’புனைவின் மர்மம்’ 
எமது எட்டாம் நிகழ்வை நவீன சிறுகதை எழுத்தாளர் திரு சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவின் மொழி என்ற தலைப்பில் அமைத்திருந்தோம். இந்நிகழ்வு இம்முறை நண்பர்களின் வசதி கருதி காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் நடத்தப்பட்டது. லௌகீகத்துக்கு உள்ள நியாயமான கடமைகளை நிறைவேற்றி நமது நண்பர்கள் வழக்கம் போலவே 1030 முதல் 1100 வரை வந்துகொண்டேயிருந்தார்கள்…….. முண்ணனி இலக்கிய பத்திரிகைகளில் தொடர்ந்து இவர் எழுதுவதால் அவரைப்பரிச்சயம் உள்ள வாசகர்கள் அறியும் வண்ணம் பரந்து பட்ட முயற்சி எடுத்திருந்தும் ஏனோ எமது முயற்சி திருவினையாகவில்லை.

முதலில் கொஞ்சம் சுரேஷ் குமார இந்திரஜித் குறித்து……….

இவரது வடிவம் மரபின் தன்மையற்று, நவீன கலை வெளிப்பாடாய் அறியப்படுகிறது. 80 களில் தனது தனித்துவமான வடிவ நுட்பத்தோடு கதைகளை சொல்லிய விதமே இவருக்கு நவீனத்தன்மையை கொடுத்தது எனலாம். இந்திய வாழ்வின் பல பரிமாணங்களை புதிய மோஸ்த்தரில் தொட்டுச்சென்றுள்ளவை இவரது படைப்புகள் என்பது தெளிவு.


திட்டமற்ற தத்துவவிசாரத்தை சொல்லிச்செல்லும் இக்கதைகள் தமிழ் பொது வெளியில் உலவும் அனுமானங்களை மிக எளிதில் கடந்து செல்லும் திறன் படைத்தவை. வாழ்வின் பல உண்மைகளை உளவியல் தளத்தில், மிக எளிதாக நம்மை அதிர வைக்கும் பாங்கு மேலும் சமூகத்தின் மீதான எள்ளல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவை இவரது எழுத்துக்கள். தொடக்கத்தில், நண்பர் சித்தன் அவர்கள் இவரது ‘ புனைவுகளின் உரையாடல் ’ என்ற சிறுகதையை அனுபவித்து வாசித்த விதமும் கதையின் உள்ளடக்கமும் இவரின் எழுத்தின் செறிவை பறை சாற்றியது என்றால் அது மிகையல்ல.

இந்த நிகழ்வின் ஒலிவடிவம் சில தொழில்நுட்ப காரணங்களால் பதிவேற்ற இயலவில்லை…. ஒரு சில தினங்களில் அந்த கோப்பினை பதிவிடுவோம்…..

கோவை அகத்துறவு இலக்கிய அமைப்பின் திரு இளஞ்சேரல் அவர்கள் எழுதிய இந்நிகழ்வு குறித்த பதிவினை இங்கு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்…..

              
    
புனைவு வாகனம் - இளஞ்சேரல் 

இன்றும் முக்கியமான நாள்தான் என்பேன்.17-6-2012 அலுவலகம் போய் 19-ம் நிகழ்வின் இலக்கியச் சந்திப்பின் அழைப்பிதழ்களைத் தயார் செய்து கொண்டு அருவி நிகழ்விற்குப் போனேன். நகரம் அமைதியாகவும் அதிக பரபரப்புமின்றி உழன்று கொண்டிருந்தது.
காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் தான் சுரேஷ்குமார இந்திரஜித் பங்கு கொண்டு உரையாற்றும் நிகழ்வு. நானும் ஒரு பார்வையாளனாக வந்திருக் கிறேன். வழக்கமாகப் பார்க்கும் வனிதைகளில் குறிப்பாக ஞாயிறுகளில் கவனிக்கும் வனிதைகள் வெகு அழகாக இருக்கிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு தங்கிப் பணிபுரியும் வனிதைகள் தத்தம் விடுமுறைப் பொழுது களை தனக்குப் பிடித்தவனுடன் சுதந்திரமாகத் திரிந்து மகிழ்வாகக் கழிக்கிறார்கள். வில்லன் இல்லாத தனி நகரம்.சாலையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மற்றும் சர்ச்சுகளில் மக்கள் நிரம்ப ஆரம்பித்தார்கள். சர்ச் ஆளுகைக்கு உட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொட்டு பொடிசு பாக்கியி்ல்லாமல் எப்டியோ வந்துவிடுகிறார்கள். எல்லாக் காரியங்களையும் உருப்படியாக செய்யப் பழக்கிக் கொண்டவர்கள் எப்படி பாவிகளாகவும் ஆவி குடிகொண்டவர்களாகவும் இருக்க முடியும் என்று தெரியவில்லை. கிருத்தவர்கள் எல்லாக் காலங்களிலும் எருமை மேல் மழை பெய்தது போலவே இருப்பார்க்ள. எல்லாவற்றிற்கும் ஒரே முகபாவம்தான். வரவு செலவு கணக்குகளைக கூட கர்த்தரே பார்த்துக் கொள்கிறார். பிறகு ஏன் பாவி ஆவி அப்பாவியாகத் தங்களை எப்போதுமே குற்ற உணர்ச்சியுடன் பேராலயத்திற்குள் அழுது புலம்புகிறார்கள் என்று தெரியவில்லை. சர்ச்சுக்குப் பெர் கைதியின் டைரி சர்ச். கமல் இந்தப் படப்பிடிப்புக்காக இதே சர்ச்சில் கலந்து கொண்ட போது பார்த்தது ஞாபகம் வருகிறது. அதுபோலவே பாரதிராஜா ஏன் தொடர்ந்து தனது கதைகளில் கிருத்துவ பின்னணியில் ஒரு கதாபாத்திரத்தையும் காட்சிகளை வைக்கிறார் என்பதும் தெரியவில்லை. பழக்கடையில் அழுகிய பழங்களை நல்ல பழங்களுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி. ஐந்தாறு குருவிகள் தனது உறவுகளை பஸ் ஏற்றிவிடுவதற்காக போலீசாரின் தடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு சத்தியமங்கலம் போகும் பேருந்தையே பார்த்துக் கொண்டிருக்கிறது. நடை மேம்பாலத்தில் துறவிகள் ஒப்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார் பத்துமணி ஆபிசுக்கு தயாராகிறார்கள். பட்டுப்பாவாடைகள் சரசரக்க நடக்கும் சிறுமிகளை அநிநாயத்திற்கு தரதரவென்று இழுத்துக் கொண்டு பரபரக்கிறார்கள் அம்மாக்கள் சிலர் மல்லிகையின் மணமும் அப்பெண்ணின் சங்கீதமும்.அந்தப்பகுதியை கச்சேரியாக மாற்றுகிறது. மணம் செத்துப் போய்விட்ட 24 ரூபாய் அன்னபுர்ணாவின் காபியின் மனத்தை யாரேணும் நுகர்கிறார்களா தெரியவில்லை.
ஸ்டார் ஜெராக்சில் ஐம்பது காபிகளை எடுத்துக் கொண்டேன். அதுவே அதிகமோ எனத்தோன்றியது. இருப்பினும் நவீன இலக்கியத்தைக் கேட்க முப்பது லட்சம் மக்கள் வசிக்கும் கோவையில் ஒரு ஐம்பது பேர்கள் கூட வராமலா போய் விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் எடுத்தேன். அரங்கின் வாசலில்  அமைப்பாளர்கள் வரவேற்றார்கள். இன்னொரு முக்கிய மான அமைப்பாளர் சூரிய நாராயணன் அவர்களைப் பார்க்க முடியவில்லை. விழா துவங்கி யிருக்கவில்லை. எங்கும் குறித்த நேரத்திற்குள் செல்லும் நான் அரை மணி தாமதம் ஆனது வருத்தமே. அரங்கில் புவியரசு, ராஜன்குறை, பொன்சந்திரன், கோணங்கள் ஆனந்த், கால சுப்பிர மணியன், துரை போன்ற முக்கியமானவர்கள் வந்திருந்தார்கள். சு.இந்திரஜித் அக்கினி புத்திரனுடன் பார்வையாளர்கள் வரிசையில்  அமர்ந்திருந்தார்கள்.கோவையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்த்தப்படும் கலை இலக்கியம் கலாச்சாரப் பண்பாட்டு அம்சங்கள் குறித்த கருத்தரங்குகளை நடத்தி வரும் அருவி அமைப்பு இந்த முறை எட்டாம் நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது. ஓட்டல் இடம் மரங்களும் விசாலமான செடிகொடி மலர்கள் நிறைந்த சிறு வனம் போலிருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கேரள மழைசீசனும் கோவை மாநகரை குளிரும் மந்த மேகமுமாக ஆக்கியிருக்கிறது. இந்தப் புகை மூட்டத்திற்கு யாரும் வெளியில் எழுந்து வருவதற்கே சங்கடம் கொள்வார்க்ள. இலக்கியக் கூட்டத்திற்கு வந்தால் அதிசயம்தான் ஆயினும் தவறாமல் கூட்ட அரங்குகளுக்கு வருகின்ற கலை இலக்கிய ஆர்வலர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் பங்களிப்பால்தான் தொடர்ந்து சீனிவாசன், சூரிய நாராயணன், நை.ச.சுரேஷ்குமார் போன்றவர்களால் தொடர்ந்து நடத்த முடிகிறது. இந்த முறை அவர்கள் மிக விரிவான அளவில் எட்டாம் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்  ஏற்கெனவே அருவி முன்னின்று நடத்திய அரங்குகள் தனித்துவமும் முக்கித்துவம் கொண்ட அரங்குகளாகப் பதிவாகி வருகின்றது கோவை மாநகரில்.
             
இந்நிகழ்வில் சுரேஷ்குமார இந்திரஜித் பங்கு கொண்டு புனைவின் மொழிதலைப்பில் உரையாற்ற இருந்தது தமிழ்சூழலி்ல் விரிவான அளவில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்தாக்கமாக இருக்கிற ஒன்று.நவீன பின் நவீன இலக்கியம் மற்றும் புனைவு- எழுத்து இயக்கம் என்கிற அளவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் சு.இந்திரஜித். அவர் வருகை தருவது கோவை சார்ந்த நவீன இலக்கிய படைப்பாளர்கள்- வாசகர்களுக்கு மிக முக்கியமான அரங்காகத் தோன்றியது.
 இந்த முறை பங்கேற்பாளர்களின் வசதி கருதி ஓட்டல் தமிழ்நாடு அரங்கில் நடைபெற்றது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எப்போதும் பரபரப்பு நிறைந்திருக்கும் கோவையின் இருதயமான காந்திபுரத்தின்  பேருந்து நிலையத் திற்கு அருகிலேயே அரங்கு இருந்ததால் பங்கேற்பாளர்களுக்கு  மிகுந்த வசதியாக இருந்தது. 
அரங்கின் வாசலில்  அமைப்பாளர்கள் வரவேற்றார்கள்.  அரங்கில் புவியரசு, ராஜன்குறை, பொன்சந்திரன், கோணங்கள் ஆனந்த், கால சுப்பிரமணியன், துரை போன்ற முக்கியமான வர்கள் வந்திருந்தார்கள். சு.இந்திரஜித் அக்கினி புத்திரனுடன் பார்வையாளர்கள் வரிசையில்  அமர்ந்திருந்தார்கள். நேரம் ஆக ஆக வழக்கமாக அதே சமயம் இலக்கிய ஆளுமைகள், பேராசிரியர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் என்று அரங்கம் நிறைய  ஆரம்பித்தது. சுரேஷ் குமார இந்திரஜி்த் பற்றிய அறிமுகத்தை அமைப்பாளர் சீனிவாசன் வாசித்தார்.சுரேஷ்குமார இந்திரஜித் உரைக்கு முன்பாக யுகமாயினி சித்தன் அவருடைய புனைவின் உரையாடல் என்னும் சிறுகதையை வாசித்தார். அந்த உரையின் நகல் பிரதியை அச்சிட்டு பங்கேற்பாளர்களுக்கு தரப்பட்டிருந்தது. அதை வாசிக்கும் முன்பாக 85 வாக்கில் முக்கியமான சிறுகதையாளர் என்று தேவகோட்டை வா மூர்த்தி, தீபம் இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து வாசித்தார். தெளிவான உச்சரிப்பில் ஒரு கதையை வாசிப்பது அரங்கிற்குப் புதிய விசயம்தான். பிறகு பல ஆண்டுகள் கழித்து இப்போதுதான் சுரேஷை சந்திக்கிறேன் என்றார்.இந்தக் கதையின் இறுதி உரையாடலான நான் சொன்னது அனைத்தும் உண்மை அல்ல புனைவு என்பதும். மாறாக உண்மையை சொல்லிவிட்டு புனைவு என்கிறீர்கள்என்கிற மேற்கோள்களை சற்று அழுத்தமாகக் குறிப்பிட்ட சித்தன் இப்போது சுரேஷ் குமார இந்திரஜித் நம்மிடையே உரையாற்றுவார் என்றார். தன்னுடைய புனைவின் மொழி குறித்த உரையைத் துவக்கிய சு.இ. தனது புனைவிற்கு ஆதாரமாக இரு மகாபாரதக் கிளைக் கதைகளை உதாரணம் காட்டினார். கௌசிக முனிவர்  தவத்தில் இருக்கும் போது மரத்திலிருந்த கொக்கு ஒன்று தன்மீது எச்சமிட்டதால் கோபமுற்றவர் கொக்கைப் பார்க்க அக்கொக்கு எரிந்து சாம்பலாவதான வியாசரின் புனைவு முக்கியமான ஒன்று. அதே போல முனிவர் ஊருக்குள் சென்று கொண்டிருந்த போது எதேச்சையாக பெண் தன் முறத்தால் தானியங்கள் புடைத்துக் கொண்டிருந்த போது அவர் மீது விழப் போக கோபமுற்ற துறவி அப்பெண்ணை எரித்துவிடுவது மாதிரிப் பார்க்க அப்பெண் கௌசிக முனிவரைப் பார்த்து எரிந்து போக எனைக் கொக்கென நினைத்தாயோ என்று கேட்பது மாதிரியான ஒரு புனைவை உதாரணப் படுத்தினார்.  பிறகு ஒரு முதலை ஒன்று அதன் உடலில் பாதி தங்கமும் பாதி சாதாரண உடல் கொண்ட வினோத உருவத்துடன் இருக்கும் அம்மிருகம் தர்மரின் அரண்மனைக்குள் நுழைகிறது. அங்கு ராமருக்கான பட்டாபிசேக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடு மய மண்டபத்தில் நுழைந்த அது தர்மரைப் பார்த்து கேட்கிறது. இங்கு ஏதோ தர்மப்படி சில காரியங்கள் நடைபெறுகிறது.இங்கு வந்து புரண்டால் என்னுடைய பாதி உடல் தங்கமாகும் என்று வந்து புரள்கிறேன். ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறது. தர்மம் தன்னுடைய செயல்களை உணர்ந்து கொண்டு தன்னையே நொந்து கொள்கிறார். பிறகு அவர் அந்த முதலையிடம் உன் உடல் தர்மத்தால் தங்கமானதாக சொன்னாயே அது எவ்விடம் என்று கேட்க அதற்கு அம்முதலை இப்படியே போனால் அங்கு கசாப்புக் கடைக்காரன் ஒருவன் இருக்கிறான் அவனிடம் தர்மம் இருக்கிறது போய்ப் பெற்றுக் கொள் என்று பேசுகிறது. இதில் உள்ள புனைவின் சாத்தியத்தை உணர்ந்து கொள்ளலாம். 


    
புனைவு-எதார்த்தம்-மனம் சிந்தனை குறித்த நீண்ட உரை சிறப்பாகவே இருந்தது.  அர்ஜென்டினாவில் இருந்த படியே தனது புனைவுகளின் மூலமாக இந்தியாவின் பகுதிகள் குறித்த சிறுகதையை போர்ஹே எழுதியைக் குறிப்பிட்டார் மார்க்வெஸ், புதுமைப்பித்தன், வண்ணநிலவன் போன்றவர்களின் புனைவின் மொழியைக் குறிப்பிட்டார். பாம்புப்பிடாரன் எனும் புனைவின் வழியாக சமூகத்தை விமர்சனம் செய்யும் உத்தியும் புனைவின் சாத்தியம் என்றார். மாபெரும் சூதாட்டம் கதையின் புனைவில் இருக்கும் மர்மம் பற்றியும் பேசினார். 
வியாசரின் மகாபாரதம் வெறும் புராணக் கதையாடல்கள் மட்டுமின்றி தமிழக மற்றும் இந்திய நாட்டார் கதைகளின் மிகப்பெரும் தொகுப்பு. இக்காப்பியத்தில் மையத்தில் ஏராளமான கிளைக்கதைகள் உண்டு. அக்கதைகள் எல்லாம் வாழ்க்கையின் நெறிகளைச் சொல்லவும் பண்பாட்டுச் சித்திரத்தை விளக்கவும் உருவாக்கப்பட்ட உன்னதமான புனைவுகள் ஆகும்.

தமிழகத்தில் ஆறு கோடி மக்கள் இருக்கின்றனர் என்றால் அவர்களுக்குள் ஆறு கோடி மனம் இருக்கிறது என்று அர்த்தம்.அவை தனக்குத் தானே சுயமாகச் சிந்தித்து சுதந்திரமாக செயல்படுகிறது மனித மனம் எப்போதும் ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக நேர் கோட்டில் சிந்திப்பதில்லை. 
அது தன்வயப்பாடாமல் அதன் தனது சுயமான போக்கில்  இயங்குகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் பல விசயங்களையும் கூர்ந்து கவனித்தால் பல புனைவுசார்ந்த நிகழ்வுகளை அறிய முடியும். அப்படியே நாம் கதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ எழுத முடியாது அதைப் புனைவாக மாற்றும் போதுதான் கதைக்கான கலைத்தன்மை கிடைக்கிறது. புனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் படைப்பாளர்கள் தன் அனுபவத்தை அதன் வழியாக புனைவாக மாற்றும் போது இலக்கியமாகிறது. மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகள் யாவும் புனைவின் மொழி காரணமாகவே அது காலத்தால் அழிக்க முடியாத படைப்பாக மாறியிருப்பதை நாம் வாசிப்பின் மூலமாக உணரமுடியும்.உதாரணமாக நானும் எனது மனைவி மகன்கள் எல்லோரும் கோவிலுக்குப் போகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அங்கு பார்க்கும் ஒரு காட்சியைப் பார்க்கிறார்கள் எனது மகன் எழுதினால் அங்குள்ள கோவிலின் அழகைப்பற்றியும் யுவதிகள் பற்றியும் எழுதுவார்கள். அதே காட்சியை எனது மனைவி எழுதினால் அங்கிருக்கும் பெண்கள் அணிந்திருக்கும் அணிகலன்கள் சம்பந்தமாக கதையை எழுதலாம். ஆனால் நான் எழுதினால் அந்தக் கோயிலின் வாசலில் பிச்சையெடுத்து க்கொண்டிருக்கும் பெண்ணின் இருக்கும் காயத்தின் தழும்பிலிருந்து கதையைத் தொடங்கி எழுதுவேன். ஒவ்வொருவரும் தான் காணும் சம்பவங்களிலிருந்து தனக்குப் பிடித்த காட்சியை புனைவாக மாற்றுகிறார்கள்.


ஒரு சீட்டாடுகிறவன் ஒருவனே மாறி மாறி அமர்ந்து விளையாடும் போது அந்தந்த இடத்திற்குத் தகுந்தமாதிரி வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் திணறுவதாக கதையை முடித்திருப்பேன். வேறொரு கதையில் கதைக்குள்ளாகவே நான் எழுதிய கதையின் தொடர்ச்சியும் அது சார்ந்த உரையாடலும் வரும். ஒரு வகுப்பறையில் பாடம் படிக்கும் மாணவன் அங்கிருந்த படியே மெரினா பீச்சுக்குப் போய்விட்ட வந்துவிடமுடியும். நீங்கள் இங்கிருக்கீர்கள். உங்கள் மனம் இந்த நிகழ்ச்சியை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்று உறுதியாகக் கூறமுடியாது. உங்கள் மனம் வேறு வேறு சிந்தனைகளில் உழன்றபடியிருக்கும். உங்களால் செய்ய வேண்டிய பணிகள் குடும்பப் பிரச்சனைகள் பற்றியே இதனூடாக யோசித்தபடியேதான் இந்நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு முறை சுந்தரராமசாமி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஏதேச்சையாக அவர் சொன்னது. என்னை ஆச்சரியப்படவைத்தது. 


அவருடைய புகழ்பெற்ற நாவலான ஜே ஜே சில குறிப்புகளை எழுத முனைந்தது வேறு சம்பவம் ஆனால் கதைக்குள் ஜேம்ஸ் நுழைந்ததும் அவன் தன்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டான் புனைவிற்கு அப்படியொரு அசாத்தியமான சக்தி உண்டு எனக்குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.
           
சாதரண நிகழ்வுகள் பற்றிய சம்பவங்களைக் குறித்துப் பேசும் போது கதைகளில் இந்தப் போக்கினை புனைவாக மாற்றுகிறோம். கண்ட காட்சிகளை அப்படியே எழுதுவது ஒரு ரிப்போர்ட்டாகத்தான் இருக்குமே தவிர புனைவாக மாற்றும் போதுதான் ஒரு முழுமையான புதுமையான வடிவம் கிடைக்கிறது என்றார். ஒரு காட்சியை ஒவ்வொரு எழுத்தாளர்கள் ஒவ்வொரு மாதிரியான கோணத்தில் எழுதுகிறார்கள். மற்றும் பிரமிளின் புகழ்பெற்று மேற்கோள் ஒரு குருவி பறந்து செல்லும் பாதையையும் ஞானிகளின் ஞான பாதையையும் வரைந்து காட்ட முடியாது. புனைவு மொழியும் அப்படித்தான் என்று தொடர்ந்த அவர் புனைவின் மொழியால் ஒரு கதையை சம்பவத்தைப் பல வடிவங்களில் எழுதிப்பார்க்க முடியும். என்றார்.  ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் தத்துவங்கள் சித்தாந்தங்கள் கோட்பாடுகளின் அடிப்படையில் எழுதப் படுவதை ஏற்க முடியாது. அப்படி எழுதுவதற்கு முன்பாக சொல்லிவிட்டு எழுதுவது என்பதும் சரியாகாது. எழுதிய பின்புதான் ஒரு  வடிவம் கிடைக்குமே தவிர இந்த இசத்திற்காக எழுதுகிறேன். இந்தக் கோட்பாட்டின்படி இப்படைப்பை எழுதியிருக்கிறேன் என்பதை ஏற்க முடியாது.         
ஜென் தத்துவ மரபுகளின் சாராம்சமும் இந்த வடிவிலேயே அமைந்திருப்பதைக் காணலாம். மாறாக ஒரு சிலர் தாம் இந்த இசத்திற்காக இந்தக் கோட்பாட்டிற்காக எழுதுகிறேன் எனச் சொல்லிக் கொள்வது ஒரு மோஸ்தராகவோ பாவனையாகத்தான் இருக்கும் என்றார்.

சு.வேணுகோபால் அந்த உரைக்குப் பின்பான வெற்று மௌனத்தை நீடித்த உரையாடலாக மாற்றினார். அவருடைய மூன்று கதைகள் பற்றிப் பேசி அவரிடம் விளக்கம் கேட்டார். அவருடைய கதைகள் வாசிக்கின்ற போது தமக்கு வேறு சிந்தனை வந்தது. ஆயினும் சுரேஷ் விவரித்தபோது உண்மையில் சிறப்பாகத்தான் இருக்கிறது. தன்னால் தம்மிடம் உள்ள ஒரு உணர்ச்சி பூர்வமான சிங்கப்பூர் சம்பவத்தை வைத்து ஒரு கதையை எழுத முயற்சி செய்வதாகவும் ஆனாலும் சிங்கப்பூர் போகாமல் தம்மால் அக்கதையை எழுதமுடியாது என்று தோன்றுகிறது. தாம் சமீபத்தில் கல்கத்தா சென்றதைக் குறிப்பிட்ட சு.வே.அந்த நகரத்தில் இருக்கும் வினோதமான காட்சிகளை விவரித்தார். வெளி பஜாரில் மக்கள் சாலையிலேயே சேவிங் செய்வதும் குளிப்பதுமாக இருக்கிறார்கள். சில இடங்களில் மக்கள் மிகுந்த குட்டை குட்டையாக இருக்கிறார்கள். அந்தந்த மண்ணின் காரணமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. மம்தா பானர்ஜி, பிரணாப் முகர்ஜி குட்டையாக இருப்பதின் காரணம் அப்போதுதான் புரிய வந்தது என்றார்.

ராஜன் குறை உரையாடலின் போது “ரூபாய் நோட்டு மீது நாம் ஒண்ணுக்கு அடிக்க வில்லை..அது நம் மீது ஒண்ணுக்கு அடிக்கிறதுஎன்கிற சுரேஷ்குமார இந்திரஜித்தின் சொற்றொடரை ஞாபகப் படுத்தினார். பிறகு புனைவு ஒரு படைப்பின் வலிமைக்கு எந்தளவிற்கு உதவுகிறது. நீங்கள் புனைவிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று கேட்டார். பதிலாக அவர் நான் முழுக்க புனைவிற்கு இடம் தந்து எழுதுகிறேன்.மற்ற எழுத்தாளர்கள் தங்கள் படைப்பின் இயல்பிற்கு ஏற்ப அவ்வப்போது புனைவை உருவாக்குகிறார்கள்.


புவியரசு தன்னுடைய உரையில் சுரேஷ்குமார இந்திரஜித் புனைவு-மனம் பற்றிய உதாரணங்களுக்கு மகாபாரதக் கிளைக் கதைகளை வைத்துப் பேசியது தனக்கு ஆச்சர்யமாக இருந்ததைக் குறிப்பிட்டார்.கதைகளை மேலும் ஒரு முறை விவரிக்கக் கேட்டுக் கொண்டார். தனது மூன்று ஆண்டுகள் கரமசேவ் சகோதரர்கள் நாவல் மொழிபெயர்ப்புக்காக எழுதி தன் கட்டைவிரல் அப்படியே நின்று போனதும் மனம் எழுதத் தூண்ட ஆயினும் விரல் ஒத்துழைக்க மறுக்கிறது என்றார்.புனைவுகள் கதைகளுக்குள் நிகழ்த்தும் அற்புதங்களை பிரமிப்பு கொள்ள வைக்கிறது. இன்னும் கூட கோணங்கி போன்றவர்கள் எழுதுவதும் சாகசமாகத்தான் இருக்கிறது அவரைக்கூட ஒரு முறை வரவழைத்து இதுபோல உரையாடவேண்டும் என்கிற ஆவலை முன் வைத்தார்.

அக்னி புத்திரன் தன்னுடைய உரையில் நாம் இதுவரை யிலும் வாசிக்காத பிரதிகளே இல்லை அத்தனை வகையான உலக இலக்கிய மேதைகளிலிருந்து தற்போது எழுதுகிறவர்கள் வரை வாசித்து விட்டோம். அவையெல்லாம் ஒரு கோட்பாடு சித்தாந்தம் சார்ந்து தான் எழுதப் பட்டிருக்கிறதே தவிர சுரேஷ் சொல்வது போல இல்லை. ஏன் அவருடைய கதையான மாபெரும் சூதாட்டம் கதையில் தனக்குத்தானே எதிரெதிரில் அமர்நது கொண்டு சீட்டாடுகிற போதே அவர் கோட்பாட்டையும் தத்துவத்தையும் ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று பொருளாகிறது. சில சமயம் பேருந்துக்கு காத்துக்கொண்டிருப்போம் நாம் போகவேண்டிய வண்டி வராமல் எப்போது காத்துக்கொண்டிருந்த வண்டி வரும். நாம் கோபத்துடன் நின்று கொண்டிருப்போம்.ஆனால் அங்கிருப்பவர்கள் அந்தச்சூழலில் வேறு காரியம் செய்துகொண்டிருப்பார்கள். கேட்டால் ஒவ்வொரு நியாயம் சொல்வார்கள்.அதைப் போலிருக்கிறது இவர் சொல்வது என்றார்.
பிறகு அதற்கு எதிராக நிலையை நியாயப்படுத்துவது புதிராக உள்ளது. சுரேஷ் குமார இந்திரஜித் ஏன் தேங்கிப் போய்விட்டார் என்பது இந்தக் காரணமாகக் கூட இருக்கலாம் அவர் இது பற்றி சற்று விளக்கினால் சரியாக இருக்கும் என்றார். பதிலுரைத்த சு.இந்திரஜித் இந்தக் கேள்விக்கான பதிலை பங்கேற்பாளர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன் என்றார். 
புனைவு ஒரு படைப்பின் கலையம்சத்திற்கு எப்படி உதவுகிறது. கலைக்கு புனைவு அவசியமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்  புனைவு கலைக்கு மிக அவசியம் கலையின் நுட்பமான அம்சத்திற்கு புனைவை முக்கியமான எல்லாப் படைப் பாளர்களும் பயண்படுத்தி யிருக்கிறார்கள் என்றார்.
            
நவீன பின் நவீன எழுத்தில் முக்கியமான இடத்தைக் கொண்டிருப்பவரும் தற்போது காலச்சுவடு உயிர்மை இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்ற சு இந்திரஜித் தன் உரையினை 30 நிமிடங்களுக்குள் சுருக்கிக்கொண்டது பங்கேற்பாளர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. புனைவு அம்சங்களை தற்காலத்தில் எப்படிப் பயண்படுத்துகிறார்கள். புனைவு மற்ற இலக்கிய வகைமையில் எப்படிப் பயண்படுத்தப்படுகிறது. தம்மைப் பாதித்த படைப்பாளர்கள். தற்போதைய தனது இலக்கியப் படைப்புகள். குறித்தெல்லாம் அவர் பேசாதது அதிர்ச்சிதான். அவருக்கான முழுமையான அரங்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் தனது உரையை மிகச்சுருக்கமாகத் தயாரித்தது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது பங்கேற்பாளர்களுக்கு. புனைவிலக்கியத்தில் தற்போது சிறப்பாக எழுதுகிறவர்கள் யார். நவீன பின் நவீன இலக்கியத்தில் புனைவின் மொழி எப்படி கையாளப்படுகிறது என்பது பற்றியெல்லாம் அவர் பேசுவார் என்று நினைத்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. தமிழ் நவீன இலக்கிய வகைமையில் புனைவின் பரிணாமம் எந்தஎந்த சூழலில் எந்தந்த படைப்பாளர்கள் தத்தம் படைப்புகளில் கையாண்டார்கள் என்பதை அவர் விவரித்து இருக்கலாம். தற்போது சிறுகதைகளில் புனைவின் சாத்தியத்துடன்  எழுதும் படைப்பாளர்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கலாம்.

ஆயினும் சுரேஷ்குமார இந்திரஜித் உரை பல திறப்புகளைக் கொண்டதாக இருந்தது. பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதின் மூலமாக புனைவு மொழியின் சாத்தியங்களைப் பகிர்ந்து கொண்டார்.


இந்த நிகழ்வில் வாசிக்கப்பட்ட சுரேஷ்குமார இந்திரஜித்தின் “ புனவுகளின் உரையாடல் “ என்ற சிறுகதையின் எழுத்து வடிவம் கீழே தந்துள்ளோம்......


புனைவுகளின் உரையாடல்

சுரேஷ்குமார இந்திரஜித்நானும் நண்பர் கிளாடியஸ் குலோத்துங்கனும், அந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தோம். குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைக்குள் மது அருந்துவதைக் காட்டிலும், உயரமான மொட்டை மாடியில் மது அருந்துவதே பிரியந்தரக்கூடியதாக உள்ளது.

நண்பர் நகரிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் நிர்வாக இயக்குநர். தெருவோரக்கடைகளில் உணவு சாப்பிடுவதும் இதைப்போன்ற இடங்களில் மது அருந்துவதுமே அவருக்கு உண்மையில் பிடிக்கும். ஸ்டார் ஹோட்டலின் உடைமையாளர், இப்படி சாப்பிடுவதிலும் மது அருந்துவதிலும் உள்ள பிரச்சினை காரணமாக அதைத்தவிர்த்துவிடுவது வழக்கம். வெளியூர் என்றால் பிரச்சினை இல்லை. நண்பர் எனக்காக வந்திருந்தார். தவிர புறாத்தோப்பிலுள்ள இந்த ஹோட்டலில் உள்ளவர்களுக்கு அவரைத்தெரியவும் செய்யாது. ஊழியர்களை நிர்வகிப்பதில் அவருக்குள்ள உளவியல் பிரச்சினைகள் பற்றியும் ஆங்கிலோ இந்திய ரிஸப்ஷனிஸ்ட் பெண்ணின் பாவனைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். நான் அவருடன் பேசிக்கொண்டே அடுத்த டேபிளில் எனக்கெதிரே அமர்ந்திருந்த அன்னிய நாட்டுப் பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அறிவான முகம், நிறம் வெள்ளை அல்ல; பளபளக்கும் மாநிறம். தலைமுடி கறுப்பக இருந்தது.அழகாக இருந்தாள்.அவளுக்கு எதிரேஅமர்ந்திருந்த அன்னிய நாட்டு மனிதன் வெள்ளையாக இருந்தான்.

அன்னிய நாட்டு மனிதர்களைச் சந்திக்கும் சூழலில், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரிப்பது என் வழக்கம். நான் படித்துக்கொண்டிருந்த போது, தெலுங்கு டப்பிங் சினிமா பார்க்கச் சென்ற  தியேட்டருக்கருகே இருந்த டீக்கடையில் பார்த்த ஜெர்மனியைச் சேர்ந்த இருவரைப் பற்றி ஏற்கனவே பீஹாரும் ஜாக்குலினும்என்ற சிறுகதையில் எழுதியிருந்தேன். நான் பாரிஸில் இருந்த போது யதேச்சையாக வாங்கிய புத்தகத்தின் ஒரு பகுதியில் நான் அவர்களை அப்போது சந்தித்த விவரம் பற்றி அப்புத்தகத்தின் ஆசிரியகளான அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் ஏற்ப்பட்டதையும், பீஹாரில் கணவரைக் கலவரத்தில் இழந்து அழுது கொண்டிருந்த பெண்ணும் ஜாக்குலின்  என்ற பெயர் கொண்ட அவளும் ஒருவர்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டதையும், அவளைச்சந்திக்கும் வாய்ப்பை ஒரு இழையில் தவற விட்டதையும் அச்சிறுகதையில் நான் குறிப்பிட்டிருந்தேன். வாஇப்பை இழந்துவிட்டது இன்னும் என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது.

நான், நண்பரிடம் எக்ஸ்க்யூஸ் மீ’’ என்று நாடகப் பாணியில் கூறி விட்டு, கை கழுவ செல்வதான பாவனையில் அவ\ர்களைக்கடந்து சென்று, கைகளையும் கழுவிவிட்டு, திரும்பி வரும்போது அவர்கள் டேபிளருகே நின்று சிகரெட்  பற்ற வைத்தேன். அவனையும், அவளையும் பார்த்துப் புன்னகைத்தேன். பிறகு அவனருகே அமர்ந்தேன். அவனைப்பற்றி விசாரித்தேன். அவன் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் ஓவியன் என்றும் கூறினான்.அந்தப் பெண்ணிடம் அவளைப்பற்றி விசாரித்தேன். அவள் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவள் என்றாள். சில வருடங்களுக்கு முன் நான் க்ரையோஜெனிக்ஸ்தொடர்பான கருத்தரங்கில்கலந்து கொள்ள பாரிஸ் வந்தது பற்றி இப்போது ஏதும் கூறவில்லை.                   ( இவ்விஞ்ஞானத்தில் தற்போது எனக்கு நாட்டமில்லை) எனக்கு ஓவியங்கள் பற்றி அதிக அறிவு கிடையாது. அச்சமயத்தில் எனக்கு டாலி என்ற ஓவியர் பெயர் நினைவிற்க்கு வந்தது. அவர், இத்தாலியா, பிரான்ஸா, ஸ்பானிஷா அல்லது வேறு நாட்டவரா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே ஜாக்கிரதையாக டாலி ஓவியங்களைப் பற்றி விசாரித்தேன்.எனக்குத் தெரிந்த சில ஃப்ரெஞ்சு நாவசிரியர்களின் பெயர்களைக்குறிப்பிட்டேன். அவனுக்கு  ஆச்சரியமாக இருந்தது. இதுதான் எனக்குத்தேவை. இந்தியாவில், தமிழ் நாட்டில், மதுரையில் புறாத்தோப்புதெருவிலுள்ள கந்தசாமிக்கோனார் ஹோட்டலின் மொட்டை மாடியில் ஒருவர் வந்து, டாலி ஓவியங்களைப்பற்றி விசாரித்தார் என்றும், ஃஃப்ரெஞ்ச் நாவலாசிரியர்களைப் பற்றிக் குறிப்பிட்டார் என்றும் பேசுவான், எழுதவும் செய்வான். மொராக்கோ நாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு துர்பாக்கிய நிலையில் நான் இருந்தேன்.அவளிடம் மொராக்கொ நாட்டைப் பற்றி விசாரித்தேன். மொராக்கோ நாடு ஃப்ரெஞ்சுக் காலனியாக இருந்து மார்ச் 2, 1956 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது என்றும், இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்றும், அரசர் பெயர் ஹாஸன் II என்றும், பிரதம மந்திரி பெயர் அப்துல் ரஹ்மான் யூசுஃப் என்றும், பார்லி, கோதுமை, பேரீச்சம்பழம் ஆகியவை முக்கியப் பயிர்கள் என்றும் கூறினாள். மொராக்கோ நாட்டின் சரித்திரத்தையும் பூகோளத்தையும் அறிந்தவனாக விடை பெற்று என் நண்பனிடம் மீண்டும் வந்தேன்.

அந்தப் பெண்ணின் வித்தியாசத் தோற்றம், நண்பரையும் கவர்ந்திருக்க வேண்டும். அந்த்ப் பெண்ணைக்குறிப்பிட்டு எந்த நாடு?’ என்று கேட்டார். நான் மொராக்கோ என்றேன் வித்தியாசமாக இருக்கிறாள்  என்றார்.

அடுத்த ரவுண்டுக்குப் போனோம். இந்தச் சந்தர்ப்பத்தில் பீஹாரும் ஜாக்குலினும் சிறுகதை நினைவுக்கு வந்துகொண்டேயிருப்பதற்கான காரணங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் பற்றி அடிக்கடி கதைகளில் வர நேர்வது பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். அத்துடன் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் பற்றி அடிக்கடி கதைகளில் வர நேர்வது பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். நண்பரிடம் இவை பற்றிக் கூறினேன். ‘ வாழ்வில் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் அதிகமானால், கதைகளிலும் அவை வரத்தானே செய்யும் ? மது அருந்தும் சந்தர்ப்பங்கள் க்ரியேட்டிவானவைஎன்றார். நல்ல சாக்கு என்று எடுத்துக்கொள்வதா, நல்ல காரணம் என்று எடுத்துக்கொள்வதா என்று யோசனை ஏற்பட்டது.

சர்வர், ஆர்டர் பண்ணியிருந்த சூடான எலும்புகளற்ற கோழித்துண்டுகளையும், முட்டைப்பொரியலையும் கொண்டு வந்து வைத்தான். நண்பர், ஹோட்டலுக்கு அவர் வாங்கியுள்ள சோஃபாக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். தற்போது, ஹாங்காங்கிலிருக்கும் என் கஸினின் மார்க்கெட்டிங் திறமை பற்றி நானும் கூறினேன். அவருடன் நான் கோவையில் தங்கியிருந்த போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது.

நானும் என் கஸினும், ராபர்ட் என்பவருக்காக மதுவும், கொறிப்பதற்க்கான காரங்கள் மற்றும் சுண்டல் ஆகியவைகளையும் வாங்கி வைத்திருந்தோம். அவர் மாலை ஆறு மணிக்கு வருவதாகக் கூறியிருந்தார். மணி ஆறேகால் ஆகியிருந்தது. ’ நாம் ஆரம்பிப்போம்; அவர் வந்து கலந்து கொள்ளட்டுமே என்றேன். ‘ ’அவரிடம் பிஸினெஸ் பேச வேண்டியிருக்கிறது. அவர் வந்த பின் ஆரம்பித்தால் அவருக்கு முக்கியத்துவம்  கொடுப்பது போல இருக்கும்என்றார் கஸின். அவர் ஆறரை மணிக்கு வந்து அனைவரையும் போல மன்னிப்புக் கேட்டார்.

ஆரம்பமாகியது. சற்று நேரத்திலேயே பிஸினெஸ் படிந்து விட்டது. இனி சற்று இறுக்கமின்றி இருக்கலாம். வந்திருந்தவன் அதிக மதுப் பழக்கம் இல்லாதவன் எனத் தோன்றியது. மது அவனுக்குப் பரவசத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

என் மனைவி மிக அழகானவள்; ஆனால் அவள் இப்போது உயிருடன் இல்லை, தெரியுமா?’ என்றான் ராபர்ட். அவனுக்குப் போதை ஏறிவிட்டது என்ற எண்ணத்தை நானும் கஸினும் ஒருவரையொருவர் பார்த்துப் பரிமாறிக்கொண்டோம்.

நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது அவள் அவள் ஒரு பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். 27c நல்லூர் பஸ்ஸில் அவள் ஏற வேண்டும்.பஸ் ஸ்டாப்பில் தான்…….. சார் ……. எங்கள் காதல் வளர்ந்தது. நாங்கள் இருவரும் ஒரே மதம். ஆனால் அவர்க்கள் பிள்ளை மார். நாங்கள் கவுண்டர். எவ்வளவு கடிதங்கள் ! இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். இரு வீடுகள் எதிர்ப்புகளுக்கிடையே நாங்கள் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம்.முதல் குழந்தை பிறந்ததும் அவர்கள் வீட்டில் உள்ளோர் சேர்ந்து கொண்டார்கள். அதுவரை பயங்கர கஷ்டம். எனக்குச் சரியான வேலை இல்லை. பிரசவச்செலவுக்குக் கையில் காசில்லை. அவள் வீட்டிலுள்ளோர் சேர்ந்த பின்னர் தான் என் கஷ்டம் தீர்ந்தது. இரண்டு குழந்தைகள்…. இரண்டும் பெண் குழந்தைகள். திடீரென்று இருதய நோய் ஏற்பட்டு இந்து போய்விட்டாள் ஸார். இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை எப்படி நான் வளர்த்து திருமணம் செய்து கொடுக்க முடியும். வாழ்க்கை என்பதே கஷ்டம்தான். இப்படி என்னை விட்டுப் போய்விட்டாள். அவளை மறக்க முடியவில்லை. அவள் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள்தான் எனக்கு ஆறுதல் தருகின்றன. ‘

இப்படி ஒரு நிலைமை அவனுக்கு ஏற்பட்டதற்காக நாங்கள் வருந்தினோம். அவனுடைய வெள்ளை மனது எங்களைக் கவர்ந்ததாகக் கூறினோம். பார்ட்டி போதுமென்று முடித்துக் கொண்டோம். ராபர்ட் எழுந்து நின்ற நிலையில் தள்ளாடினான். அவனைப் பத்திரமாகக் காருக்குச் செல்லும்படி கூறினோம். ‘ கூட வரவா என்று கேட்டதற்கு, ’ வர வேண்டாம்என்று கூறி தள்ளாடியபடி  நடந்து சென்றான். நாங்கள் அவன் சென்ற பின்னர் வருத்தங்களைப் பரிமாறிக்கொண்டோம்.

இரண்டு நாட்கள் கழித்து, நானும் என் கஸினும் காரில் சென்று கொண்டிருந்த போது, ராபர்ட்டும், ஒரு பெண்ணும், இரு பெண் குழந்தைகளும் காரிலிருந்து இறங்கி ஒரு ரெஸ்டான்டுக்குள் செல்வதைப் பார்த்தோம். எனக்கும் கஸினுக்கும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு ராபர்ட்டின் கார் டிரைவரை அழைத்தோம். எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு மாதிரியாக அவன் குடும்பத்தைப் பற்றி விசாரித்தோம். அவன், மனைவி, குழந்தைகளுடன் சாப்பிடச் செல்வதாக டிரைவர் கூறினான். மனைவி இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டதாகக் கூறியதற்கு டிரைவர் எங்களை முறைத்து, ’அதுதான் உயிரோடு போராங்களே ஸார்என்றான்.

கஸின் கார் ஓட்டிக்கொண்டு வந்தார்.” ஏன் பொய் சொன்னான்?” என்றார். புனைவு மர்மம் மிகுந்தது என்றேன். கார் சென்று கொண்டிருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தற்போது கிளாடியஸ் குலோத்துங்கனிடம் கூறினேன்.’ ஏன் இப்படிக் கூறினான் ?. என்றார். நான் மவுனமாக இருந்தேன். நண்பர் எழுந்து கை கழுவி வந்தார்,. பேப்பரில் கையைத் துடைத்து விட்டு சிகரெட் பற்ற வைத்தார்.

நடந்த சம்பவமாக நான் கூறியது அனைத்தும் புனைவுஎன்று கூறினேன். நண்பர் சிரெட்டை இழுத்துப் புகையை விட்டார். உண்மையைச் சொல்லிவிட்டுப் புனைவு என்று ஏமாற்றுகிறீர்களா ? “ என்றார். இல்லை ; புனைவை உண்மை போலச் சொன்னேன் என்றேன். நண்பர் மவுனமாக சிரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

மொராக்கோ நாட்டுப் பெண்ணும், ஃப்ரான்ஸ் நாட்டு ஆணும் எங்களிடம் கை குலுக்கி விடை பெற்று மறைந்தார்கள்.

                    ---------------------- முடிவுற்றது --------------------------------

நன்றி : ”மாபெரும் சூதாட்டம்” – சிறுகதைத்தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம்

2 comments:

  1. பதிவு மிக விரிவாகவும் தெளிவாகவும் இருக்கிறது. நன்றி

    ReplyDelete
  2. நீண்ட பதிவு. கதையை தனிப் பதிவாக போட்டிருக்கலாம். விரிவான கருத்துரையில் சில சமயக் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம். அதற்கும் நிகழ்ச்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

    ReplyDelete