ஓவிய மொழி


தனது அம்மாவின் வரையும் பழக்கத்தால் தூண்டப்பட்டுத்தான் ஓவியம் வரையத்தொடங்கினார் ஜெயஸ்ரீ என்கிற மோனிகா. பின்னர் முறையான ஓவியக்கல்வியை சென்னை கவின் கலைக்கல்லூரியிலும், பரோடா மஹாராஜா சாயாஜி ராவ் பல்கலை கழகத்தில் ஓவிய வரலாற்றில் முதுகலை பட்டமும் பெற்றார். இந்திய ஓவிய வரலாறு குறித்து குமுதம் குழுமத்தின் தீராநதியில் ஆழமான கட்டுரைகளை எழுதி வரும் இவர், மொழி வழி ஓவிய வரலாறு மற்றும் ஓவியம் குறித்த ஆழ்ந்த மேலும் சரியான புரிதலுக்கு மிக அருகில் நம்மைக்கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதே அருவியின் தாழ்மையான கருத்து. கோவை காண்டெம்ப்ளேட் ஓவியக்கூடத்தில் 21 ஏப்ரல் 2012 அன்று மாலை, அருவியின் ஏப்ரல் மாத நிகழ்வாக, இந்திய ஓவியத்தில் நவீனத்துவம் என்னும் தலைப்பில் மோனிகா அவர்களால் வழங்கப்பட்ட பல்லூடக விளக்கத்துடனான உரை, ஓவிய மொழிக்கான ஒரு விஸ்த்தாரமான திறப்பாக அமைந்தது.
 


ஓவியம் பார்ப்பது கருத்துப்பரிமாற்றமோ, பார்வையாளனின் உலகத்தை பகிர்ந்துகொள்வதோ அல்ல. நமது கருத்தையோ அல்லது எண்ணத்தையோ ஓவியங்கள் பிரதிபலிக்க வேண்டிய நிர்பந்தங்கள்
எதுவும் இல்லாது இப்படைப்புகள் தன்னுள் பொதிந்துள்ள அனுபவ யதார்த்தங்களை பார்வையாளனுக்கு உணர்த்த யத்தனிப்பவை மட்டுமே. ஓவிய மொழியின் அர்த்தத்தை தேடுவது சிக்கல் நிறைந்ததுதான் என்றாலும் பார்வையாளன் ஒவ்வொருவனும் தனக்கேயான கோணங்களில் அவற்றை புரிந்து கொள்ள முயலும் போது மட்டுமே கலைப்படைப்பின் உயிர்த்திருத்தல் சாத்தியப்படுகிறது. புரியவில்லை என்பது வெறும் உழைப்பின்மையின் வெளிப்பாடு மட்டுமே.


தனது கூர்ந்த நோக்கினூடே ஓவியவெளியை காணும் மோனிகா வழங்கிய உரை உள்ளபடியே நம்மை ஒரு புதிய உலகிற்க்கு இட்டுச்செல்லக்கூடிய சாத்தியங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்தது.

      
       மோனிகாவின் உரை - சாரம்:
  


தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை ஓவியமும் இலக்கியமும் ஒன்றோடென்று தொடர்புடையவையாக இருந்துவந்துள்ளன. ஒரு நல்ல படைப்பிற்கு பின்புலமாக இலக்கியம் மற்றும் நாட்டு நடப்பினைப் பற்றிய அவதானங்கள் மிகவும் அவசியம்.

இங்கு நாம் இரண்டு ஓவியங்களை பார்க்கிறோம்.


ஒன்று: சுதிர் பட்டவர்தன் என்னும் ஓவியரின் யதார்த்த ஓவியம். மற்றொன்று ஓவியர் ஸி.டக்ளஸின் அரூப ஓவியம். ஒரு ஓவியம் புரிவதற்கும் மற்றொன்று புரியாமற்போவதற்கும் காரணங்கள் என்ன? தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள் காண்போருக்கு எளிதில் புரியும்போது அருப ஓவியங்கள் அந்த அளவிற்க்கு புரிபடுவதில்லை. அதற்கு காரணம் என்ன? தத்ரூபமாக வரைவதென்பது நமது பாரம்பரிய ஓவியப்பாணியிலும் கிடையாது.

நமது பாரம்பரிய ஓவியங்களான மினியேச்சர் ஓவியங்களில் முப்பரிமாணம் என்பது கிடையாதுமேற்கில் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் பைபிளின் காட்சிகளை மனித உருவங்களைக் கொண்டு வரைந்தனர். மறுமலர்ச்சி கால ஓவியங்கள் முப்பரிமாணத்துடன் வரையப்பட்டதால் நம்பும்படியாக அமைந்தன. நமது ஓவியப்பாரம்பரியத்தில் முப்பரிமாணம் என்பது கிடையாது. அதற்கு நாம் கதையாடலுக்கு நடுவே முக்கியத்துவம் கொடுக்கவும் இல்லை. மாறாக பல்வேறு வகையான, மரங்கள், பூக்கள், தாவரங்கள், விலங்கினங்கள், புள்ளினங்கள் போன்றவை வரையப்பட்டன


ஆனால், ஐரோப்பிய ஓவியங்களில் முப்பரிமாணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் காணும் மறுமலர்ச்சி காலத்தைச் சார்ந்த ரஃபேலின் (1483-1520) ஓவியங்கள் முப்பரிமாணத்தை தத்ரூபமாகக் காட்டுபவை. Linear perspective முறைப்படி camera obscura[1] என்னும் தத்துவத்தினால் வரையப்பட்ட இவை நமது கண்களுக்கு முன் ஒரு இருபரிமாண வெளியில் ஒரு முப்பரிமாண பிம்பத்தைக் கொண்டு வந்து நிறுத்துவதால் அவை யதார்த்தத்தை தழுவியவையாக தோற்றம் கொள்கின்றன.

இந்தியாவிலும் ரவிவர்மாவின் கால கட்டத்தில் தேசம் என்பதை கட்டுவதற்கான தேவை இருந்தது. தேசத்திற்கான அடையாளத்தை அடைவதற்காக அதற்கான கலாச்சார குறியீடுகளை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் அவர் நமது பாரம்பரிய இதிகாசங்களிலும் பார்ஸி நாடகங்களிலுமிருந்து காட்சிகளை தத்ரூபமாக வரைவதின் மூலம் இந்திய தேசத்திற்கென ஒரு அடையாளத்தை முன்வைத்தார். “இந்திய தேசத்தின் அடையாளத்தை இந்து (Hindoo)” அடையாளமாக மட்டுமே முன் வைக்க முடியுமா என்பது மற்றொரு கேள்வி. அபனீந்திரநாத் தாகூரின் பாரதமாதா ஒவியமும் இத்தகைய ஒரு அடையாளத்தை முன்வைத்ததுதான்.ரவிவர்மாவின்காலக்ஸிஎன்னும் ஓவியம் இதற்கு சான்று.


இந்த ஓவியத்தில் பல்வேறு கலாச்சாரங்களையும் பிராந்தியங்களையும் சேர்ந்த பெண்கள் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் இசைக் கலைஞர்களாக உள்ளனர். இவை ஒரு கீழைத்தேய பார்வை (Oriental outlook)  

கொண்ட காலனியாதிக்கத்தினரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களிலிருந்து பெண்களை வித்தியாசமாகச் சித்தரிக்கக் கூடியவை. நடனப் பெண்கள் (Nautch girls) என்னும் தலைப்பிலமைந்த அவர்களது புகைப்படங்களும் ஓவியங்களும் மூன்றாமுலகப் பெண்களை கிளர்ச்சிக்குறிய காட்சிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடியவை. அத்தகைய காலனீய கற்பனைக்கு மாற்றான தேசிய கற்பனையான ரவிவர்மா ஓவியங்கள் அதற்கேயுரிய விமர்சனப் பார்வையை உருவாக்குகின்றன. அவருடைய தேர்வுகளில் இருந்த சார்புகள், சித்தரிப்புகளில் இருந்த முன்முடிவுகள் தீவிரமாக இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இப்படி உருவாகிய நவீன ஓவியத்திற்கும் நவீனத்துவ ஓவியத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

நவீனமும், நவீனத்துவமும் 
(Modernity and Modernism)நவீனம் என்பது யதார்த்த பிரதிபலிப்பை வலியுறுத்துவது என்று சொல்லலாம். ஐரோப்பிய யதார்த்த வாதம் காலனீய ஆட்சியில் நம்மிடையே வேறூன்றியது. ஐரோப்பாவில் இந்த நவீனமானது நாளடைவில் பல்வேறு கண்டுபிடிப்புகளின் மூலம் வெவ்வேறு வகையான வடிவங்களில் கலை, இலக்கியத்தை கண்டடைந்தது. மறுமலர்ச்சிக்காலம் (Renaissance) முதல் பரோக் (Baroque), ரொகோக்கோ(Rococco) வரை, டாவின்ஸி முதல் லூசியன் ஃப்ராய்ட் வரை தொடர்ந்து பலர் நவீன வெளிப்பாடுகளுக்கு பாதை சமைப்பதை மேற்கொண்டனர் எனலாம். பாடல் வடிவமாகவும், பேச்சு வழக்கிலும் இருந்த இலக்கியங்கள் உரைநடைவடிவம் பெற்றதையும் நவீனத்தின் ஒரு கூறாகக் கூறலாம். மிஷேல் ஃபூக்கோ ஓரிடத்தில் நமது கற்பனை உலகங்களை நம்மை விட்டு விரட்டிய நவீனத்தின் ஒரு முக்கியத் தொடக்கப்புள்ளி உரைநடையும் அதன் விளைவாக உருவான நாவல்களுமென்கிறார். பாரம்பரியத்தை மேற்கொள்வதில் நவீனம் அதிக அக்கறை காட்டியது. யதார்த்தத்தை பிரதிபலிப்பதன் மூலம் உண்மையை நிரூபணமாக்குவதாகக் கருதுகோள் கொண்டது நவீனம். இந்நவீனத்திற்கும் (modernity)  நவீனத்துவத்திற்கும் (modernism) இடையிலான வேறுபாடு மிக முக்கியமானது.


ஐரோப்பாவின் இயந்தியமயமாக்கம் மற்றும் உலகப்போர்களின் தாக்கத்தின் அடிப்படையில் உண்மை, அழகியல் போன்றவற்றின் மேல் தமக்குள்ள கேள்விகளை முன்வைத்து எழுப்பப்பட்ட இயக்கமேநவீனத்துவம்என்பதாகும். யதார்த்தத்தின் மேல் எழுப்பப்பட்ட கேள்விகளாலும், யதார்த்தம் தவிர்த்த மினிமலிஸம், இம்ப்ரஸனிஸம், எக்ஸ்பிரஷனிஸம் மற்றும் டாடாயிஸம் போன்ற இயக்கங்கள் மூலமும் நவீனத்தின் நிர்ணயங்களை முரணுக்குள்ளாக்குவது நவீனத்துவம். டாடாயிஸத்தைச் சார்ந்த மார்ஷல் டுஷாம்ப் ஒரு ஆண்கள் சிறுநீர்கழிப்பானின் மேல் “Mutt” என்று ஒரு பெயரை கையெழுத்திட்டு அதை ஒரு கலைப் பொருளாக அருங்காட்சியகத்தில் வைக்கிறார். இது செவ்வியல் கலை பற்றிய மதிப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது. கீழ்கண்ட இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கிறது.   1. ஓவியம் மற்றும் சிற்பம் என்பதற்கு ஒரு சரியான நிர்ணயிக்கும் அளவுகோல் இல்லாத பட்சத்தில் எது வேண்டுமானாலும் சிற்பமாக்கப்படுகிறது
2. தனது பெயரை கையெழுத்திடுவது மூலம் எந்த ஒரு பொருளும் கலைக்கான அங்கீகாரத்தை பெறுகிறது
இரண்டாவதாக சொல்லப்பட்ட விஷயம் “enlightenment” காலத்திற்கு பிறகு வந்த தனிமனிதவாதத்தை விமர்சிப்பதாக அமைந்தது. ஐரோப்பாவில் 15ம் நூற்றாண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கையெழுத்திடல் இந்தியாவில் கடை பிடிக்கப்படவில்லை. நாம் நமது மினியேச்சர் ஓவியங்களை அவை காங்ரா பள்ளியில் வரையப்பட்டது, மதுபனி பாணியில் வரையப்பட்டது என்று கூறுகிறோமே தவிர நமக்குள்தனிமனிதபடைப்பு என்ற உணர்வு தழைத்தோங்கவில்லை. அவ்வுணர்வு நவீனத்தின் ஒரு முக்கிய கூறாக ஐரோப்பாவில் உருவானதாகும்.
  
இந்தியாவில் நவீனத்துவம் ஐரோப்பாவைக் காட்டிலும் இரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வந்தது என்பது ஓவிய வரலாற்றியலாளர் கீதா கபூரின் கூற்று. ஐரோப்பாவில் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வின் விளைவாகவும் உருவான நவீனத்துவ ஓவியப் பாணிகள் இந்தியாவில் சில இடங்களில் தேசியத்தின் உருவாக்கத்திற்கான குறியீடுகளை உருவாக்குவதும் பல நேரங்களில் வெறும் பாணி என்கிற அளவில் மட்டுமே பின் பற்றப்படுவதாகவும் இருந்தது. நவீனத்துவ இந்திய ஓவியம் பாரம்பரியக் கூறுகளையும் மேற்கத்திய பாணிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் பல்வேறு வடிவங்களைப் பெற்றது. உதாரணத்திற்கு ஆதிமூலம், அக்பர் பதாம்ஸி போன்றோரின் அரூப ஓவியங்களையும், ராஸா, ஜி.ஆர். சந்தோஷ், J.சுவாமிநாதன் போன்றோரின் இறைமையால் உந்துதல் பெற்ற ஓவியங்களையும்,ராமேஷ்வர் புரூட்டா, அனுபம் சூட் போன்றவர்கள் உருவ ஓவியங்களையும் வரைந்தனர்.தமிழ்நாட்டின் பிதாமகர்களாக நாம் குறிப்பிட வேண்டுமென்றால், தேவி பிரசாத் ராய்செளத்ரி (ரோதினைப் பின்பற்றி யதார்த்த சிற்பங்கள் வடித்தவர்), எஸ்.தனபால் (மினிமலிஸத்தை முதன் முதலில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தவர். ஜானகிராமன், நந்தகோபால் போன்றோரின் முன்மாதிரியானவர்) மற்றும் சந்தானராஜ்           
 ( பாயிண்டலிஸப்பாணியில் வரைந்தவர். அந்தோனிதாஸ், அல்போன்ஸோ போன்றோரின் முன்மாதிரி) ஆகியோரைக் கூறலாம்

 
நிறைய ஓவியர்களைப் பற்றியும் அவர்களது பள்ளிகளைப் பற்றியும் நான் பேச நினைத்தாலும் நேரக் குறைவினால் ஒரு சில பெண் ஓவியர்களைப் பற்றிமட்டும் சிறிது விளக்கமாக கூற முற்படுகிறேன்.


பெண்களின் தன்னிலையும் ஓவிய மொழியும்ஆண்கள் பெண்களை ஓவியமாக வரைவதற்கும் பெண்கள் தாங்களே தங்களையும் தங்கள் சூழலையும் ஓவியமாக வரைந்து கொள்வதற்கு ஒரு பெறும் வித்தியாசம் உள்ளது. ஒரு ஆணின் பார்வையில் பெண் பாலின கோட்பாடுகளுக்கிணங்க வெட்கப்படுபவளாகவும் ஒரு இன்பத்திற்குரிய பொருளாகவும் இனங்காணப்பட்டு வரையப்படுகிறாள். பெண்கள் தங்களை வரைந்து கொள்ளும்போது தங்களது வாழ்க்கைக் குறிப்பாகவே கித்தானில் ஓவியங்களை வடிக்கிறார்கள். ஜான் பெர்ஜர் தனது “Ways of Seeing” என்னும் புத்தகத்தில் சொல்கிறார் ஒரு பெண் முகக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் ஓவியத்திற்குதற்பெருமை (vanity)” என்று பெயரிடுகிறார்கள். காரணம் ஆணாதிக்கப் பார்வையில் பெண் என்பவள் ஆணின் ஒரு தனிப்பட்ட சொத்தாகும்போது அவளை பார்த்து மகிழும் உரிமை ஆணுக்கு மட்டுமே தரப்படுகிறது. பெண் தன்னையே பார்த்துக் கொள்வதுகூட ஒரு அத்துமீறலாகவே காணப்படுகிறது.

பெண் ஓவியர்களின் மெக்ஸிகோவைச் சார்ந்த ஃப்ரீடா காலோவும் இந்தியாவின் அம்ரிதா ஷேர்கிலும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவர்கள். இருவருமே தமது சுய சரிதை/ சுய பிரதிமைகளை ஓவியங்களாகத் தீட்டினர்.


        
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓவியரான ஷிண்டி செர்மனைப் போல புஷ்பமாலா தன்னைத்தானே பல்வேறு வேடங்களில் புகைப்படமெடுத்து பரீட்சார்த்தமாக முயற்சிகள் செய்கிறார். சென்னையைச் சார்ந்த ஓவியர் பெனித்தா பெர்சியால் தனது சுய பிம்பங்களை விதைகள், பஞ்சு போன்ற பொருட்களை ஒட்டி உருவாக்குவதால் அவை தொடுதல் அனுபவத்தையும் தருகின்றன. இவர்களிலிருந்து மாறுபட்டவர் ருமன்னா ஹுசைன் மற்றும் நஸ் ரீன் முகமதி போன்ற ஓவியர்கள்


முகமதி கட்டிடக்கலையின்பால் ஈர்க்கப்பட்டு கோட்டோவியங்களை வரைந்தபோது, ருமன்னா பெண்விடுதலை குறித்த படைப்புகளைத் தீட்டினார். மும்பையைச் சார்ந்த நளினி மலானி இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பின்னணியாகக் கொண்ட சதத் ஹஸன் மண்டொவின் டோபா டேக்ஸிங்கை மையமாகக் கொண்ட படைப்பை உருவாக்கினார்(slide:19). தில்லியைச் சார்ந்த ஷில்பா குப்தாவும் சமூகத்திலுள்ள எல்லா வர்க்கத்தினரையும் சென்றடையுமாறு படைப்புகளை உருவாக்குகிறார்.


    கலை கலைக்காகவா/ சமூகத்திற்காகவா?

கலை கலைக்காகவா, கலை சமூகத்திற்காகவா என்ற கேள்வி தொன்று தொட்டு வரக்கூடியது நல்ல இலக்கிய ரசனையுடனும், சமூக பொறுப்புணர்வுடனும் அணுகப்படவேண்டிய கேள்வி இது. ஒரு எழுத்தாளனைப்போல கலைஞனும் தன்னுடைய தற்கால நிகழ்வுகளை பதிவு செய்ய கடமைபட்டிருக்கிறான். மிகவும் மிருதுவான மனம் படைத்த அவன் தனது மொழியில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். சோம்நாத் ஹோர், ஜைனுல் அபீதின், சிட்டோ பிரசாத் போன்ற கலைஞர்கள் மேற்கு வங்கத்தில் நடந்த பெரும் பஞ்சத்தை நேரில் கண்டனர்.


அவர்களது வாழ்நாள் முழுவதும் அத்தகைய காட்சிகளையே ஓவியமாகவும், சிற்பமாகவும் உருவாக்கினர். அத்தகைய தாக்கம் கலைஞனுக்கே உரியதாகும். நமக்கு முன் தலைமுறைகளைப் போலல்லாமல் இப்போதுள்ள தலைமுறை இலக்கியத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டுள்ளது. வீடுகளில் கதை சொல்வது நின்றுவிட்டதோடல்லாமல், வாசிப்புப் பழக்கமும் இன்றைய தலைமுறையினரிடம் இல்லை. நல்ல படைப்புகளை உருவாக்க நல்ல வாசிப்பு அனுபவம் மிகவும் அவசியம். அத்தகையதொரு விழிப்புணர்வை இளைஞர்களிடம் எடுத்துச் செல்ல அருவி போன்ற அமைப்பு முன்வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நான் என்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். 

அழகின் எளிமைஆவணப்படம்.
 


நிகழ்ச்சியின் இறுதியில் எழுத்தாளர் ஆர். சூடாமணியின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட்டது. சூடாமணியின் எழுத்துக்களிலிருந்து பெறப்பட்ட வரிகளைக் கொண்டே அவரது வாழ்க்கையை விளக்கிய இப்படத்தில் அவர் வாழ்ந்த வீடு, அவரது தாயாரின் சிற்பங்கள், அவரது இலக்கிய ஆர்வத்தை வெளிக்காட்டும் அவரது புத்தக அலமாரிகள் ஆகியவற்றுடன் அவரது ஓவியம் குறித்த புத்தகங்களின் சேகரிப்பும் அவர் வரைந்த ஓவியங்களும் இடம் பெற்றன. ஆர். சூடாமணி நினைவு அறக்கட்டளையை சேர்ந்த பேராசிரியர். கே.பாரதி அவர்களின் அழைப்பின் பேரில், அவர்களது தயாரிப்பில் மோனிகா இயக்கி, உருவாக்கியது இப்படம். இப்படம் திரையிடப்பட்டது குறித்த வேறுபட்ட கருத்துகள் நண்பர்களிடையே இருந்தாலும், அத்திரையிடல் மூலம் ஒரு எழுத்தாளர் அவரது எழுத்தினைத்தாண்டி அவரது மனிதம் அதன் அதிசயிக்க வைக்கும் வீச்சு ஆகியன நம்மை கவர்ந்ததை மறுக்க இயலாது.
[1] -linear perspective was a system set up to help create the illusion of three-dimensional space in a two-dimensional format. It originated in the Near East where some nomads noticed that a small pinhole carried an upside-down picture of the outside, in a dark tent, in the middle of the day. This later was used by Renaissance artists in the form of a camera obscura (Latin for black box). Artists would build small dark booths and move them to wherever they wanted to paint, then poke a pinhole in the wall, and copy the scene that was projected upside-down on the wall behind them. The system is based on the idea of a constant horizon line (eye level) where a vanishing point is located. One can anticipate the convergence of parallel lines at the vanishing point.

1 comment:

  1. மோனிகா- நிகழ்ச்சி பற்றிய தங்கள் பதிவு அபாரம். இங்கே அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து கோயமுத்தூருக்கு நேரில் வந்து கல்ந்து கொண்ட நிறைவைத் தந்தது அற்புதமான முயற்சி அதைத் தவைர் வேறு சொற்கள் சொல்லத் தெரியவில்லை

    ReplyDelete