Saturday, 6 August 2011

நிகழ்வு - 2 “பிரமிளின் படைப்புலகம்”- 19 ஜூன் 2011


நிகழ்வின் அறிமுகம்

நிகழ்வின் நினைவுக்காக......

நிகழ்வு 2, மீண்டும் தியாககுமாரின் பயிலகத்தில் 19 ஜூன் 2011 அன்று நடந்தது. இந்நிகழ்வில், ”பிரமிளின் படைப்புலகம்” என்ற தலைப்பில் பிரமிளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திரு கால சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றினார்.  

 

கால.சுப்ரமணியம் அவர்கள் ஈரோடு மாவட்டம் நகலூரில் 27.2.1955-ல் பிறந்தவர். பிரமிள் கவிதைகளை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், தற்போது கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், பத்திரிக்கையாசிரியர்.  மேலே சில பறவைகள் (1995) என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. பிரமிளின் நெருங்கிய நண்பராகவும் ஆய்வாளராகவும் வெளியீட்டாளராகவும் அவரது அனைத்துப் படைப்புகளுக்கும் பிரமிளாலேயே உரிமை வழங்கப் பட்டவராயும் விளங்கும் கால சுப்ரமணியம், தமது லயம் பத்திரிக்கையில் 1985-லிருந்து பிரமிளின் படைப்பியக்கத்திற்குக் களம் அமைத்துத் தந்தார். லயம் வெளியீடுகளாக அவரது நூல்களைப் பதிப்பித்தார். பிரமிளின் மறைவுக்குப் பிறகு, அவரது அனைத்து எழுத்துக்களையும் திரட்டி, 17 நூல் தொகுதிகளாகப் பிரித்துத் தொகுத்துள்ளார். அவற்றில், இதுவரை 11 நூல்கள் வெளிவந்துள்ளன. பிற நூல்கள், விரைவில் வெளிவரவுள்ளன.

பிரமிள் குறித்து…
தருமு சிவராம் என்கிற பிரமீள்

நவீன தமிழ் இலக்கிய உலகில், விமர்சகர் என்னும் தகுதிக்கு உரியவர் பிரமிள் மட்டுமே என்று சொல்லமுடியும். தமிழின் மிக முக்கியமான கவியாக நிலைபெற்ற பிரமிள், சுயமான அவதானங்களிலிருந்து ஆழ்ந்தகன்ற கோட்பாடுகளை வெளிப்படுத்திய விமர்சகராகவும் விளங்கினார். படைப்பாற்றலும் விமர்சன சக்தியும் ஒருங்கே பெற்றவர், புதுமைப்பித்தனுக்குப் பிறகு பிரமிள்தான் என்று சொல்வதில் நிறைய நியாயங்கள் உண்டு. கவிஞராகவும் விமர்சகராகவும் மட்டுமல்லாமல் - ஓவியராக, நாடகாசிரியராக, சிறுகதையாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, விஞ்ஞானக்கட்டுரையாளராக, நியூமராலஜி-ஜோதிடம் போன்றவற்றில் வல்லுநராக, ஆன்மவியலாளராக - பல்திறப் பரிமாணங்கள் கொண்டிருந்தவர் பிரமிள். 
     
இலங்கையின் திருக்கோணமலையில் 20 ஏப்ரல் 1939-ல் பிறந்த தருமு சிவராம், தொடக்கத்தில் ஓவியராகவே தோற்றம்பெற்று, 1960லிருந்து எழுத்து பத்திரிக்கையில், புதுக்கவிதையாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் மலர்ந்தார்; அறுபதுகளின் இறுதி ஆண்டுகளில் தமிழகத்துக்கு வந்தவர், 1997 ஜனவரி 6-ல் மறைந்தார். அவர், 56 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும், அவரது படைப்புகள், தமிழ் இலக்கியத்துக்கு மேன்மையை அளித்தன.


யாழ் (கையெழத்து இதழ்), எழுத்து, மரகதம், தேனருவி, இலங்கை எழுத்தாளன், கசடதபற, அஃக், ஞானரதம், சதங்கை, கொல்லிப்பாவை, பிரக்ஞை, படிமம், லயம், திசைநான்கு, தீட்சண்யம், நிழல், நிகழ் ஆகிய சிறுபத்திரிக்கைகளிலும் வீரகேசரி, தினகரன், விடுதலைப்புலிகள், அரும்பு, பசுமை, தினமணிகதிர், உதயம் ஆகிய ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளிலும் இலக்கிய விமர்சன-விஞ்ஞான-ஆன்மீக-மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளார் பிரமிள். சுமாராக, கவிதை பற்றிய கட்டுரைகள்: 35, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்: 51, சமூகவியல் கட்டுரைகள்: 28, இலக்கிய அரசியல் கட்டுரைகள்: 57, பேட்டிகள்: 13, மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்: 28, விஞ்ஞானக் கட்டுரைகள்: 12, ஆன்மீகக் கட்டுரைகள்: 44 என்று எழுதியுள்ளார். பிரமளின் வாழ்நாளிலேயே அவரது விமரிசன ஊழல்கள், ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை, தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள், சாது ஆப்பாத்துரையின் தியானதாரா, விமர்சனாஸ்ரமம், விமர்சன மீட்சிகள், மீறல்: பிரேமிள் பேட்டி, மார்க்ஸும் மார்க்ஸீயமும் (தமிழாக்கம்) ஆகிய நூல்கள் வெளிவந்தன.  அவரது மறைவுக்குப் பிறகு, அவரது அனைத்து எழுத்துக்களையும் தொகுத்துத்தரும் நோக்கில், வானமற்ற வெளி: கவிதை பற்றிய கட்டுரைகள், பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள், விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள், காலவெளிக் கதை: விஞ்ஞானக் கட்டுரைகள் ஆகிய தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் அவரது விமர்சனக் கட்டுரைகள்  வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், வரலாற்றுச் சலனங்கள்: சமூகவியல் கட்டுரைகள், எதிர்ப்புச் சுவடுகள்: பேட்டிகள், அறைகூவல்: இலக்கிய அரசியல் கட்டுரைகள் என்ற தொகுதிகளாக  வெளிவரவுள்ளன.