் படமாக்கிய விதம் அற்புதமாக இருந்தது.  உணவருந்தும் சில பிம்பங்கள். ஒரு சாதாரண ஆஸ்பெஸ்டாஸ் செட்டில் அவருடைய வீடு. கடைசியில் அந்தக் குழந்தை அளித்த சாக்லெட்டை பிரித்து இருவரும் பாதிபாதியை ஊட்டிக்கொண்டு மகிழ்கிறார்கள். படம் முடிவடைகிறது. பலத்த கைதட்டல். இந்தப்படத்தில் ஒலியும் பிம்பங்களும் காட்சிகளும் உணர்வுகளும் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கிறது. வசனங்களோ திடீர் திருப்பங்களோ மிகையோ செயற்கையோ ஏதுமின்றி கச்சிதமான எடிட்டிங் மூலமாக படமாக்கியிருக்கிறார்கள்.


பின்னர் நடந்த உரையாடலில், பிரச்சாரப் படம் சம்பந்தமான கேள்விக்குப் பதிலளித்த தியடோர் பாஸ்கரன் பிரச்சாரப் படங்கள் வருவதில் தவறில்லை. அவை காலங்காலமாக வந்துகொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக

நாட்டில் மிகக் கொடுமையான சூழல் என்று வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் மிகுந்த துன்பத்தில் இருக்கிறார்கள். ஒரு கலைஞனாக ஒரு படைப்பாளியாக திரைப்பட இயக்குநராக இருக்கும் பட்சத்தில் இந்தப்பிரச்சனை தீர ஒரு படம் எடுப்பார்கள் அந்தப்படம் மக்கள் அபிமானத்தைப் பெறும் பிறகு அந்தப் படம் பிற்காலத்தில் பிரச்சாரப்படம் என்று பேசப்படும். 50 களில் 16 எம் எம் புரொஜக்டர் சிஸ்டம் வந்தது அவை இந்திய கிராமங்கள் தோறும் சென்று படங்களைக் காண்பித்தது. ஒரு வரலாற்று நிகழ்வு அது. அந்த அரிய வகை முயற்சியை வளர விடாமல் தடுத்தவர்கள் பாம்பே ஸ்டுடியோ முதலாளிகள். பிறகு அரசும் சில காலம் டாக்கு மெண்ட்ரிகளை எடுத்தது. இப்போது அதுவும் நின்று போய்விட்டது..

நான் டெல்லியில் இருந்த போது குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்வோம் அங்கு உலகப் பிரசித்த பெற்ற சினிமாக்களை ஒரு காட்சி இரு காட்சி என்று திரையிடுவார்கள். நாங்கள் பார்க்கிற வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அதுபோலத்தான் நீங்களும் சினிமாவைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.


வெறுமனே எனக்கு நேரம் இல்லை என்பதும் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இப்பொழுது டிவிடிகள் மற்றும் ஹோம் தியேட்டர்கள் வசதி இருக்கிறது நல்ல படங்களை நீங்கள் வாங்கிப் பார்க்கலாம். நான் சில கல்லூரிகளில் திரைப்படங்களின் சிடிகளுக்கான லைப்ரரி வையுங்கள் என்றேன். அவர்கள் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். நமது சமூகத்தில் சினிமா பார்ப்பதும் அது பற்றிப் பேசுவதும் ஒழுக்கக்கேடாக விமர்சிக்கப் படுகிறது. நம் சமூகம், நாம் நல்ல சினிமா பார்ப்பதற்கும் பேசுவதற்கும் கற்றுத்தரவில்லை. நான் எந்த சினிமாவும் பார்க்காமலேயே என் கல்லூரிபருவத்தை முடித்திருந்தேன் என்பது எவ்வளவு பெரிய இழப்பு. 

தியோடர் ஆற்றிய உரையின் ஒலி வடிவத்தினை இங்கே கேட்கலாம்:


             

கலந்துரையாடல் நிகழ்வில் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் சினிமா ஆர்வலர்கள்,பத்திரிக்கையாளர்கள், பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஊடகவியலாளர்கள் என சுமார் 200 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டது அதிசயமாக இருந்தது. சினிமா என்கிற தலைப்பிற்காக வந்திருந்தாலும் அருவியின் நிகழ்வுகள் தனித்துவம் மிக்கதாக அமைவதும் ஒரு காரணம். முதலில் சால்வடார் டாலியின் ஓவியங்கள் பற்றிய டாக்கு மெண்ட்ரி திரையிடப்பட்ட போது அரங்கிற்கு நான் போயிருக்க வில்லை. என்பது வருத்தமான வியம்.

நிகழ்வுகளை திரு சீனிவாசன், திரு.சூரிய நாராயணன், நை.ச.சுரேஷ்குமார் ஒருங்கிணைத்திருந்தனர். கோணங்கள் ஆனந்த்.பொன்.சந்திரன் உள்ளிட்ட முக்கியமான திரைமொழி ஊடகவியலாளர்கள் குறுந்த்,திரைப்படக் கல்வி மாணவ மாணவிகள் கலந்து கொண்டது நிச்சயமாக அவர்களுக்கு உதவிகரமாக அமைந்திருக்கும்.  


நிறைகள் அருவியின் உழைப்பில் உள்ளது. பதிவில் ஏதேனும் குறைகள் பிழைகள் தவறுகள் இருந்தால் அவை என் கேள்விஞானம் சார்ந்தவை. அதற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்.. மகத்தான பல துறையின் ஆளுமை மதிப்பிற்குரிய தியடோர் பாஸ்கரன் நிகழ்வு மறக்க முடியாதது. நன்றி..

நன்றி: திரு இளஞ்சேரல், கோவை.
courtesy: http://elancheral-elancheral.blogspot.in/2012/12/blog-post_16.html