"அருவி" யின் அவசியம்


உயிர்மெய் வாயிலாக எங்கள் இலக்கிய தேடல், 1982 ல், கல்லூரி நாட்களில் தொடங்கியது. எங்கள் சிறு வட்டம், சீனு, சூரி மற்றும் நை. .சுரேஷ்குமார் ஆகிய நண்பர்களின் விடா முயற்ச்சியின் விளைவாக தழைத்தது. முதல் இதழ், ஒரே தாளை நான்காக மடித்த வடிவில் வெளியானது. அச்சமயம், கவிதைகள் என்று எங்களை வந்தடைந்த அறிமுகப்படைப்புகள் பெரும்பாலும், விடுகதைகள், கோஷங்கள் என ஏமாற்றத்தையே தந்தன. நான்காம் இதழிலிருந்து எண்பதுகளில், இலக்கியத்தடத்தில் பரவலாக அறியப்பட்ட படைப்பாளிகளின் கவிதைகள், ஒரு வெளியீட்டுத்தன்மையுடன் பிரசுரிக்கப்பட்டன. ஆறாம் இதழ் முதல் எட்டாம் இதழ் வரை நமக்குப்பழக்கப்பட்ட வடிவத்தில் உயிர்மெய் வெளியீடுகள் தொடர்ந்து வந்தபின் சிற்றிதழுக்கேயான சாபக்கேடாக தன் பயணத்தை நிறுத்திக்கொண்டது. எங்களின் தேடலை முறையாக திரு வல்லிக்கண்ணன் அவர்கள், தனது புதுக்கவிதை- தோற்றமும் வளர்ச்சியும் என்கிற நூலில் பதிவு செய்துள்ளார்.

எங்கள் லெளகீக நிர்பந்தங்களின் அழுத்தத்திலிருந்து ஓரளவு வெளிவந்துள்ள இன்றைய சூழலில், முந்தைய தேடலின் நீட்சியாக ஒரு புதிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துள்ளோம். இத்தாக்கத்தின் உருவாக்கமேஅருவிகலை என்பது மனித வளர்ச்சி வரலாற்றில் கிடைத்து விட்ட இடை விளை பொருள் அல்ல. மாறாக மனித இனம், மனித இனமாக வளர்ந்துவந்ததற்க்கான அத்தாட்சியாகும். கலை என்பது சமுதாயத்தில் ஒரு சிறிய பிரிவினருக்காகவே இருப்பது என்பது அபாயகரமானது.
                                                                                                             - ஜோசப் ப்ராட்ஸ்கி

அனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித ஒருங்கிணைப்பை உணர இயலும். உதாரணமாக, இசைக்கு சுதந்திரமும் பரப்பும் அதிகம். ஒவியத்திற்க்கு சொல்லவே வேண்டியதில்லை, அது முடிவற்ற சிந்தனையை விரித்துச்செல்லும். இவற்றையெல்லாம் எழுத்தில் ஒருமைப்படுத்தும் சாத்தியம் அரிதாகவே தென்படுகிறது. ஒட்டுமொத்த கலைகளில் நம் அனுபவ வெளிப்பாடுகளின் தேடல் எப்பொழுதும் நமக்குப்புலப்படாத ஒரு பேருண்மையை நோக்கிப்பயணிப்பவையே…. ஒவ்வொரு தனி மனிதனின் தேடலும் மற்றவர்களின் அனுபவத்தை அறிவதிலும் பகிர்வதிலும் தானே உள்ளது.

இந்த பகிர்தலை முன்னிலைப்படுத்தி, ஒத்த கருத்துள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து இனி தொடரப்போகும் நம் பயணம் குறித்த ஆலோசனைகளையும், ஆக்க பூர்வமான எல்லா கலை முயற்சிகளையும் விவாதிக்கும் ஒரு களமாக செயல்படுதல் குறித்தும் கருத்து வேறுபாடுகள் கசப்பற்ற முறையில் பதிவு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த நிகழ்வின் மூலமாக முடிவு செய்து, அருவி யின் எதிர்கால செயல்பாடுகளை தீர்மானிக்க, விழைகிறோம்.

அருவியின் செயல்பாடுகளாக நாங்கள் உத்தேசித்துள்ளவை:

v     படைப்பாளி சந்திப்பு
v     படைப்பைப்பற்றிய வாசக அனுபவ பகிர்வுகள்
v     புத்தகம் மற்றும் கவிதை வாசிப்பு
v     புத்தக பரிமாற்றம்
v     குழந்தைகளுக்கு கதை சொல்லல்
v அனைத்து கலை வடிவங்களின் கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் நேர்காணல்.அவர்கள் எங்கும் போய் சேர்ந்து விடவில்லை
ஆனால் எங்கோ போயிருந்தார்கள்.
நீ போய்க்கொண்டிருக்கும் போதும்
கேட்டேன் எங்கென்று
தெரியவில்லை, போகிறேன் என்றாய்.

புரியும் தினம்
எனக்கும் வரலாயிற்று.
நின்று கொண்டிருப்பதை விட
சென்று கொண்டிருக்கலாம் 
                          - கல்யாண்ஜி
                                     .

3 comments:

  1. ஆக்கபூர்வமான சமூகத்திற்க்கு பயனுள்ள செயல். வாழ்த்துக்கள் நண்பா! உங்கள் ஊரில் என்று மட்டுமல்லாது தமிழகம் முழுதும் விரிவு படுத்த வேண்டும். குழந்தைகளை வாசிப்பு அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். அவர்கள் வளரும் பள்ளி மற்றும் வீட்டு சூழல் வாசிப்புக்கு எதிராகவே உள்ளது.

    ReplyDelete
  2. நல்ல விஷயம்... வாழ்த்துகள்... உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete