அருவியின் முதல் நிகழ்வு - 15 மே 2011
”அருவி” – ஒரு புதிய அமைப்பாக மே மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று (15 05 2011), தன் பயணத்தை உயிர்மெய்யின் நீட்சியாய் தொடர்ந்தது. நண்பரும் இலக்கிய ஆர்வலருமான திரு தியாக குமார் தனது பயிற்சி மையத்தினை நமக்குத்தந்துதவியது, இந்த நிகழ்வை சாத்தியப்படுத்தியது. எங்களை நெகிழ வைத்தது. எதிர் பார்த்தது போலவே கோவையில் உள்ள சுமார் ஐம்பது இலக்கிய ஆர்வலர்களில் அன்று சாவகாசமாக தத்தமது வீடுகளில் லெளகீக கடமைகளை முடித்து விட்டு, எல்லா இலக்கிய நிகழ்வுகளிலும் போல, ஒரு குட்டி வட்டமாக (பதினெட்டு பேர்) கூடி பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு கவிஞர் புவியரசு அவர்கள் முன்னிலையில் சந்திப்பைத்துவக்கினோம். கணக்குப்பித்தன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் தமிழார்வலர் திரு வீரராகவன், நமது அழைப்பை ஏற்று வந்ததோடு அனைவருக்கும் குறிப்பெடுத்துக்கொள்ள ஏதுவாக ஒரு பேனாவும், குறிப்பேடும் தந்து ஆச்சரியப்படுத்தினார். 
சீனு அவர்களின் அறிமுகவுரை
 எங்கள் நிலைப்பாடு, அருவிக்கான இன்றைய அவசியம் மற்றும் எங்களது இலக்குகளும் அதை ஒட்டிய உத்தேசங்களும் செயல்பாடுகளும் அடங்கிய திட்ட நிரலை நண்பர் திரு. ஸ்ரீனிவாசன் வாசித்தார். முதல் அமர்வில், புது எழுத்து ஆசிரியர் திரு மனோன்மணியை, அவரது நீண்டகால இலக்கியப்பயணத்தின் அங்கீகாரமாக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தால் வழங்கப்பட்டுள்ள சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதுக்காக பாராட்டி திரு புவியரசு சுருக்கமாக மனோன்மணியின் பிடிவாதமான இலக்கிய முயற்சிகளுக்கான பாராட்டுக்களையும், புது எழுத்தின் மொழியாக்க முயற்சிகளில் உள்ள வெளிப்படையான சில கவனத்துக்குரிய விஷயங்களாக, புரியாத்தன்மை மற்றும் சில அடிப்படை மொழிமாற்ற சறுக்கல்கள் பற்றிய தனது அய்யங்களையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து திரு மனோன்மணி, தனது ஏற்புறையில், அவரது, தனிமனித செயல்பாடுகள், நேர்ந்துள்ள அவமானங்கள், தேடி கண்டடைந்த ஆச்சரியங்கள், அற்புதமான மனிதர்கள், நண்பர்கள், தனது குடும்பம், மனைவி மற்றும் தனது வீழ்ச்சிகள் என விஸ்தாரமாக தான் செயல்படும் களம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 
மனோன்மணியின் உரை
இதைத்தொடர்ந்து, கலந்துகொண்ட எல்லா நண்பர்களையும் உட்படுத்திய ஒரு கலந்துரையாடலில் பலரது கருத்துக்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன. இந்த பரிமாற்றங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்:


v       திரு ஆனந்த்: கோணங்கள் ஃபிலிம் சொசைட்டியைசார்ந்த இவர்,  தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர். அவர் தனது செயல்பாடுகள் குறித்தும், இது போன்ற ஒரு செயல்பாட்டின் அவசியம் குறித்தும் பேசினார். நேர்பேச்சில், தனது நண்பர் மறைந்த திரு. அஷ்டாவக்ரன் என்னும் ராஜனின் இழப்பு பற்றி பேசியது எளிதில் மறக்கவியலா ஒரு விஷயம்,

v       திரு புவியரசு : நாங்கள் அருவியின் அறிமுகத்தில் கூறியிருந்த ஒத்த கருத்துடைய நண்பர்கள் என்ற சொல்லாக்கம் தேவையற்றது என்றும் வேறுபட்ட கருத்துக்களுடைய நண்பர்கள் என்பதில்தான் ஆரோக்யம் உள்ளதாக தன் கருத்தை பதிவு செய்தார். முக்கியமாக, புதிய நபர்களுக்கு நமது நோக்கங்களை அறிய வைக்கும் முயற்சிகளே ஒரு பரந்த களம் என்கிற கனவினை நனவாக்க உதவும் என்று தெளிவாக தெரிவித்தது ஒரு தந்தையின் அன்பான முரட்டுக்கரங்களை நினைவுபடுத்தின. நாம் தேடிக்கண்டுபிடித்து வெளியில் இருந்து பலரையும் அறிமுகப்படுத்த நினைக்கும் ஆர்வத்தை உள்ளூரில் நமதருகிலேயே, பல துறைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அறிஞர்களை பரிச்சயப்படுத்திகொள்வது இக்காலத்தின் கட்டாயமாகத் தான் பார்ப்பதாகக்கூறியது யோசிக்க வைத்தது. மிக முக்கியமாக, இந்த வகை சந்திப்புகள் மற்றும் பரந்துபட்ட களத்தில் மீண்டும் மீண்டும் நிகழவேண்டிய கலைப்பரிமாற்றங்களின் அவசியத்தையும் அவர் வலியுறித்தினார்.

v       திரு. பொதியவெற்பன் : தற்சமயம், கோவை வாசியாக தனது மகளுடன் வசிக்கும் இவர் மாறாத இளமையுடன் இன்றும் உற்சாகமாக இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டது, நெகிழ்வாகவும், தெளிவாக இன்றும் அவருள் புலப்பட்ட பொறி பொறாமைப்படவும் வைத்தது. அவரது அழுத்தமான கருத்தாக நாம் பதிவு செய்ய நினைப்பது சொல் கதை என்கிற ஒரு பிரிவு தமிழில் பெற வேண்டிய முக்கிய இடம் குறித்ததாகும்.

v       திரு. இசை: கோவை இருகூரை சேர்ந்த இந்த இளங்கவிஞர், தனது அழுத்தமான கருத்தாக, அனைத்து கலைகளையும் இணைக்கும் குவிமையமாக அருவியை கொண்டு செல்ல நினைப்பது ஒரு புதுமையான நோக்கு என்றும் இன்றைய தேவையென்றும் கூறினார்.

v   திரு. இளங்கோ கிருஷ்ணன்: கோவையை சேர்ந்த சமகாலகவிஞரான இவர் தனது கருத்தாக, அருவி போன்ற அமைப்புகள் தமிழகம் முழுவதும் பரவலாக தனித்தனியாக செயல்படுவதைத்தாண்டி ஒருங்கிணைந்த நிகழ்வுகளை நோக்கி நகர்வது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றார்,. தனது இணையச்செயல்பாடுகள் குறித்து பேசுகையில், வலைப்பூக்களில், எழுதும் போது நேரும் அற்புத நட்புக்களின் சாத்தியங்களையும் பூகோள எல்லைகள் தாண்டிய வாசக எதிர்வினைகள் மூலம் சில சமயங்கள் மட்டும் நிகழும் உடனுக்குடனாக வம்புகளற்ற ஆரோக்யமான விவாதங்கள் ஏற்ப்படுத்தும் உற்சாகம் மற்றும் பெரும்பாலும் தொடரும் வம்பளப்புகளால் நேரும் அயர்ச்சியும் ஒருசேர நிகழும் வாய்ப்பு கொஞ்சம் சவாலான விஷயம்தான் என தன் கருத்தை பதிவு செய்தார்.

கலந்து கொண்ட மற்ற நண்பர்கள் திரு. கால சுப்பிரமணியன், திரு. மோஹன ரவிச்சந்திரன், திரு. பொன் இளவேனில், திரு. யாழி, திரு. இளஞ்சேரல், திரு. லக்‌ஷ்மணன், திரு. ஜெயகுமார் மற்றும் நண்பர்களும் கூடி விவாதித்த மணித்துளிகள் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.

எமது பயணத்தின் தொடரும் படியாக வரும் ஜூன் மாதம் 19 ம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் மதியம் வரை இன்னொரு அர்த்தம் செரிந்த கருத்தாய்வில் இளைப்பாறுவோம்.

2 comments:

  1. அருமை. மேலும் பல சுவையான விழாக்கள் , கலந்து உரையாடல்கள் நடக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete