கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
 திரு ஸ்ரீனிவாசன். கரவாஜியோ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து  பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால் கவிதைகளை வாசிப்பவர்களும் கவிதை பற்றி பேசுபவர்களும் மிகக் குறைவு என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு. நவீன கவிதைத்தளத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து விரிவான பல தளங்களில் இயங்கி வரும் வெகு சிலரில் முக்கியமானவர் திரு சுகுமாரன் அவர்கள். முத்திரை பதிக்கும் மொழிபெயர்ப்புகள் கட்டுரைகள் என தொடர்கிறது இவர் பயணம் என்றார்.


இவரது சிறப்பம்சங்களாக நேர்மைத் தன்மையும் கறார்த் தன்மையும் குறிப்பிடுவேன்என்று சொல்லும் வா மணிகண்டனின் கூற்றை முழுமையாக அருவி” வழி மொழிவதாகச் சொன்னார். தொடர்ந்து பேசிய சுகுமாரன் அவர்களின் உரை, மலையாள இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு உட்பொருளை விளங்கிக்கொள்ளும் முயற்சியாகவும், தனது தேடலின் விரிவான தளத்தில் அவர் சென்றடையும் அல்லது சென்றடைந்துள்ளதாக நம்பும் பாங்கினை நம்மை நெருங்கி வந்து ஒரு தோழனின் வாஞ்ஜையுடன் பகிந்து கொண்டார். தற்கால மலையாள சிந்தனைப் போக்குகளை ஒருங்கு நோக்கிய அனுபவ பூர்வமான வெளிப்பாடாய் இருந்தது இவரது உரை. எந்த சித்தாந்தமும் கட்டுப்படுத்தாத தனது எழுத்துகள் மூலம் தமிழில் ஒரு நிலையான இடத்தினை தனக்கென தக்க வைத்துக்கொண்டுள்ள சுகுமாரன் அவர்களது உரையின் வரி வடிவத்தினை கீழே தந்துள்ளோம்.

 
சமகால மலையாள இலக்கியம் - ஒரு பார்வை

@

அனைவருக்கும் வணக்கம்.

இந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக  கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புக்குச் செல்வதற்கு முன்னால் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை தலைப்புக்கு நேரடித் தொடர்பில்லாதவையாகவும் இருக்கலாம். எனினும் இந்த அரங்கில் அவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் தேர்ந்த சொற்பொழிவாளன் அல்லன். அப்படி இருந்தும் நிறைய மேடைகளில் பேசியிருக்கிறேன். முப்பது முப்பதைந்து வருடங்களாக சீரிய இலக்கியத் தளத்தில் இயங்கி வருகிறவன் என்பதற்கு அளிக்கப்படும் சலுகையாக இருக்கலாம். அல்லது இவ்வளவு காலம் உழன்று கொண்டிருப்பதனால் பொருட்படுத்தக் கூடிய கருத்துகளைச் சொல்ல முயற்சி செய்கிறேன் என்ற கண்ணோட்டமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இலக்கியம் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி இருக்கிறது. 'அருவி' அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் அளித்திருக்கும் இந்த வாய்ப்பு அதிகப்படியான மகிழ்ச்சியைத் தருகிறது. இது என் ஊர். நான் பிறந்து வளர்ந்து இலக்கியம் பயின்ற ஊர். என்னுடைய ஊரில் நான் அதிகக் கூட்டங்களில் பேசியதில்லை. பேச வாய்த்த ஓரிரு கூட்டங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பேச்சாளர்களில் நானும் ஒருவன் என்ற  வகையில்தான் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட பக்க வாத்தியக் கலைஞன்போல. ஆக என் சொந்த ஊரில் நான் செய்கிற முதல் தனிக் கச்சேரி இது.இப்படிப் பட்ட வாய்ப்புத் தருகிற மகிழ்ச்சி அலாதியானதுதான். அதற்காக 'அருவி' அமைப்பின் நண்பர்களுக்கு என்னுடைய நன்றி.

இலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். அந்தப் புரிந்து கொள்ளல் மூலம் நட்புகள் சாத்தியமாகும் என்று உறுதியாக நம்புகிறேன். அதற்கு இந்தக் கூட்டமும் ஓர் உதாரணம். 'அருவி' அமைப்பின் நண்பர்கள் முன்பே அறிமுகமானவர்கள் என்பது இந்த நிகழ்ச்சிக்காக அழைத்தபோது தெரியவந்தது. எண்பதுகளின் காலப் பகுதியில் இதே நண்பர்கள் 'உயிர்மெய்' என்று ஒரு சிற்றிதழைக் கொண்டு வந்தார்கள். அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கத்தை விட அதன் முகப்பே நினைவில் தங்கி இருக்கிறது. 'ர்' எழுத்துக்கு வைக்கப்பட்டிருந்த பொட்டு வடிவப் புள்ளியை வைத்தே பத்திரிகையை அடையாளம் காண்கிறேன். அந்த இதழில் எழுதியிருப்பதாகவும் ஞாபகம். கவிதையா மொழிபெயர்ப்பா எது என்று நினைவில்லை. அன்று பத்திரிகை நடத்திய அதே ஆர்வத்துடன் இப்போது இந்தக் கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த இலக்கியப் பிடிவாதம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுடன் அந்தப் பிடிவாதத்தில் பங்கு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த நண்பர்களைச் சந்திக்கிறேன். முன்பிருந்த அதே ஆர்வத்துடன் அவர்கள் செயல்படுவதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறது. என்ன,இருபதை ஒட்டிய வயதில் பார்த்த இளைஞர்கள், நாற்பது ஐம்பது  வயதான இளைஞர்களாகப் பார்த்துக் கொள்கிறோம்.சரி, இளமை ஆண்டுக் கணக்கிலா இருக்கிறது?  இன்று நான் பேச வேண்டிய பொருள் 'சம கால மலையாள இலக்கியம்'. நண்பர் சீனிவாசன் இந்தத் தலைப்பைச் சொன்னபோது சரியென்று ஒப்புக் கொண்டேன். தமிழ் இலக்க்கியங்களைத் தீவிரமாக வாசிக்கத்  தொடங்கிய அதே காலத்தில் மலையாள நவீன இலக்கியத்தையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தத் தலைப்பில் பேசுவது எளிது என்று தோன்றியது. ஆனால் இதற்காக உட்கார்ந்தபோதுதான் என்னுடைய இயலாமை புரிந்தது. பிரசித்தமான மலையாளப் பழமொழி சொல்வதுபோல 'தும்பியைக் கொண்டு கல்லெடுப்பிக்குன்ன பணி' என்று புரிந்தது. ஆக என்னுடைய பேச்சு வரையறைகளுக்கு உட்பட்டது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.இதை என்னுடைய முன் ஜாமீனாகவும் எடுத்துக் கொள்ளலாம். எச்சரிக்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

சம கால மலையாள இலக்கியம் என்பதை எப்படி வரையறுப்பது என்பது முதல் சிக்கல். ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தால் Contemporary Literature. உலகப் புகழ் பெற்ற வின்டேஜ் பதிப்பகம் 'சமகால உலக இலக்கியம்' என்ற பெயரில் ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியக் கடல்பகுதி நாடுகள் என்று விரிவாகத் தொகுக்கப்பட்ட நூல். அதில் இடம் பெறும் அந்தந்த நாடுகளின் முதல் கவிஞர்களே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்கள். தமிழில் சமகாலக் கவிதைகளைத் தொகுத்து நண்பர் ராஜ மார்த்தாண்டன் ஒரு தொகுப்பை வெளியிட்டார். 'கொங்குதேர் வாழ்க்கை' .அதன் முதல் கவிஞர் இன்றைக்கு இருந்தால் நூறு வயதைக் கடந்திருக்கும்  ந.பிச்சமூர்த்தி. இதிலிருந்து ஒரு செய்தியை அடையலாம்.இலக்கியத்தில் சமகாலம் என்பது இன்றைச் சார்ந்ததல்ல. அல்லது அந்த இன்று நாள் கணக்கிலோ மாதக் கணக்கிலோ சுருக்கப்படுவதல்ல. ஒரு மொழியில் நிகழும் புதிய உணர்வு நிலையைச் சார்ந்தது. புதிய மாறுதல்கள் சார்ந்தது.அப்படியான ஒரு திசை மாற்றம் மலையாளத்தில் ஏற்பட்ட புள்ளியிலிருந்து தொடங்கி இன்றுவரை எழுதப்பட்டவற்றையே சம கால இலக்கியம் என்று சொல்ல விரும்புகிறேன். மலையாளக் கவிதையில் குமாரன் ஆசானிடமிருந்தும் உரைநடையில் சி.வி.ராமன் பிள்ளையிடமிருந்தும் புதிய உணர்வுநிலைகள் தொடங்குவதாக எண்ணுகிறேன். இவர்களின் தொடர்ச்சியாகவே சமகால மலையாள இலக்கியம் முன் நகர்ந்திருக்கிறது. குமாரன் ஆசானை முன்னிலைப் படுத்தாமல் மலையாளக் கவிதையையோ 'மார்த்தாண்ட வர்மா' என்ற நாவலை எழுதிய சி.வி.ராமன் பிள்ளையை பொருட்படுத்தாமல் மலையாள உரை நடையையோ மதிப்பிட முடியாது. ஆனால் இவர்களிடமிருந்து தொடங்கி சமகால மலையாள இலக்கியம் பற்றி அதிகார பூர்வமாகப் பேச என்னால் முடியுமா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது.ஏனெனில் மலையாள இலக்கியத்துடனுனான என்னுடைய உறவு ஒரு தீவிர வாசகன் என்ற நிலையில் மட்டுமே. அது மட்டுமல்ல, அவ்வளவு நீண்ட காலத்தை விரிவாகப் பேச இந்த கூட்டம் அனுமதிக்காது. எனவே சமகால மலையாள இலக்கியம் என்று நான் எடுத்துக் கொள்வது நவீனத்துவம். பின் நவீனத்துவம் என்று விமர்சகர்கள் குறிப்பிடும் எழுத்துகளைத்தான். 1970 கள் முதல் 2010 வரையிலான காலப் பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எழுத்துகளைத்தான். இது என்னுடைய முதல் வரையறை.   
நான் விமர்சகனல்லன். இலக்கியத்தைக் கையாளுவதற்கு விமர்சகர்கள் பயன்படுத்தும் எந்தக் கருவிகளும் கோட்பாடுகளும் என்வசம்இல்லை. எனது வாசிப்பு, அவற்றிலிருந்து பெறும் அவதானிப்பு, அதன் மூலம் நான் அடையும் உணர்வு நிலை இவைதாம் என் அணுகுமுறையின் அலகுகள். இவை முற்றிலும் என்னுடைய ரசனை சார்ந்தவை. இந்த ரசனையில் தமிழிலக்கியம் சார்ந்த வழிகளும் திசைகளும்தான் முதன்மைபெற்றிருப்பவை.  மலையாள வாசகனாக எனக்கு முக்கியமானது என்று தோன்றும் ஒரு படைப்பு தமிழ் வாசகனாக அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றாமல் இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது.வி.கே.என்னை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். விகேஎன் என்ற பெயரில் எழுதிய வடக்கே கூட்டால நாராயணன் குட்டி நாயர் மலையாளப் புனைவெழுத்தில் தனித்த உதாரணம். பையன் கதைகள் என்ற பெயரில் அவர் எழுதிய சிறுகதைகளும் ஆரோஹணம் என்ற நாவலும் முக்கியமானவை.மலையாள வாசகன் என்ற நிலையில் எனக்கு வி.கே.என். முக்கியமானவர். மலையாளப் பண்பாட்டின் கூறுகளை - கதகளி, வட்டார வழக்கு, மலையாளி உளவியல் - மிகத் தேர்ச்சியாக முன்வைத்தவர். எள்ளலும் அங்கதமும் பகடியும் நிரம்பிய நடை அவருடையது. ஆனால் அதைத் தமிழில் பயின்ற ஒரு மனதால் உள்வாங்கிக் கொள்வது சிரமம். இந்த நிலையில் நான் விகேஎன்னின் படைப்பு முக்கியத்தைப் பற்றித்தான் பேச முடியுமே தவிர தமிழ் வாசகனாக அதை முன்னிருத்தவோ அதை மொழிபெயர்க்கவோ விரும்பமாட்டேன். அப்படிச் செய்வது விகேஎன் படைப்புகளின் உயிரோட்டத்தை இல்லாமல் செய்து விடும் என்று பயப்படுகிறேன். வெறும் மலையாள வார்த்தைகளை வைத்துக் கொண்டு அவர் செய்யும் ஜாலத்தைத் தமிழில் செய்வது அவரைப் பகடி செய்வதாகும் என்று நம்புகிறேன். இது என் ரசனை சார்ந்த இரண்டாவது வரையறை.
தமிழில் நவீன இலக்கியச் சூழலில் ஒரு போலி நம்பிக்கை உலவுகிறது. தமிழை விட மலையாளம் புதிய போக்குகளில் மிகவும் முன்னணியில் இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை எனக்கும் இந்த மூட நம்பிக்கை இருந்தது. இன்று இல்லை.அன்றாடம் மலையாளம் ஒலிக்கும் ஒரு சூழலில் வாழ்கிறேன்.மலையாள வாசகர்களுடனும் இலக்கியவாதிகளுடனும் தொடர்பில் இருக்கிறேன். மலையாள ஊடகத்தில் பணியாற்றியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாகத் தொடர்ந்து மலையாளத்தில் வாசிக்கிறேன். இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது இந்தக் கருத்தை மூட நம்பிக்கை என்றுதான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் அதன் பின்னணி சார்ந்த மேலான படைப்புகளும் சராசரிப் படைப்புகளும் இருக்கின்றன. அது அந்த மொழி வேரூன்றியிருக்கும் வாழ்வியல் பின்புலத்தையையும் கலாச்சார மதிப்பீடுகளையும் பொறுத்தே உருவாகிறது. நம்மிடம் ஒரு வைக்கம் முகம்மது பஷீர் இல்லை. அரபி மலையாளத்தின் தொடர்ச்சியான ஒரு பண்பாட்டுப் பின்னணியிலிருந்தே பஷீரின் எழுத்துகள் பிறப்பெடுத்திருக்கின்றன. அதைத் தன்னுடைய ஆன்மீகத் தேடலின் அடையாளமாக அவர் காண்கிறார். தான் பார்த்த வாழ்க்கையையொட்டியே தனது பார்வையை அவர் உருவாக்கிக் கொள்கிறார்.அந்த மரபு நம்முஇடம் இல்லை. எனவே நமக்கு ஒரு பஷீர் இல்லை. இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இதன் மறுபக்கமாக மலையாள இலக்கியப் பின்னணியில் ஒரு புதுமைப் பித்தன் இல்லை என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் மனத்தில் இறுகிப் போயிருந்த மேட்டிமைக் குணங்களை இரக்கமில்லாமல் கேள்விக்குட்படுத்திய ஓர் ஆளுமைக்கு மலையாளப் பின்புலத்தில் வாய்ப்பில்லை என்பதனால் மலையாளத்துக்கு ஒரு புதுமைப்பித்தன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை.


 
மலையாள எழுத்தாளர் சக்கரியா அசோகமித்திரனின் தண்ணீர்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நவீனத்துவம் என்ற பெயரில் நாங்கள் எதையெல்லாமோ செய்து கொண்டிருந்தோம். எந்தப் பகட்டும் ஆர்ப்பாட்டமுமில்லாமல் இந்த நாவல் வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் முன் வைத்திருக்கிறது. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாவலைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருந்தால்

என்னுடைய இலக்கியப் பார்வையும் வாழ்க்கைப் பார்வையுமே மாறியிருக்கும்.இந்த வார்த்தைகள்தான் தழ்மிலக்கியத்தையும் மலையாள இலக்கியத்தையும் சமநோக்கில் பார்க்கும் பார்வையை எனக்குத் தந்தது. அந்தத் தெளிவிலிருந்துதான் சமகால மலையாள இலக்கியத்தை வாசிக்கிறேன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


 

இன்னொரு முறை என் வரையறைகளைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். ஒன்று - சமகால மலையால இலக்கியம் என்று நான் பேசஎடுத்துக் கொண்டிருப்பது நவீனத்துவம், பின் நவீனத்துவம், தற்காலம் ஆகிய காலப் பகுதிகளைச் சேர்ந்த
எழுத்துகளைத்தான். இரண்டு - என்னுடைய பார்வை ரசனை சார்ந்தது.எனவே விடுபடல்கள் உண்டு. மூன்று - மலையாள இலக்கியத்தை ஒரு தமிழ் வாசகனாக, சம நோக்கில்தான் பார்க்கிறேன்.


இந்தப் பேச்சில் நான் இரண்டு துறைகளைத் தவிர்க்கிறேன். விமர்சனத்தையும் நாடகத்தையும். இரண்டும் மலையாள இலக்கியத்தில் செழுமையான பங்களிப்புச் செய்த துறைகள். கேசரி இதழை நடத்திய ஏ. பாலகிருஷ்ணப் பிள்ளையை மலையாள இலக்கிய விமர்சனத்தின் முதல்வரென்று சொல்லலாம். அவர் மூலம்தான் புதிய நவீன இலக்கியங்களும் விமர்சனப் போக்குகளும் அறிமுகமாயின. குட்டிக் கிருஷ்ணமாரார் இன்னொரு விமர்சகர். இந்திய மரபிலிருந்து பெற்ற உத்திகளைக் கொண்டு மலையாள இலக்கியத்தை மதிப்பிட்டவர். இலக்கியம் ஒரு சமூக விமர்சனமல்ல; தன்னளவில் அதுவே  ஒரு கலை என்ற கருத்தை முன்வைத்தவர். கேசரி தொடங்கிய விமர்சனம் ஒரு படைப்பை முழுமையாகப் பார்ப்பது. அதன் சமூக விமர்சனத் தளத்தை வலியுறுத்திய முற்போக்கு விமர்சனமும் அவரிடமிருந்தே தொடங்கியது. இந்த இரண்டு பெரும்போக்குகளிலிருந்துதான் மலையாள இலக்கிய விமர்சனம் தொடர்ந்து முன்னேறியது. நவீனத்துவம் - ஆதுனிகத - உருவான கால அளவில் படைப்புகளுக்குச் சமமான எழுச்சியையும் வீச்சையும் விமர்சனமும்கொண்டிருந்தது. ஒரு நாவலோ சிறுகதையோ படிக்கும் அதே தீவிரத்துடன் விமர்சனங்களும் வாசிக்கப்படது நவீனத்துவ யுகத்தில்தான். நவீனத்துவப் புனைவெழுத்துகளுக்கும் கவிதைக்கும் மேற்கத்தியத் தத்துவக் கருத்துகளின் தாக்கம் இருந்தது போலவே  விமர்சனத்துக்கும் அதே தாக்கமும் பாதிப்புகளும் இருந்தன. ஆனால் அந்த விமர்சன உத்திகள் மலையாளப் பின் புலத்துக்கு ஏற்றதாகக் கையாளப் பட்டன. எம்.தாமஸ் மாத்யூ, ஆர்.நரேந்திர பிரசாத், வி.ராஜகிருஷ்ணன், கே.பி.அப்பன் ஆகியவர்களை நவீனத்துவ காலத்தின் முக்கியமான விமர்சகர்களாகக் குறிப்பிடலாம். ஓ.வி.விஜயனின் கசாக்கிண்டெ இதிகாசம் நாவல் வாசிக்கப்பட்ட அதே ஆர்வத்துடனும் சுவாரசியத்துடனும் இவர்களின் விமர்சன நூல்கள் வாசிக்கப்பட்டன. மேற்கத்தியக் கருத்தாக்கங்களை இவர்களுடைய விமர்சனம் மலையாளமயமாக்கியது. ஓர் உதாரணம் - வி,ராஜகிருஷ்ணனின் ரோகத்திண்டெ பூக்கள்என்ற விமர்சன நூல். மனிதனுக்கு வரும் நோய் எல்லாக் காலத்திலும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுத்தான் வருகிறது. நோயாகவும் அதன் துன்பமாகவும். ராஜகிருஷ்ணன் அதை ஓர் இலக்கியப் படிமமாக மாற்றினார். உலக இலக்கியங்களிலும் மலையாளப் புனைகதைகளிலும் நோய் எப்படி மனிதச் செயல்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை அந்த நூல் விரிவாகப் பேசுகிறது. காலம் என்ற பிரபஞ்ச அலகை நவீன மலையாளப் படைப்பு எப்படிக் கையாளுகிறது என்பதை கே.பி.அப்பன் தன்னுடைய விமர்சனக் கட்டுரையொன்றில் விளக்கியிருந்தார். இந்த உத்தி அல்லது கருவி மேற்கத்தியப் பட்டறையில் செய்யப்பட்டது. ஆனால் அதன் மலையாளிப் பிரயோகம் புதிய விளைவுகளை ஏபடுத்தியது. அப்பனின் கட்டுரை தரும் விளக்கத்தின் அடிப்படையை உள்வாங்கிக் கொண்டு  வாசித்தபோது, அதுவரை கூட்டுக் குடும்பச் சிதைவைப் பற்றிச் சொல்லும் கதை என்று சாதாரணமாக நினைத்திருந்த எம்.டி.வாசுதேவன் நாயரின் காலம்என்ற நாவல் விரிவான அர்த்தத்தில் துலங்கியது. இன்று அதுபோன்ற விமர்சங்கள் இல்லை என்பது என் கருத்து. நவீனத்துவ கால விமர்சனங்கள் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளுக்கு ஒரு பொதுத்தன்மையை அளித்தன. இன்று அவ்வாறான விமர்சங்கள் இல்லை. ஏனெனில் இன்று எழுதப்படும் படைப்புகள் மேற்கத்திய அல்லது பிற உலக இலக்கியப் பாதிப்புகளிருந்து வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொள்ள எத்தனிப்பவை. ஆனால் அவற்றை விளக்கவரும் விமர்சனமோ பிற கருத்துகளை அப்படியே அவற்றின் மீது பொருத்திப் பார்ப்பவை. படைப்புக்கும் விமர்சனத்துக்கும் இடையிலிருக்கும் இந்த ஒவ்வாமை விமர்சனத்தை நகல் எடுப்பாக மாற்றுகிறது. செயற்கையானதாக மாற்றுகிறது. இந்தப் போக்கில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். இந்தக் கருத்தின் விளைவாக விமர்சனத்தைப் பற்றி அதிகம் பேச முடியாமல் போகிறது. 
மலையாள நவீன இலக்கியத்தில் செழுமை சேர்த்த இன்னொரு துறை நாடகம். இடதுசாரி சிந்தனைப் பரவல் காரணமாக நாடகங்கள் மலையாளிகளின் கலாச்சார வாழ்வில் தவிர்க்க இயலாத இடம் பெற்றிருந்தன. கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படித்து கட்சி உறுப்பினரானவர்களை விட தோப்பில் பாசி எழுதிய நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கிநாடகம் பார்த்து கம்யூனிஸ்டானவர்கள் அதிகம் என்று சொல்லப்படுவது உண்டு. நிகழ்த்துவதற்காகவே எழுதப்பட்ட நாடகங்கள் கூட  அவற்றின் வாசக வரவேற்பு காரணமாக நூல் வடிவம் பெற்றன.இந்த சுமுகமான சூழல் புதிய நாடக முயற்சிகளுக்கும் நாடக எழுத்துக்கும் இடம் கொடுத்தன.அவற்றில் இலக்கியத்தன்மையும் இருந்தன. என்.என்.பிள்ளை. ஸ்ரீகண்டன் நாயர், சி.ஜே.தாமஸ், ஜி.சங்கர பிள்ளை ஆகியோர் நடிப்பதற்காக எழுதிய நாடகங்கள் இலக்கியப் பிரதிகளாகவும் இருந்தன. இன்று அந்தச் சூழல் இல்லை. கவிஞராக அறிமுகமாகி நாடகச் செயல்பாட்டாளராக மாறிய காவாலம் நாராயணப் பணிக்கர்தான் மலையாள நாடகத்தின் இன்றைய முகம். நாட்டார் மரபிலிருந்த கூறுகளை வைத்து அவர் உருவம் கொடுத்த தனது நாடகம்தான் நவீன நாடகமாகக் கருதப்படுகிறது. இவை நிகழ்த்துவதற்காக எழுதப்பட்டவை. வாசிப்புக்கு ஈடு கொடுக்க மறுப்பவை. எல்லாருக்கும் எந்த முன் தீர்மானமும் இல்லாமல் அணுகத் தகுதியான நாட்டார் கலை எப்படி ஒரு புதிரான கலையாக மாறியது என்பதே எனக்குப் புதிராக இருக்கிறது. அந்தப் புதிர்த்தன்மைக்கான சலுகையில் நாடகத்தை விடுவிக்கிறேன்.

ஆக, நாவல், சிறுகதை ஆகிய புனைவெழுத்துகளையும் கவிதையையும் மட்டுமே சம கால மலையாள இலக்கியமாகமிஞ்சுகிறது. சில ஆண்டுகள் முன்புவரை இலக்கியப் பிரதிகளை வாசிப்பது மட்டுமே வாசிப்பு என்று கருதப்பட்டு வந்தது. மலையாளத்தில் மட்டுமல்ல; அநேகமாக எல்லா மொழிகளிலும். இன்று வாசிப்பின் எல்லை விரிவாகியிருக்கிறது. இலக்கிய வாசிப்பு மட்டுமல்ல;அறிவுத்துறை நூல்களின் வாசிப்பும் அதிகரித்திருக்கிறது. அவை இலக்கியத்தையும் பாதிக்கின்றன. சூழலியல் சார்ந்த வாசிப்பு ஓர் உதாரணம். மலையாளத்தில் வெளிவந்த ஒரு நூலின் பொருள் - கதையும் சுற்றுச் சூழலும் (கதையும் பரிஸ்திதியும்). இதுவரை ஒடுக்கப்பட்டு வந்த மனிதர்களின் வாழ்க்கை வாசிப்பின் பொருளாகிறது. ஆதிவாசிப் பெண்ணான சி.கே.ஜானுவின் வாழ்க்கையும், பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலாவின் அனுபவங்களும் திருடனான மணியன் பிள்ளையின் சாகசங்களும் வாசிப்பின் பொருளாகின்றன. இந்தத் திருப்பு முனையான பின்புலத்தில் புனைவுகளையும் கவிதையையும் மட்டுமே சம கால இலக்கியம் என்று சொல்வதில் ஒரு பொருத்தமின்மை இருப்பதாகத் தோன்றுகிறது. இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

உரையாடல் வசதிக்காக சம கால மலையாள இலக்கியத்தை ஆரம்பக் காலம், மறுமலர்ச்சிக் காலம், நவீனத்துவம். பின் நவீனத்துவம், தற்காலம் என்று வகைப்படுத்தலாம். ஆரம்பக் காலப் படைப்புகளில் ஒரு புதிய இலக்கிய உணர்வுக்கும் வாழ்க்கைப் பார்வைக்குமான கரட்டு வடிவத்தைப் பார்க்கலாம். இவை பெரும்பான்மையும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.  வேங்ஙயில் குஞ்ஞிராமன் நாயரால் எழுதப்பட்ட முதல் மலையாளச் சிறுகதையான வாசனா விக்ருதிஎன்ற கதை இன்றைய வாசகப் பார்வையில் எந்த சலனத்தையும் உண்டாக்குவதில்லை. மாறாக ஆரம்பக் கால நாவல்களில் ஒன்றான மார்த்தாண்ட வர்மா ( சி.வி.ராமன் பிள்ளை) இன்றும்  அதன் மொழி நடைக்காகவும் அது வெளிப்படுத்தும் மனிதச் சூழலுக்காகவும் இலக்கிய முக்கியத்துவம் பெறுகிறது.
மறுமலர்ச்சிக் கால எழுத்துக்கள்தாம் இலக்கியம் என்ற தகுதியைப் பெறுபவை. தகழி சிவசங்கரப் பிள்ளை,வைக்கம் முகம்மது பஷீர், பொன்குன்னம் வர்க்கி,பி.கேசவதேவ், எஸ்.கே.பொற்றேக்காடு, லலிதாம்பிகா அந்தர்ஜனம் ஆகியவர்களை மறுமலர்ச்சி எழுத்தின் நடைமுறையாளர்கள் எனலாம். அன்று நடைமுறையிலிருந்த கற்பனாவாதக் கதைகளுக்கு மாற்றாக எழுதப்பட்டவை இவர்களுடைய கதைகள். ஜீவன் சாகித்ய பிரஸ்தானம் என்ற பெயரில் அறியப்பட்ட வாழ்விலிருந்து இலக்கியம் என்ற போக்கை அடையாளப்படுத்தியவை இந்தக் கதைகளும் நாவல்களும். சரியாகச் சொன்னால் பிரச்சாரத் தொனியோ முன் தீர்மானமோ இல்லாத முற்போக்கு எழுத்தின் வகை மாதிரிகள் இவை. இந்த எழுத்தாளர்களின் நோக்கும் கலையும் வேறுபட்டவை. ஆனால் ஒரு பொது இயல்பில் இவை இணைந்தன. மனிதனை சமூக உறுப்பாகவும் பொருளாதாரத்தால் வரையறுக்கப்படுபவனாகவும் சித்தரித்தவை. இதில் விதி விலக்கு பஷீர். பஷீரின் கதை மாந்தர்கள் இந்த இயல்பைக் கொண்டவர்களாக இருந்த அதே சமயம் தனித்துவமான குணாம்சம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஏசு நாதர் மரச் சிலுவையில்தானே அறையப்பட்டு மரித்தார். அவருக்கு எதற்காக தங்கச் சிலுவைஎன்று பஷீரின் தோமா பாதிரியாரிடம் கேள்வி கேட்கிறான்.தோமா ஒரு திருடன். தேவாலயத்தில் தங்கச் சிலுவையைத் திருடிய திருடன். அவனிடமிருந்து வரும் இந்தக் கேள்விதான் பஷீரை தனிக் கலைஞராகக் காட்டியது. மலையாளப் புனைவெழுத்தில் இன்றும் புதுமை மாறாத எழுத்துக்கள் பஷீருடையதாக இருப்பதும் இந்தத் தனித்தன்மையால்தான். பஷீரின் கதை மாந்தர்கள் சமூகப் பண்டங்களாகவும் பொருளாதார சிக்கல்களில் தவிப்பவர்களாகவும் இருக்கும் அதே சூழ்நிலையில் தனி மனித இயல்பு கொண்டவர்காகவும் இருந்தனர். தனி உளவியல் கொண்டவர்களாகவும் இருந்தனர். மற்ற எழுத்தாளர்கள் படைத்த மாந்தர்கள் சமூகம் சார்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்களைத் தனி மனிதர்களாகக் காண்பது கடினம். தகழியை ஓர் உதாரணமாகக் காட்டலாம். அவரது ஆரம்ப நாவல்களில் இடம் பெறும் மாந்தர்கள் சமூக மனத்தின் வடிவங்களாகவே இருப்பதைப் பார்க்கலாம். தோட்டியின் மகன் நாவலில் வரும் இசக்கிமுத்து அவன் சமூகத்தின் பிரதிநிதி. அவனுக்கு தனித்த உளவியல் இல்லை. பிற்காலத்தில் அவர் எழுதிய செம்மீனில்தான் கதை மாந்தர்கள் அவரவருக்குரிய உளவியலின் வடிவங்களாகச் சித்தரிப்புப் பெறுகிறார்கள்.

இதற்கு பிந்தைய எழுத்துகளில் சமூக வாழ்க்கையின் சித்தரிப்புக்கு இணையாக தனி மனித நெருக்கடிகளும் காட்டப்பட்டன. எம்.டி. வாசுதேவன் நாயர். டி.பத்மநாபன், மாதவிக் குட்டி, காரூர் ஆகியவர்களின் கதைகளில் மனிதனின் அந்தரங்க சிக்கல்களே முதன்மையாகப் பேசப்பட்டன.அந்தச் சிக்கல்களுக்குக் காரணமான சமூகப் பின்னணி மங்கலாகவே தீட்டப்பட்டது. பெரும்பான்மையான பாத்திரங்கள் அவர்களது வாழ்நிலைகளிலிருந்து அந்நியமானவர்கள். கூட்டுக் குடும்பத்தின் சிக்கல்களால் அந்நியப்பட்டவை எம்.டியின் பாத்திரங்கள். சொந்தத் தனிமையில் உழல்பவர்கள் டி.பத்மநாபனின் மனிதர்கள். சாதி உயர்வின் சிறைக் கம்பிகளைப் பிடித்து ஓயாமல் உலுக்கிக் கொண்டிருந்தவர்கள் லலிதாம்பிகாவின் ஆண்களும் பெண்களும். பெண்என்பதால் மறுக்கப்படும் உரிமைகளுக்காக வதைபட்டவர்கள் மாதவிக் குட்டியின் பாத்திரங்கள். மனித நன்மையில் நம்பிக்கை வைத்ததால்தனிமைப் பட்டவர்கள் காரூரின், உரூபின் மனிதர்கள். இதன் அப்பட்டமான உதாரணமாக உரூப் எழுதிய நாவல் சுந்தரிகளும் சுந்தரன்மாரும்’.  இந்தப் படைப்புகளில் சமூக ரீதியாகவும் மனம் சார்ந்தும் சித்தரிக்கப்பட்ட மனித அனுபவங்கள் நவீனத்துவ எழுத்துகளில் இருப்பு சார்ந்து பேசப்பட்டன. மனிதனின் தனி இருப்பு, சமூக இருப்பு, உளவியல் இருப்பை விட இவ்வளவு பெரிய உலகில் அவன் இருப்பது பற்றிய கவலையும் விசாரணையும்தான் நவீனத்துவ சிறுகதைகளிலும் நாவல்களும் இடம் பெற்றன. இந்தவகை சார்ந்த எழுத்துகள்தாம் சமகால மலையாள இலக்கியத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தின. ஓ.வி.விஜயன், எம்.முகுந்தன், காக்கநாடன்,சேது, ஆனந்த், பி.பத்மராஜன், புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆகியோரது படைப்புகளை நவீனத்துவ எழுத்துகள் என்று வகைப்படுத்தலாம். ஒரு பெரும் பிரபஞ்சத்தின் நடுவில் நிராதரவாக நிற்க விதிக்கப்பட்ட மனிதர்களின் கையறு நிலையை இந்தப் படைப்புகள் முன் வைத்தன. இந்தஎழுத்தாளர்களின் வரிசையில் பேசப்படவேண்டியவர்கள் சக்கரியாவும் எம்.சுகுமாரனும்.ஆனால் நவீனத்துவம் கைக்கொண்டிருந்த பொதுத் தன்மையிலிருந்து விலகி நின்றவர்கள். சக்கரியா மிகப் புதிய நடையாலும் சுகுமாரன் பிரச்சாரத் தொனியில்லாத சமூகப் பார்வையாலும் தம்மை வேறு படுத்திக் கொண்டார்கள். நவீனத்துவம் -ஆதுனீகத - ஓர் இயக்கமல்ல; ஆனால் அதற்கு ஒரு பொது இயல்பு இருந்தது. சம கால மலையாள இலக்கியத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய இலக்கியப் போக்கு இதுதான் என்று என்ணுகிறேன். ஒரு முக்கியமான அம்சத்தையும் இந்தப் பொது இயல்பில் வாசகனாகக் காண முடிகிறது. ஆதுனீகதா என்ற நவீனத்துவ எழுத்தில் ஒரு பெண் படைப்பாளி கூட இல்லை.
 அறுபதுகளின் இறுதியில் தொடங்கிய நவீனத்துவத்தின் வீச்சு எண்பதுகளின் நடுப் பகுதியில் வலு விழக்கத் தொடங்கியது. நவீனத்துவம் முன்வைத்த இருப்பின் பிரச்சனைகளை வேறு ஒரு பார்வையில் பார்க்கும் எழுத்துகளை பின் நவீனத்துவம் வெளிப்படுத்தியது. நவீனத்துவம் இருப்பின் பொதுக் கேள்விகளைக் கொண்டிருந்தது. பின் நவீனத்துவம் அதே கேள்விகளைப் பிரத்தியேகமானவையாக மாற்றியது. மனிதர்களுக்கு ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று நவீனத்துவம் கேட்டது. எனக்கு அல்லது திருவாளர் இன்னாருக்கு ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று கேட்டது பின் நவீனத்துவம். நவீனத்துவ எழுத்தாளர்கள் பலர் தொடர்ந்து எழுதியும் புதிய எழுத்தாளர்கள் என்ற நிலையில் கெ.பி.ராமனுண்ணி, சி.வி.பாலகிருஷ்ணன், என்.பிரபாகரன், கே.பி.நிர்மல்குமார், சி.ஆர்.பரமேஸ்வரன்,டி.வி.கொச்சுபாவா, வி.பி.சிவகுமார், விக்டர் லீனஸ், எம்.ராஜீவ்குமார், எஸ்.வி. வேணுகோபன் நாயர் என்ற பெரிய பட்டியல் இருந்தும் இந்தக் கதைகள் மலையாள இலக்கியத்தைத் திசை மாற்றவில்லை என்று தோன்றுகிறது. மாறாக இந்தக் காலப் பகுதியில் எழுதப்பட்ட சில நாவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இன்றும் நிலைபெறுகின்றன. சி.ஆர்.பரமேஸ்வரனின் பிரகிருதி நியமம்’,கே.பி.ராமனுண்ணியின் சூஃபி பறஞ்ஞ கத’, கே.ஜே.பேபியின் மாவேலி மன்றம்சி.வி.பாலகிருஷ்ணனின் ஆயுசிண்டெ புஸ்தகம்ஆகியவை முக்கியமானவை. பிரகிருதி நியமம் - சூழலியல் சார்ந்தும் சூஃபி பறஞ்ஞ கத தொன்மையைச் சார்ந்தும் மாவேலி மன்றம் ஆதிவாசி வாழ்க்கை சார்ந்தும் ஆயிசிண்டே புஸ்தகம் ஆண் பெண் உறவின் புதிய புதிரைச் சார்ந்தும் எழுதப்பட்டவை. நேரடியாக அல்லாமல் இவை பின் வந்த நாவல்களுக்கான புதிய கதைக் களத்துக்கு வழிகோலின. பின் நவீனத்துவ காலத்திலும் பெண் படைப்பாளிகள் இல்லை என்பதைக் கவனித்திருக்கிறேன்.

தொண்ணூறுகளுக்குப் பின்னர் வந்த தலைமுறைதான் சமகால இலக்கியத்தில் மீண்டும் புதிய உணர்வையும் எழுச்சியையும் கிளறச் செய்தவை. அதே சமயத்தில் உருவான பெண்ணெழுத்தும் ஆதி வாசி தலித் எழுத்துகளும் இந்த எழுச்சிக்கு வலுவைஅதிகரிக்கச் செய்தன. பாபத் தரை என்ற சிறுகதை மூலம் சாரா ஜோசப்பும் படியிறங்கிய பார்கவி என்ற சிறுகதை மூலம் கிரேசியும் பெண் எழுத்தின் வருகையை அறிவித்தார்கள். ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த நாராயண் கொச்சரயத்திநாவல் மூலம் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தினார். ஆனால் தற்காலத்தின் பெரும் வரவு சிறுகதைகள்தான். சுபாஷ் சந்திரன், பி.முரளி,சந்தோஷ் எச்சிக்கானம், தாமஸ் ஜோசப், உண்ணி ஆர். கே.ஏ.செபாஸ்டியன், இ.சந்தோஷ் குமார் ஆகியோரைக் கொண்ட புதிய தலைமுறை புனைவு எழுத்துக்குப் புது நுண்ணுணர்வுகளை அளித்தது. எஸ்.சிதாரா, கே.ஆர்.மீரா, இந்து மேனோன், கே.ரேகா,தனுஜா பட்டதிரிப்பாடு, ப்ரியா ஏ எஸ் போன்ற பெண் படைப்பாளிகள் பெண் நோக்கில் உலகைக் காட்டினார்கள். அதுவரை எதற்காக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்த இலக்கியம் இந்தத் தலைமுறையின் மூலம் எப்படி இருக்கிறோம் என்ற நிலையை விளக்குவதாக மாறியது. இந்த அடிப்படையான மாற்றம் எழுத்து முறையையே மாற்றியது. என்ன எழுதுகிறோம் என்பதல்ல; எப்படி எழுதுகிறோம் என்பதே படைப்பின் நோக்கம் என்று மாற்றியது. தகழியின் புகழ் பெற்ற நாவலான தோட்டியின் மகன்ஒரு தோட்டி ஏன் தோட்டியாக இருக்கிறான் என்பதை ஆராய்ந்தது. சாரா ஜோசப்பின் ஆலாஹயுடெ பெண் மக்கள்நாவல் விளிம்புநிலைக் கிறித்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அலசுகிறது. இந்த வேறுபாடுதான் தற்கால மலையாளப் புனைவெழுத்து வந்து சேர்ந்திருக்கும் மையம் என்று தோன்றுகிறது.

இன்றைய மலையாள கவிதையின் போக்கினை புரிந்து கொள்ளும் விதத்தில் அவர் மொழி பெயர்த்து இக்கூட்டத்தில் நம்மிடையே பகிர்ந்து கொண்ட சில கவிதைகள்…….

அக்காவின் பைபிள்

@

அக்காவின் பைபிளில் இருப்பவை:
தையல் விட்ட ரேஷன் கார்டு
கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்
கந்துவட்டிக்காரர்களின் அட்டை
திருவிழா,பண்டிகை நோட்டீசுகள்
அண்ணன் குழந்தையின் போட்டோ
குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்
ஒரு நூறு ரூபாய் நோட்டு
எஸ் எஸ் எல் சி புத்தகம்.

அக்காவின் பைபிளில் இல்லாதவை:
முன்னுரை
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
நிலப்படங்கள்
சிவப்பு மேலட்டை.

@
மீன்காரன்/ பக் 20/ 2003

         எஸ்,ஜோசப்

கோழியம்மாள்

ஒரு முட்டையிட்டதற்காக
இவ்வளவு உரக்க அலற வேண்டுமா என்று
ஜிம்மி என்ற நாய் கேட்டது
நந்தினிக் குட்டி என்ற பசு கேட்டது
பஞ்சவர்ணம் என்ற கிளி கேட்டது
இடுப்பு முழுக்கப் பலாக் குழந்தைகளுடன்
நிற்கும் பலாவம்மாள் கேட்டாள்
ஆகாசவாணிலிருந்து மிதந்து வரும்
யேசுதாஸ் கேட்டார்
தென்னங்கீற்றில் தொங்கும் காற்று கேட்டது
வாழைகளும் சேம்புகளும் கேட்டன
தேங்காய் எண்ணெய் தடவிய வெயில் கேட்டது
குளித்துத் துவைத்து மாதவிலக்குப் போர்வையை
பாய்க்குள் சுருட்டி வரும் தங்கமணி கேட்டாள்.

யார் கேட்டுமென்ன
அலறிக் கொண்டேயிருந்தாள் கோழியம்மாள்.

பிறகும் கேள்விகள் எழுந்தன
இப்படி அலறுவதால்
ஆம்லெட் தயாரிக்க எடுத்துப் போன
முட்டை திரும்பக் கிடைக்குமா?
இப்படி அலறுவதால்
நாளை முதல் முட்டையிடுவதிலிருந்து விடுதலை கிடைக்குமா?
இப்படி அலறுவதால்
உன்னுடைய தியாக உணர்வைப் புரிந்து கொண்டு
விருந்தாளிகள் வரும்போது
உன்னை அறுக்காமல் விடுவார்களா?
உன்னுடைய அலறலை ஓர் அழைப்பாக ஏற்று
கோழிகளான கோழிகளெல்லாம்
ஒன்றுபடுமா?
அரசியல் சட்டம் திருத்தப்படுமா?

நீங்களெல்லாம் யார், எவர்?
நான் போட்ட முட்டை
நான் போட்ட அலறல் என்று
கேலி செய்துகொண்டு
கோழியம்மாள்
ஒரே ஓட்டமெடுத்தாள்.

 
           விஷ்ணுபிரசாத்
 எளிமை
@

இங்கே இருக்கிறேன் நான்
என்று அறிவிக்க
இனிமையானதொரு
கூவல் மட்டும் போதும்

இங்கே இருந்தேன்
நானென்பதற்கொரு
வெறும் இறகைக்
கீழே போட்டால் போதும்

இன்னும் இருப்பேன்
என்பதற்குச் சாட்சியாக
அடைகாத்த
சூடுமட்டும் போதும்

இதை விட
எளிமையாக எப்படிக்
கிளிகள் வெளிப்படுத்தும்
உயிரை?


      பி பி ராமச்சந்திரன்


தாம்பத்தியம்
---------------

பிறகு
குளிர்ந்த தரையில்
கவிழ்ந்து கிடந்தேன்
ஒரு பனிக்குவியலாக நான்...
நீயுறங்குகிறாய் தூரத்தில்
நிர்வாணமாக
பெய்துமுடிந்த மேகத்தைப்போல
ஆசுவாசமாய்...
நான்
இடி மின்னல் கீறிப்பிடுங்கிய
காயம்பட்ட பூமியாய்...
மண்படலத்துக்குள்ளே
ஆரவாரம், சிரிப்பு,
இளமை, நேசம்.
முதன்முதலில் நீ
உடலில் நிறைந்த நிமிடம்...
இதுவெல்லாம்...
பொய்யா?
குளிர்ந்த தரையில்
நிர்வாணக் கற்சிலையாக
இரத்தம் கசியும் கறுத்த நிலவாக...நான்.                       வி.எம்.கிரிஜா


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 திரு சுகுமாரன் அவர்களின் உரையின் ஒலி வடிவம்


இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில ஒளித்துண்டுகள் :1 comment:

  1. மிக முக்கியமான பதிவு. நான் வர விரும்பி வரமுடியாமல் போய்விட்ட வருத்தத்தின் பெரும் பகுதியை இந்தப் பதிவு நீக்கிவிட்டது. நன்றி.

    ReplyDelete