தார்க்கோவ்ஸ்கியின் கலைஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி


திரைப்படக் கலையை முன்னெடுத்து சென்ற மேதைகளில் ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி முக்கியமானவர்.  தனக்கென தனிப் பாணியை உருவாகியவர். ஐஸென்ஸ்டைனைப் போல உலகெங்கும் அறியப்படும் ஒரே ரஷ்ய திரைப்பட மேதை.. இவர் வழியில் இயக்குநர்கள் தொடர்ந்து  உருவாகிக்கொண்டிருப்பது இவரது கலை என்றும் வாழும் என்பதற்கு சாட்சியமாகிறது.1932 ஆம் வருடம் ரஷ்யாவில் மாஸ்கோவின் அருகிலுள்ள ஜவராச்சியில் பிறந்தார். அரசு திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவர் உருவாக்கிய குறும்படங்கள் சிறப்பானவை. தார்க்கோவ்ஸ்கி தனது குறுகிய வாழ்நாளில் உருவாக்கியது ஏழு முழு நீள திரைப்படங்கள் மட்டுமே. அவரது ஏழு திரைப்படங்களும் அமரத்துவ படைப்புகள்; என்றும் புதுமையுடன் பார்பவரை  ஈர்ப்பவை. தார்க்கோவ்ஸ்கி திரைப்படத்தை கவிதையாக (Cinema as poetry) கண்டவர். காலத்தை முன் வைத்து. தனது திரைப்படங்களை உருவாக்கியவர். காலத்தை செதுக்கும் சிற்பியாக தன்னை எடுத்துக்கொண்டார். தனது திரைப்படங்களை பிறர்  அர்த்தப்படுத்தி விளக்குவதை அறவே வெறுத்தார். திரைப்படங்கள் உணரப்பட்டு உள்வாங்கப்பட வேண்டியவை; அறிவு பூர்வமாக  அணுகப்படவேண்டியவை அல்ல என்பதை வற்புறுத்தினார்.  தனது கலையையும்  படைப்பாக்க முறையையும் பிறருக்கு எடுத்துச் சொல்வதற்காக அவர் எழுதிய நூல் ‘Sculpting in Time’.

காட்டுப்பூவின் வாசம்

இருபதாம் நூற்றாண்டில் நாடக உலகை மரபின் வழியே அதன் போக்கை வளப்படுத்தியவர் பேராசிரியர் சே ராமானுஜம். நாடகத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்டு பிரபஞ்ச உணர்வுடன், தீராத தாகத்துடன், இடைவிடாத தேடலுடன் இன்னும் தனது எழுபத்தி ஏழு வயதிலும் ஒரு இருபது வயது இளைஞனின் வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.    
நாடகம் ஒரு சுயமான கலைவடிவம் அது, மற்ற கலைகளுக்குள் உள்ள ஒருமைத்தன்மையை தன்னகத்தே கொண்டது. நிகழ்த்தப்படும் நிலையிலேயே நாடகம் முழுமையான கலை வடிவம் பெருகிறதெனக்கருதுகிறார், இவர். நவீன நாடகத்துக்கான இவரது பங்களிப்பின் தாக்கம் இந்திய நவீன நாடகப்பரப்பில் வரலாற்றுத்தன்மை கொண்டது. இயல்பான கலைஞன் சூழலை முன்வைத்து, நாடக மொழியின் வெளிப்பாட்டுத்தொனி, அழகு, நுட்பம் போன்றவற்றின் தாக்கத்தை மட்டும் முன்னிறுத்தி, நாடகம் பார்வையாளனிடம் ஒரு அதிர்வினை மட்டும் வேண்டி நிற்க்கும் கலைவடிவமாக இவர் நாடக வடிவத்தை முன்வைக்கிறார். கைதட்டல் பெறும் இடத்தில் கலை தனது சுயத்திலிருந்து சருக்குகிறது, என்கிறார் பேராசிரியர்.

சாதாரணமாக, பழமை என்று ஒதுக்கிய வடிவங்களையும், அவற்றின் நுணுக்கங்களையும், அதன் அடி ஆழத்துக்குச்சென்று கிடைத்த புரிதலின் அடிப்படையில், வெளித்தெறியாத மக்களின் வாய் மொழிக்கூத்து, சொல்லாடல்கள், இசை மற்றும் நாட்டியக்கூறுகளைத்திரட்டி, அவற்றின் செழுமையான ஒரு வடிவத்தை மேடையேற்றுவதன் மூலம் அழியும் அந்த கலைவடிவங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு அரிய பணியினை அற்ப்பணிப்புணர்வுடன் செய்துகொண்டிருக்கும் இந்தப்பெரியவர்,  தனது வாழ்வுக்கும் நிகழ்த்துகலைக்குமான இடைவெளியினை இல்லாதாக்கி, நாடகமாகவே வாழ்கிறார். இந்தியாவின் தீவிரமான கலை வடிவங்கள், தொன்மையான நமது நாட்டுப்புறப்பாரம்பரியத்தைக்குறித்த புரிதலுடனே வளர்ந்து வந்திருக்கிறது. நிகழ்த்து கலைகள் அனைத்தும் எழுத்தப்பட்ட அல்லது பாடல் வடிவில் அறியப்படும் சொற்க்கட்டுகளிலிருந்து தனது சுயம்புவான வெளிப்பாட்டினை தொடங்குகிறது. அனுபவங்களின் அரூபமான கவிதையை நாடகம் நிகழ்த்திக்காட்டுகிறது. ஆதிவாசியின் முதல் கவிதைதான் நடனம் என்று கூறிச்செல்கிறார், ராமானுஜம்.